சீனா- இந்தியா எல்லை பதற்றம்: வலம் வரும் போலிச் செய்திகளும் அதன் உண்மைத்தன்மையும்

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA
- எழுதியவர், ஷ்ருதி மேனன் மற்றும் உபாசனா பட்
- பதவி, பிபிசி ரியாலிட்டி செக்
கடந்த ஜுன் மாதம் 20 இந்திய ராணுவ வீரர்கள் எல்லையில் கொல்லப்பட்ட பிறகு இந்தியா சீனா இடையேயான பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.
தங்களது படைகளை பின்வாங்குவது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தும் வேலையில், பல தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அதில் சிலவற்றின் உண்மைத்தன்மை குறித்து பிபிசி ஆராய்ந்தது.
கூற்று: திருப்பி அனுப்பப்பட்ட சீன ராணுவ வீரர்கள் அழுது கொண்டே திரும்பினார்கள்
உண்மை: தவறான கருத்துகளை வைத்து பகிரப்பட்ட தவறான காணொளி
தைவான் நாட்டு ஊடகங்கள் செப்டம்பர் மாதம் வெளியிட்ட காணொளி, டிவிட்டரில் பகிரப்பட, அது இந்தியாவில் வைரலானது.
இந்தியாவில் இருந்து எல்லைக்கு திருப்பி அனுப்பப்பட்ட சீன ராணுவ வீரர்கள் அழுதுகொண்டே செல்கிறார்கள் என்ற செய்தியோடு, அந்த காணொளி பகிரப்பட்டது.
சுமார் 3 லட்சம் பேரால் பார்வையிடப்பட்ட இந்த வீடியோவை, Zee நியூஸ் போன்ற இந்தியாவின் சில முன்னனி ஊடகங்களும் செய்தியாக பகிர்ந்தன.

மினி பேருந்து ஒன்றில் இருக்கும் ராணுவ வீரர்கள், வீட்டில் இருந்து பிரிந்திருக்கும் வருத்தத்தை வெளிப்படுத்தும் படியான பாடல் ஒன்றை மேண்டரின் மொழியில் பாடுகின்றனர். அவர்கள் அணிந்திருக்கும் உடையில் "மரியாதையுடன் ராணுவத்தில் சேரவும்" என்று எழுதப்பட்டிருந்தது.
ஆனால் அவர்கள் இந்திய எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இவர்கள் யின்ஹூ மாவட்டத்தின் ஃபுயாங்க் நகரத்தில் இருந்து ராணுவத்தில் புதிதாக சேரும் நபர்கள் என்றும், தங்களது குடும்பத்தில் இருந்து பிரிந்து ராணுவத்திற்கு கிளம்பும்போது அவர்கள் உணர்ச்சிகரமாக இருந்த நிமிடங்கள் அவை என்று சீன ஊடகங்கள் கூறுகின்றன.
இவர்கள் ராணுவ பகுதிக்கு திரும்பும் வீரர்கள் என்றும், இதில் ஐந்து பேர் திபெத்திய பிராந்தியத்திற்கு செல்ல முன்வந்தவர்கள் என்றும் அந்நாட்டு உள்ளூர் ஊடகம் ஒன்று செப்டம்பர் 15ஆம் தேதி அன்று செய்தி வெளியிட்டது.
ஆனால், இதற்கும் இந்திய சீன எல்லைப் பதற்றத்துக்கும் சம்மந்தம் இருப்பதாக எந்த செய்தியும் இல்லை.
செப்டம்பர் 22ஆம் தேதி சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டது.
அதில் புதிய ராணுவத்தினர் "தங்கள் பெற்றோரிடம் இருந்து கண்ணீருடன் பிரிந்து செல்லும்" படத்தை இந்திய சீன எல்லைப் பதற்றத்துடன் தைவான் சம்மந்தப்படுத்துவதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
கூற்று: சீன ஒலிப்பெருக்கிகளில் இருந்து வரும் இசைக்கு இந்திய ராணுவ வீரர்கள் நடனமாடுவது போன்ற காணொளி
உண்மை: இது ஒரு பழைய காணொளி
சீன ராணுவம் எல்லைப்பகுதியில் ஒலிப்பெருக்கிகள் பொருத்தியதாகவும், இந்திய ராணுவத்தினரை "திசைத்திருப்ப" பஞ்சாபி மொழி பாடல்களை ஒலிக்கச் செய்ததாகவும் இந்தியா, சீனா ஆகிய இரு நாட்டு ஊடகங்களும் செப்டம்பர் 16ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தன.
இந்திய வீரர்கள் எப்போதுமே கண்காணிப்பில் இருக்கும் பகுதிகளில் சீன ராணுவம் ஒலிப்பெருக்கிகள் பொறுத்தியதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
ஆனால், இந்த செய்திகளில் புகைப்படங்களோ அல்லது காணொளிகளோ இணைக்கப்படவில்லை. மேலும் இது இந்திய ராணுவத்தால் உறுதிபடுத்தப்படவில்லை.
எனினும் இந்தியாவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் இந்த வீடியோவில் பஞ்சாபி பாடல்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் நடனமாடுகிறார்கள்.

செப்டம்பர் மாதம் பகிரப்பட்ட இந்த வீடியோவை சுமார் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இது இந்திய சீன எல்லையான லடாக்கில் எடுக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டது
ஆனால், இதனை ஆராய்ந்து பார்த்ததில் இது இந்தாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்ட காணொளி என்று தெரிய வந்தது.
மேலும் இது எங்கே எடுக்கப்பட்ட காணொளி என்பதை கண்டறிவது கடினமாக இருந்தாலும், அவ்வப்போது வெளியான செய்திகளை வைத்து பார்க்கும்போது இது இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி என்றும், இந்தியா-சீனா எல்லை கிடையாது என்பதும் தெரிய வந்துள்ளது.
கூற்று: சீனாவின் மிகப்பெரிய ஒலிப்பெருக்கிகளால் இந்திய ராணுவத்தினரின் காது ஜவ்வு கிழிந்து காயம் ஏற்பட்டது
உண்மை: இது எல்லைப்பகுதிகளில் பொருத்தப்பட்டு, இதில் பாடல்கள் ஒலிக்கப்பட்டதாக ஆதாரங்கள் இல்லை.
ஒலிப்பெருக்கிகள் தொடர்பாக நாம் முன்பு பார்த்த செய்தியில் இருந்து இது வேறுபட்டது.
எல்லையில் இந்திய ராணுவத்தினர் இருக்கும் பகுதியில் மிகப்பெரிய ஒலிப்பெருக்கிகள் வைக்கப்பட்டு, அதில் இருந்து வரும் சத்தம் இந்திய வீரர்களின் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி ஒரு காணொளி ஒன்றை சீன டிவிட்டர் பயனாளர் ஒருவர் பகிர்ந்திருந்தார்.

இந்த காணொளியை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். அதே விவரத்தோடு, இந்திய ஊடகம் ஒன்றும் இந்தக் காணொளியை பகிர்ந்து செய்தி வெளியிட்டது.
ஆனால் உண்மையாக இந்தக் காணொளி 2016ஆம் ஆண்டு வெளியான ஒரு யூ டியூப் வீடியோ. சீன நிறுவனம் தயாரித்த ஒரு மொபைல் சைரன் குறித்த வீடியோ இது. அது அவசரநிலை பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும ஒரு நிறுவனம் ஆகும்.
அந்நிறுவனத்தின் வலைதளத்திற்கு சென்று பார்க்கும்போது, அந்த சைரன், இயற்கை பேரழிவு காலத்தில் மக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்த தயாரிக்கப்பட்ட சுழலும் சைரன் என விவரிக்கப்பட்டுள்ளது.
அது இசை ஒலிக்கப்படும் ஒலிப்பெருக்கி கிடையாது. ஆனால், இந்த எச்சரிக்கை சைரன் எல்லைப்பகுதியிலும் சீன ராணுவத்தினரால் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
மேலும், இந்தப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு காது சவ்வு பாதிக்கப்பட்டதாக எந்த சம்பவங்களும் பதிவானதாக தெரியவில்லை.
கூடுதல் செய்தி சேகரிப்பு - பிபிசி மானிடரிங்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












