நரேந்திர மோதி ஐ.நாவில் உரை - 15 முக்கிய அம்சங்கள்

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் உரை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் ஒளிபரப்பானது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐநாவின் பொதுச்சபை கூட்டத்தில் தலைவர்கள் யாரும் நேரடியாக கலந்து கொள்ளவில்லை.
உலக நாடுகளின் தலைவர்களின் உரைகள் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நரேந்திர மோதியின் உரையின் ஒளிபரப்பு தொடங்கியது.
நரேந்திர மோதி உரையின் முக்கிய அம்சங்கள்:
- இந்தியாவில் 130 கோடி மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வந்துள்ளதாக தனது உரையில் நரேந்திரமோதி குறிப்பிட்டார்.
- 1945ஆவது ஆண்டில் ஐ.நா நிறுவப்பட்ட போது அப்போதிருந்த பிரச்சனைகளும் அதற்கான தீர்வுகளும் இப்போது மாறியுள்ளன என்று தனது உரையில் மோதி குறிப்பிட்டார்.
- உலகில் சூழ்நிலை முற்றிலும் மாறியுள்ளது என்று தனது உரையில் கூறிய நரேந்திர மோதி தற்பொழுது நாம் முற்றிலும் மாறுபட்ட ஒரு யுகத்தில் வாழ்கிறோம் என்று கூறினார்.
- ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தனது உரையில் வலியுறுத்திய நரேந்திர மோதி அந்த சீர்திருதங்களுக்காக இந்தியர்கள் காத்திருப்பதாகவும் கூறினார். எவ்வளவு காலம் வரை ஐநாவின் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் இந்தியா விலக்கி வைக்கப்பட்டிருக்கும் என்றும் நரேந்திர மோதி கேட்டார்.
- நாங்கள் வலிமை இல்லாதவர்களாக இருந்தபோது இந்த உலகிற்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. வலிமை மிக்கவர்களான பின்பு உலகிற்கு சுமையாகவும் மாறவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கையும் இந்தியாவின் முக்கிய கொள்கைகளும் ஒன்றாகவே இருக்கின்றன.
- ஐக்கிய நாடுகள் மன்றத்தில் விரிவான பங்காற்ற, இந்தியா காத்திருப்பதாக குறிப்பிட்ட நரேந்திர மோதி, ஐ.நா அனுசரிக்கும் சர்வதேச யோகா தினம் இந்தியாவால் வழங்கப்பட்டது என்று கூறினார்.
- கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் காலத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்திய மருத்துவ உதவிகள் வழங்கி உள்ளதாக நரேந்திர மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.
- கடந்த எட்டு - ஒன்பது மாதங்களாக இந்த உலகம் கொரோனா வைரஸ் உடன் போராடி வருகிறது இந்த போராட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை எந்த இடத்தில் உள்ளது என்று நரேந்திர மோதி தனது உரையின் போது கேள்வி எழுப்பினார்.
- இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகள் இந்த பெருந்தொற்றில் இருந்து உலகம் மீண்டு வருவதற்கு உதவி செய்யும் என்றும் அவர் பேசினார்.
- கடந்த நான்கைந்து ஆண்டுகளில் 40 முதல் 50 கோடி மக்கள் வரை வங்கி கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டது சுலபமான காரியமாக இருக்கவில்லை என்று கூறிய நரேந்திர மோதி டிஜிட்டல் பண பரிவர்த்தனை இந்தியா சர்வதேச முன்னோடிகளில் ஒன்றாக இருப்பதாக கூறினார்.
- 2025ஆம் ஆண்டுக்குள் காச நோய் இல்லாத நாடாக உருவாவதற்கு இந்தியா முயற்சி செய்து வருகிறது என்று நரேந்திர மோதி தனது உரையில் கூறினார்.
- தற்சார்பு இந்தியா திட்டம் சர்வதேச பொருளாதாரம் பன்மடங்காக உதவி செய்யும் என்றும் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
- பெண்கள் தொழில் முனைவோராக உருவாவதற்கு இந்தியா ஊக்கமளித்து வருகிறது. 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
- பாலினம் மாறிக் கொண்டவர்களுக்கான சட்டபூர்வ உரிமைகளை கொண்டு வந்த நாடாகவும் இந்தியா இருக்கிறது.
- உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாக உள்ள இந்தியா தனது அனுபவங்களை இந்த உலகில் நன்மைக்காகவே பயன்படுத்தும். போதைப்பொருள், ஆயுதக் கடத்தல் ஆகியவற்றுக்கு எப்பொழுதுமே இந்தியா எதிராகவே இருந்துள்ளது என்று மோதி பேசினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








