உலகின் முதலாவது நோய்த்தொற்று தடுப்பு மருந்துக்கு மாடலாக இருந்த இந்திய ராணிகள்

உருவப்படத்தில் இருப்பவர் தேவஜம்மணி என்று வரலாற்றாசிரியர் நைகல் கூறுகிறார்

பட மூலாதாரம், Courtesy: Sotheby's

படக்குறிப்பு, இந்த ஓவியத்தில் இருப்பது தேவஜம்மணி என்கிறார் வரலாற்றாளர் நிகெல் சான்ஸ்லர்
    • எழுதியவர், அபர்ணா அல்லூரி
    • பதவி, பிபிசி

1805 ஆம் ஆண்டில் தேவஜம்மணி மைசூரில் ராஜ மாளிகை அரங்கில் அடியெடுத்து வைத்தபோது, மூன்றாவது கிருஷ்ணராஜ உடையாருடன் திருமணம் செய்வதற்காக சென்றார். அப்போது இருவருக்கும் வயது 12. அப்போது தான் தென்னிந்திய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இன்னும் பெரும் சிறப்பு வாய்ந்த காரணத்துக்காக தாம் தேர்வு செய்யப்பட்டிருப்பதை தேவஜம்மணி சீக்கிரம் உணர்ந்து கொண்டார். பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை பிரபலப்படுத்துவது மற்றும் ஊக்குவித்தல் தான் அந்தப் பணியாக இருந்தது. இந்த விவரங்கள் அறியாமல், இயல்பான அவருடைய செயல்பாடுகள் ஓவியங்களாக தீட்டப்பட்டன. ``தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தாங்களாக பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கில் கிழக்கிந்திய கம்பெனி இதற்கு ஏற்பாடு செய்திருந்தது'' என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வரலாற்றாளர் டாக்டர் நிகெல் சான்ஸ்லர் கூறியுள்ளார்.

அப்போது பெரியம்மை நோயை குணப்படுத்துவதற்கான மருந்து புதியதாக இருந்தது. ஆங்கில மருத்துவர் எட்வர்டு ஜென்னருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதை மக்கள் சந்தேக கண்ணோடு பார்த்தார்கள், இந்தியாவில் அதை ஏற்க மறுத்தார்கள். 19 ஆம் நூற்றாண்டில் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டிருந்த பிரிட்டிஷாரால் முன்வைக்கப்பட்டதும், மக்கள் அதை ஏற்க மறுத்ததற்குக் காரணமாக இருந்தது.

ஆனால் இந்தியர்களுக்குத் தடுப்பூசி போடுவது என்ற தங்களின் மாபெரும் திட்டத்தை பிரிட்டிஷார் கைவிட்டுவிடவில்லை. வைரஸ் பாதிப்பால் ``எண்ணற்ற உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுத்து காப்பாற்ற முடியும்'' என்று கூறி, விலையை அவர்கள் நியாயப்படுத்தினர். ``மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் வருமானம் பெருகும்'' என்ற நம்பிக்கை இருந்தது.

அரசியல், அதிகாரம் ஆகியவற்றை கலந்து, கிழக்கிந்திய கம்பெனி இந்திய மக்களை இதற்கு சம்மதிக்க வைத்தது. உலகின் முதல் தடுப்பூசி மருந்தை, காலனி ஆதிக்க நாடுகளில் மிகப் பெரியதாக இருந்த இந்தியாவில் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

பிரிட்டன் டாக்டர்கள், இந்திய தடுப்பூசி அலுவலர்கள், திட்டமிட்டு செயல்படுத்தும் கம்பெனி தலைவர்கள் மற்றும் நட்பாக உள்ள மன்னர்கள் - உடையார் போன்றவர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர். 30 ஆண்டு காலத்துக்குப் பிறகு, அரியணை கிடைக்கச் செய்தமைக்காக பிரிட்டிஷாருக்கு நன்றிக் கடன்பட்ட நிலையில் உடையார்கள் ஆதரவாக இருந்தனர்.

ஓவியத்தில் உள்ள பெண்கள்

தடுப்பூசி

பட மூலாதாரம், Courtesy: Sotheby's

1805ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த இந்த ஓவியம், ராணியின் தடுப்பூசி மருந்து குறித்த சாதாரண வரலாற்றுப் பதிவு கிடையாது என்று டாக்டர் சான்ஸ்லர் கூறுகிறார். பிரிட்டனின் முயற்சி எப்படி அரங்கேறியது என்பதைக் காட்டும் ஜன்னலாகவும் இது உள்ளது என்கிறார் அவர்.

சோத்தெபியின் சேகரிப்புகளில் இடம் பெற்றுள்ள இந்த ஓவியம் கேன்வாஸ் மீதான ஆயில் பெயின்டிங் ஆக உள்ளது. இதன் மதிப்பு £400,000 - £600,000 என்று சொல்லப்படுகிறது. ஓவியத்தில் உள்ள நபர்கள் யார் என தெரியவில்லை. நாட்டியப் பெண்களாக இருக்கலாம் அல்லது விலைமாதுகளாக இருக்கலாம் என எல்லோரும் நினைத்திருந்தனர். டாக்டர் சான்ஸ்லர் இதைப் பார்க்கும் வரை அப்படித்தான் நினைத்திருந்தனர்.

``அது தவறான புரிதல் என உடனே எனக்குத் தோன்றியது'' என்கிறார் அவர்.

ஓவியத்தின் வலதுபுறம் இருப்பது இளைய ராணி தேவஜம்மணி என்று அவர் கூறுகிறார். அவருடைய சேலை இடது கையை மூடியிருக்க வேண்டும். ஆனால் எந்த இடத்தில் தடுப்பூசி போடப்பட்டது என்பதை அவர் காட்டுவதற்காக, கை மூடப்படாமல் இருக்கிறது. ``குறைந்தபட்ச கண்ணிய குறைவை அனுமதிக்கும் வகையில்'' இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இடதுபுறம் இருக்கும் பெண், மன்னரின் முதலாவது மனைவியாக இருக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். அவருடைய பெயரும் தேஜம்மணி. அவருடைய மூக்கிற்கு கீழேயும், வாயைச் சுற்றிய பகுதிகளிலும் தோலின் நிறம் மாறியுள்ளது.

பெரியம்மை வைரஸ் பாதிப்பைக் காட்டுவதாக அது இருக்கிறது என்று டாக்டர் சான்ஸ்லர் தெரிவிக்கிறார். குணமான நோயாளியின் கொப்புள பரப்புகள் பிரித்தெடுக்கப்பட்டு, பவுடராக்கி, நோய் பாதிக்காதவர் அதை நுகரும்படி மூக்கின் அருகே ஊதிவிட வேண்டும். லேசான தொற்றை தூண்டுவதற்காக, அவ்வாறு செய்யப்பட்டது.

தனது எண்ணத்திற்கு ஆதரவாக உள்ள காரணங்களை டாக்டர் சான்ஸ்லர் முன்வைத்தார். அவை முதலில் 2001-ல் கட்டுரையாக வெளியிடப்பட்டன. ஓவியத்தின் தேதியும், உடையாரின் திருமண தேதிகளும், நீதிமன்றப் பதிவேடுகளும் பொருந்திப் போகின்றன.

தேவஜம்மணிக்கு தடுப்பு மருந்து தரப்பட்டதைத் தொடர்ந்து, தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள தாங்களாக முன்வந்த மக்களுக்கு ``உடல் ஆரோக்கிய பயன் கிடைத்தது'' என்று நீதிமன்றப் பதிவேட்டில் கூறப்பட்டுள்ளது.

``வளையல்களில் தங்கத்தின் விளிம்புகள் கனமாக இருத்தல்'' மற்றும் ``அழகான முன் நெற்றி அணிகலன்கள்'' ஆகியவை உடையார் ராணிகளுக்கே உரியவை என்று, மைசூரைச் சேர்ந்த பிரபல வரலாற்றளராக இருக்கும் டாக்டர் சான்ஸ்லர் கூறுகிறார். இதன் ஓவியர் தாமஸ் ஹிக்கே, உடையார்களையும், ராஜ குடும்பத்தின மற்றவர்களையும் முன்னரே ஓவியமாக வரைந்திருக்கிறார்.

``காண்பவர்களை கட்டாயமாக ஈர்க்கும் நேர்மை'' என்று அவர் எழுதியிருப்பது மிகவும் முக்கியமானது. பாதி புன்னகையுடன் ராஜ குடும்பத்துப் பெண்கள் இயல்பாக ஐரோப்பிய ஓவியருக்கு போஸ் கொடுத்திருப்பது புருவங்களை உயர்த்தும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. சாதாரண விஷயத்துக்காக உடையார்கள் இதற்கு ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று டாக்டர் சான்ஸ்லர் கூறுகிறார்.

தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

அப்படியானால் எதற்காக இப்படி செய்தார்கள்?

அது கிழக்கிந்திய கம்பெனிக்கு சரியில்லாத காலம். தங்களது முக்கிய பகைவராகக் கருதப்பட்ட மைசூரின் மன்னர் திப்புசுல்தானை 1799ல் தோற்கடித்து, அந்த இடத்தில் உடையாரை வைத்தார்கள். ஆனால் பிரிட்டனின் ஆதிக்கம் அப்போதும் உறுதி செய்யப்பட்டதாக இல்லை. எனவே, ஆட்கொல்லி நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் ஓர் அரசியல் வாய்ப்பு இருப்பதை அப்போதைய மெட்ராஸ் (இப்போது சென்னை) ஆளுநர் வில்லியம் பென்ட்டிக் உணர்ந்தார் என்று டாக்டர் சான்ஸ்லர் கூறுகிறார்.

எனவே, தடுப்பு மருந்தை இந்தியாவுக்கு அளிப்பதில் பிரிட்டிஷார் ஆர்வம் காட்டினர். ``தனிமைப்படுத்திக் கொண்ட மக்களைப் பாதுகாக்கும்'' முயற்சியாக இதில் ஆர்வம் காட்டினர் என்று பேராசிரியர் மைக்கேல் பென்னட் கூறியுள்ளார். தடுப்பு மருந்து இந்தியாவில் எப்படி கஷ்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறித்து `பெரியம்மைக்கு எதிரான போர்' ( War Against Smallpox) என்ற தனது புத்தகத்தில் இந்த வரலாற்றாளர் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவில் பெரியம்மை பாதிப்பு அதிகமாக இருந்தது மரணங்கள் சாதாரணமாக இருந்தன. முகம் மற்றும் உடலில் கொப்புளங்கள் வெடிக்கும் போது காய்ச்சல், வலி மற்றும் தீவிர உடல் அசதி ஆகியவை அறிகுறிகளாக இருந்தன. உயிர் பிழைத்தவர்களும் கூட, உயிருக்குப் பயந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளாக, குணமான நோயாளியிடம் இருந்து எடுக்கப்பட்ட தோல் பரப்புகளில் உருவாக்கப்பட்ட தூளை நுகரச் செய்வது தான் சிகிச்சை முறையாக இருந்து வந்தது. அத்துடன் சில மத சம்பிரதாயங்களும் சேர்ந்திருந்து. இந்துக்கள் அதை மாரியம்மன் அல்லது சீதளா வின்(அம்மையின் கடவுள்) கோபம் தான் இது என்று கருதி, அம்மனை சாந்தப்படுத்த முயற்சித்தனர்.

19ஆம் நூற்றாண்டில் பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசி போடுவதில் இரட்டை விளிம்புள்ள கத்திகள் பயன்படுத்தப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 19ஆம் நூற்றாண்டில் பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசி போடுவதில் இரட்டை விளிம்புள்ள கத்திகள் பயன்படுத்தப்பட்டன.

எனவே பசு அம்மை வைரஸ் கொண்ட தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட போது, அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. பிராமண சிகிச்சையாளர்கள் அல்லது ``கிராம மருத்துவ அலுவலர்கள்'' புதிய நடைமுறை தங்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

``ஆரோக்கியமான தங்கள் குழந்தையை கால்நடை நோய்க்கு ஆட்படுத்தும் நிலை பற்றி முதலாவது எதிர்ப்பு எழுந்தது'' என்று பேராசிரியர் பென்னட் கூறினார். ``பசு அம்மை என்ற வார்த்தையை எப்படி மொழி பெயர்ப்பது? அவர்கள் சமஸ்கிருத அறிஞர்கள் உதவியை நாடினர். மிக மோசமான நோய்களுக்கு உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தப் படிருப்பதை அவர்கள் அறிந்தனர். பசு அம்மை தங்கள் கால்நடைகளை அழித்துவிடும் என்ற பயமும் இருந்தது.

வேறொரு பெரிய பிரச்சனையும் இருந்தது - ``ஒருவரின் கையில் இருந்து - இன்னொருவருக்கு'' என்ற முறையில் தடுப்பு மருந்து தருவது தான் மிகவும் சிறந்த நடைமுறையாகக் கருதப்பட்டது. முதலாவது நபரின் கையில் மேல் பகுதியில் தடுப்பு மருந்து ஊசி அல்லது இரட்டை விளிம்புக் கத்தி மூலம் பூசப்படும். ஒரு வாரம் கழித்து, பசுஅம்மை கிருமி அந்த இடத்தில் வளரத் தொடங்கியதும், ஒரு டாக்டர் அதை அறுத்தெடுத்து வேறொருவரின் கையில் இதேபோல தடவுவார்.

சிலநேரங்களில் நோயாளியின் கையில் இருந்து எடுக்கப்படும் நிணநீரை இரண்டு கண்ணாடி பிளேட்களுக்கு இடையில் வைத்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்வார்கள். ஆனால் பெரும்பாலும் பயணங்களில் அவை உயிர்ப்புடன் இருப்பதில்லை.

எப்படி இருந்தாலும் தடுப்பு மருந்து அனைத்து இனத்தவர்கள், மதத்தவர்கள், சாதியினர், பாலினத்தவர்களைக் கடந்து சென்றது. தூய்மை என்ற இந்துக்கள் விட்டுத் தந்துவிடாத எண்ணத்திற்கு எதிரானதாக அது இருந்தது. இந்துக்களின் வம்சாவழியுடன் தொடர்பு கொண்ட அதிகாரத்தில் இருந்த இந்து மன்னர்களின் உதவியைக் கொண்டு இந்த அச்சத்தைப் போக்குவது தான் நல்ல வழியாக அப்போது தோன்றியது.

1799இல் நடந்த ஆங்கிலோ-மைசூர் போரில் திப்பு சுல்தான் இறந்த பின்னர் பிரிட்டிஷாரின் ஆதிக்கம் விரைவாக வளர்ந்தது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1799இல் நடந்த ஆங்கிலோ-மைசூர் போரில் திப்பு சுல்தான் இறந்த பின்னர் பிரிட்டிஷாரின் ஆதிக்கம் விரைவாக வளர்ந்தது

உடையார் ராணிக்கு தடுப்பு மருந்து வந்து சேருவதற்கான பயணம், பிரிட்டிஷ் வேலையாள் அன்னா டஸ்ட்ஹால் என்பவரின் மூன்று வயது மகள் மூலமாகத் தொடங்கியது. முதலில் அந்தக் குழந்தைக்கு தடுப்பு மருந்து தரப்பட்டது.

1800 இளவேனில் பருவத்தில் தொடங்கி, உலர்ந்த நிணநீர் சாம்பிள்கள் பிரிட்டனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. அல்லது ``தடுப்பு மருந்து கூரியர்கள்'' மூலம் அனுப்பப்பட்டது. அதாவது பயணம் முழுக்க ஒருவரின் கையில் இருந்து இன்னொருவரின் கைக்கு என மாற்றி மாற்றி தடவப்பட்டது. ஆனால் இந்த சங்கிலித் தொடர் ஏற்பாடு பயன்தரவில்லை. அவர்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தபோது அவரை உயிர்ப்புடன் இல்லை.

பல முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், உலர வைக்கப்பட்ட தடுப்பு மருந்து கண்ணாடி பிளேட்களுக்கு இடையில் வைத்து சீல் செய்து கொண்டு வரப்பட்டன. முதலில் வியன்னாவில் இருந்து பாக்தாத் நகருக்கு மார்ச் 1802ல் அவை கொண்டு செல்லப்பட்டன. அமெரிக்க குழந்தை ஒன்றுக்கு மருந்து தரப்பட்டு, அந்தக் குழந்தையின் கையில் இருந்து எடுத்த நிணநீர் இராக்கில் பாஸ்ராவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிழக்கிந்திய கம்பெனி டாக்டர், ஒருவர் கையில் இருந்து இன்னொருவர் கைக்கு என்ற சங்கிலித் தொடர் ஏற்பாடு செய்தார். அப்படி அது பம்பாய்க்கு (இன்றைய மும்பை) வந்து சேர்ந்தது.

1802, ஜூன் 14 ஆம் தேதி இந்தியாவில் பெரியம்மைக்கு எதிராக வெற்றிகரமாக தடுப்பு மருந்து தரப்பட்ட குழந்தையாக அன்னா டஸ்ட்ஹால் மாறியது. அந்தக் குழந்தையைப் பற்றிய அதிக விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ``குறிப்பிடும் வகையில் பொறுமையானது'' என்று, சிறுமிக்கு தடுப்பு மருந்து கொடுத்த டாக்டர் குறிப்பு எழுதி வைத்துள்ளார். டஸ்ட்ஹால் பாதியளவு ஐரோப்பிய வம்சாவழியை சேர்ந்த குழந்தை என்று பேராசிரியர் பென்னட் தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தையின் தாயார் எந்த இனத்தவர் என தெரியவில்லை.

``இந்த துணைக் கண்டத்தில் பயன்படுத்திய அனைத்து தடுப்பூசிகளும் இந்தச் சிறுமியிடம் இருந்து தான் பெறப்பட்டது என்பது நாம் அறிந்த விஷயமாக உள்ளது'' என்று அவர் கூறினார்.

ஐரோப்பாவிலும் பெரியம்மை தடுப்பு மருந்துக்கு எதிர்ப்பு இருந்தது
படக்குறிப்பு, ஐரோப்பாவிலும் பெரியம்மை தடுப்பு மருந்துக்கு எதிர்ப்பு இருந்தது

அதற்கடுத்த வாரம் டஸ்ட்ஹால் கையில் இருந்து எடுத்த நிணநீர், மும்பையில் ஐந்து குழந்தைகளுக்குத் தரப்பட்டது. அங்கிருந்து கையில் இருந்து எடுத்து இன்னொரு கையில் தடவுதல் முறையில் நாடு முழுக்க கொண்டு செல்லப்பட்டது. பிரிட்டன் தளங்களாக இருந்த ஹைதராபாத், கொச்சி, டெல்லிச்சேரி, செங்கல்பட்டு, மெட்ராஸ் (சென்னை) மற்றும் கடைசியாக மைசூர் அரண்மனை வரை இந்த மருந்து கொண்டு செல்லப்பட்டது.

யார் மூலமாக தடுப்பு மருந்து நிணநீர் எடுக்கப்பட்டு மாற்றப்படுகிறது என்ற பெயர்கள், விவரங்களை பிரிட்டிஷார் எப்போதும் பதிவு செய்வதில்லை.

ஆனால், ``அசாதாரணமான உடல்கள்'' மூலமாக அந்த சங்கிலித் தொடர் அமைந்தது என்பதை அவர்கள் குறித்து வைத்துள்ளனர். மெட்ராஸில் தடுப்பு மருந்து வழங்கலை உறுதி செய்த மூன்று ``கலப்பு சாதி'' குழந்தைகள் மூலமான தொடர்புகள் பயன்படுத்தப்பட்டன என்று அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தத் தடுப்பு மருந்தை கொல்கத்தாவுக்கு கொண்டு செல்வதற்கு மலாய் சிறுவன் ஒருவன் பயன்படுத்தப் பட்டிருக்கிறான்.

இளைய ராணி தேவஜம்மணிக்கு உலர் நிணநீர் மூலம் தடுப்பு மருந்து தரப்பட்டதா அல்லது முந்தைய நோயாளியிடம் இருந்து எடுத்த நிணநீர் பயன்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. அந்தக் குடும்பத்தில் வேறு யாருக்குமோ அல்லது அரண்மனையில் வேறு யாருக்குமோ தடுப்பு மருந்து தரப்பட்டதா என்பது பற்றிய குறிப்பு எதுவும் இல்லை என்று டாக்டர் சான்ஸ்லர் கூறுகிறார். மற்ற மன்னர்களுக்கு தடுப்பு மருந்து தரப்பட்டதற்கான பதிவுகள் உள்ளது என்பதால், அப்படி மைசூர் மன்னர் குடும்பத்தில் மருந்து தந்திருந்தால் அது அசாதாரணமானதாக இருந்திருக்காது.

ஆனால், எதுவும் இந்த ஓவியத்தில் நினைவுக் குறிப்பாக சேர்க்கப்படவில்லை. இதை செயல்படுத்தியதற்கான பெருமை, மன்னரின் பாட்டி லட்சுமி அம்மணிக்கு தான் சேரும் என்று டாக்டர் சான்ஸ்லர் கூறுகிறார். அவர் தனது கணவரை பெரியம்மை நோயால் இழந்தார். ஓவியத்தில் உள்ள மூன்று பெண்களில் நடுவில் இருப்பது அவராகத்தான் இருக்கும் என்று சான்ஸ்லர் கருதுகிறார். தடுப்பு மருந்துக்கு உடையாரின் அனுமதியை அறிவிக்கும் ஓவியமாக அது கருதப்படுகிறது. ``நீள்வட்ட முகமும், பெரிய கண்களும்'' ராஜகுடும்பத்துக்கே உரியவை என்று சான்ஸ்லர் கூறுகிறார்.

அவர் தான் பொறுப்பு வகித்தார் என்பதால் ஓவியம் வரைவது சாத்தியமாகி இருக்கும் - ஆட்சேபிக்க முடியாத அளவுக்கு மன்னர் சிறுவயதாக இருந்தால், ராணிகளும் சிறுவயதாக இருந்ததால் மறுத்திருக்க முடியாது என்றும் சான்ஸ்லர் தெரிவிக்கிறார்.

இந்த நடைமுறையின் பயன்களை மக்கள் உணரத் தொடங்கிய நிலையில், பிரசாரம் தொடர்ந்து நடைபெற்றது. நிறைய கிராம சுகாதார அலுவலர்கள் சுவாசம் மூலம் மருந்து தரும் முறையில் இருந்து தடுப்பு மருந்து தடவும் நடைமுறைக்கு மாறினர். 1807 ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் பேருக்கு மேல் தடுப்பு மருந்து தரப்பட்டுவிட்டது என்று பேராசிரியர் பென்னெட் கணக்கிட்டுள்ளார்.

இறுதியில் இந்த ஓவியம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது, பிறகு பொது மக்கள் பார்வையில் இருந்து காணாமல் போய்விட்டது.

1991 வரையில் வெளியில் இதைக் காண முடியவில்லை. கண்காட்சி ஒன்றில் இருந்து டாக்டர் சான்ஸ்லர் இதைக் கண்டுபிடித்தார். அடையாளம் தெரியாத தெளிவற்ற நிலையில் இருந்த இந்தப் பெண்களை அவர்தான் மீட்டு, உலகின் முதலாவது நோய்த் தடுப்பு பிரச்சாரத்தில் அவர்களுக்கு ஓர் இடத்தைப் பிடித்துக் கொடுத்துள்ளார்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: