Coronavirus Tamil Nadu: வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தால் என்ன செய்யப்படும்?

பட மூலாதாரம், getty images
தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் அல்லது யூனியன் பிரதேசங்களில் இருந்து விமானம், ரயில் அல்லது சாலை வழியாக வருபவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து விமானம் அல்லது கப்பல் வழியாக வருபவர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த பரிசோதனை நடைமுறைகள் செப்டம்பர் முதல் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
அந்த நடைமுறைகள் என்னென்ன?
இதோ அவற்றை 10 புள்ளிகளாக தொகுத்து வழங்குகிறோம்:
1. வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படும். அவர்கள் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2. தனிமைப் படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டால் அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுக வேண்டும்.
3. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை முடிவில் நோய் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் தரை இறங்குவதற்கு முந்தைய 96 மணிநேரத்திற்குள் இந்த பரிசோதனையை அவர்கள் செய்திருக்க வேண்டும்.
4. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்யப்படும்.

5.நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்படுவார்கள். அறிகுறி இல்லாதவர்கள் கோவிட் பராமரிப்பு மையங்களில் தனிமைப் படுத்தப்படுவார்கள்.
6. நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் அறிகுறிகள் இல்லாத பட்சத்தில் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது போதுமானது.
7. நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு ஒருவேளை அவர்களுக்கு அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

8. வெளிமாநிலங்களில் இருந்து வந்து, 72 மணி நேரம் மட்டும் தமிழகத்தில் தங்கி வணிகம் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
9. இந்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்களில் தமிழகம் வருபவர்களுக்கு மட்டும் தரையிறங்கும்போது ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்.
10. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நுழைவதற்கு தமிழக அரசின் இ-பாஸ் கட்டாயமாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












