அந்தமான் தீவுகள்: அருகிவரும் பழங்குடியினரை தாக்கியது கொரோனா வைரஸ் - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
கொரோனா வைரஸ் இந்தியாவின் அந்தமான் தீவுக்கூட்டத்தின் தொலைதூரத்தில் வசிக்கும் பழங்குடியினரைத் தாக்கியுள்ளது.
அருகி வரும் பழங்குடி இனமான கிரேட்டர் அந்தமானீஸை சேர்ந்த பத்து பேருக்கு கடந்த ஒரு வாரத்தில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக பிபிசியிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொலைதூர தீவில் வசிக்கும் அவர்களில் நான்கு பேருக்கு கடந்த வாரம் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. முன்னதாக, நகர்ப்புற பகுதியில் வசித்த மேலும் 6 பேருக்கு ஒரு மாதத்திற்கு முன்பு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
வெறும் 50 பேர் மட்டுமே இருப்பதாகக் கருதப்படும் கிரேட்டர் அந்தமானீஸ் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் அங்குள்ள 37 தீவுகளில் ஒன்றில் மட்டுமே வசிக்கின்றனர்.
அந்தமான் மற்றும் நிக்கோபரின் கிழக்கு தீவுக்கூட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் முதல் முறையாக ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து இதுவரை அங்கு 2,985 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேயருக்கு அருகிலுள்ள ஸ்ட்ரெய்ட் தீவில் வசிக்கும் அழிந்து வரும் கிரேட்டர் அந்தமானீஸ் பழங்குடியினத்தை சேர்ந்த 53 பேருக்கு கடந்த வாரம் நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே அவர்களில் சிலருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக மூத்த சுகாதார அதிகாரியான மருத்துவர் அவிஜித் ராய் பிபிசியிடம் தெரிவித்தார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

கடந்த வாரம் சுகாதார மற்றும் அவசரகால பணியாளர்கள் மாறிவரும் சூழ்நிலைகளை கொண்ட கடல்பகுதியில் படகுகளில் பயணித்து இந்த பழங்குடியினர் வசிக்கும் தீவை சென்றடைந்து ஒரே நாளில் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
"அவர்கள் அனைவரும் மிகவும் நன்றாக ஒத்துழைப்பு அளித்தனர்" என்று மருத்துவர் ராய் கூறுகிறார்.
பாதிக்கப்பட்ட பழங்குடியினரில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ள இருவர் ஒரு பராமரிப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட "நீண்ட காலமாக நகரத்தில் வசித்து வந்துவரும்" இதே பழங்குடியினத்தை சேர்ந்த மற்ற ஆறு உறுப்பினர்களும் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து விட்டதாக அவர் மேலும் கூறுகிறார்.
இந்த பழங்குடி இனத்தை சேர்ந்த பலர் போர்ட் பிளேயருக்கும் அவர்களின் தீவுக்கும் இடையில் அவ்வப்போது பயணம் செய்யும்போது அவர்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இவர்களில் சிலர் பல ஆண்டுகளாக நகர்ப்புற பகுதிகளில் தங்கி சிறுசிறு வேலைகளை செய்துவருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
தீவுக்கூட்டத்தின் பிற பழங்குடியினரிடையே நோய்த்தொற்று பரவாமல் பார்த்துக் கொள்வதே அடுத்துள்ள முக்கியமான சவால் என்று மருத்துவர் ராய் கூறுகிறார்.
"நாங்கள் பழங்குடியினரின் நடமாட்டத்தை கவனித்து வருவதுடன், தேவையான பழங்குடியினரை சோதனைக்கு உட்படுத்துகிறோம்," என்று அவர் கூறினார்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டத்தை பொறுத்தவரை, ஜராவாஸ், வடக்கு சென்டினிலீஸ், கிரேட் அந்தமானீஸ், ஓங்கே மற்றும் ஷோம்பன் ஆகிய ஐந்து பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தலின் கீழ் உள்ளனர்.
ஜராவாஸ் மற்றும் வடக்கு சென்டினிலீஸ் பழங்குடிகள் இன்னமும்கூட அங்குள்ள மற்ற தீவுகளை சேர்ந்தவர்களுடன் ஒன்றிணையவில்லை. வடக்கு சென்டினிலீஸ் வெளியாட்களுக்கு அபாயகரமானது, அவர்கள் யாரையும் தங்களது தீவுக்குள் அனுமதிப்பதில்லை. 2018ஆம் ஆண்டில், அந்த தீவுக்குள் நுழைய முயன்ற அமெரிக்கரான ஜான் ஆலன் சாவ், வில் மற்றும் அம்புகளை கொண்டு கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், 1850களில் ஆங்கிலேயர்கள் அந்தமான் தீவுகளை காலனித்துவப்படுத்தியபோது கிரேட்டர் அந்தமானியர்கள் 5,000க்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இனமாக இருந்தது என்று லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வைவல் இன்டர்நேஷனல் கூறுகிறது. பின்னாட்களில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் அதிகரித்த ஆக்கிரமிப்பின் காரணமாக பரவிய நோய்களின் நீண்டகால தாக்கத்தால், காலப்போக்கில் அவர்களின் மக்கள் தொகை அருகிவிட்டதாக அது கூறுகிறது.
"கிரேட் அந்தமானீஸ் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது மிகவும் ஆபத்தானது. இதற்கு முன்பு தங்களது மக்களை அழித்த பெருந்தொற்றுகளின் பேரழிவு தாக்கத்தை அவர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள்" என்று சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளர் சோஃபி கிரிக் கூறுகிறார்.
கடந்த 2010ஆம் ஆண்டு, கிரேட் அந்தமானீஸ் மொழியை பேசக்கூடிய அந்த இனக்குழுவின் கடைசி நபரான, போவா சீனியர் என்பவர் 85 வயதில் இறந்தார். உலகின் மொழியியல் ரீதியாக வேறுபட்ட பகுதிகளில் ஒன்றாக போற்றப்படும் இந்த தீவுகள் "மானுடவியலாளரின் கனவு" என்றும் அழைக்கப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், தெற்கு மற்றும் மத்திய அந்தமான் தீவுகளுக்கு இடைப்பட்ட ஒரு பரந்த வனப்பகுதியில் வசிக்கும் நாடோடி ஜராவா பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த சுமார் 476 பேர், கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் காட்டின் தொலைதூர பகுதிக்கு நகர்த்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பழங்குடியின மக்களுக்கும், அந்த பகுதிகளில் அத்தியாவசிய மற்றும் அவசரகால பணிகளுக்காக பயணிக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பின் மூலம் ஏற்படும் அபாயத்தை குறைக்க அதிகாரிகள் விரும்புகின்றனர். 1970களில் கட்டப்பட்ட 'அந்தமான் டிரங்க் ரோடு' எனும் இந்த சாலைதான், பரட்டாங்கிலிருந்து டிக்லிபூர் வரையிலான 400 கிராமங்களை இணைக்கும் ஒரே சாலையாகும்.
அந்தமானின் மற்றொரு தீவில் வசிக்கும் ஓங்கி பழங்குடியினரைச் சேர்ந்த 115க்கும் மேற்பட்டோரை பரிசோதிக்க சுகாதார ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் குழுவினர் அனுப்பப்படவுள்ளதாக மருத்துவர் ராய் கூறினார். இவர்களை தொடர்ந்து, ஷோம்பன் பழங்குடியின மக்களும் நோய்த்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
பழங்குடியின மக்கள் வசிக்கும் தீவுகளுக்கு பயணிக்கும் அவசரகால மற்றும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் நோய்த்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். பிறகு, அவர்கள் நகர்ப்புறத்திற்கு திரும்பியதும் ஒரு வாரகாலம் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
அந்தமான் மற்றும் நிக்கோபாரில் மொத்தமுள்ள 37 தீவுகளில் இதுவரை பத்து தீவுகளில் நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அந்தமானில் இரண்டு மருத்துவமனைகள், மூன்று சுகாதார மையங்கள் மற்றும் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 10 பராமரிப்பு மையங்கள் உள்ளன. இந்தியாவில் அதிகளவில் நோய்த்தொற்று பரிசோதனையை மேற்கொள்ளும் மாநிலங்களில் ஒன்றாக இது உள்ளது.
பிரேசில் மற்றும் பெருவில் உள்ள பழங்குடியினரும் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பிரேசிலின் அமேசான் பிராந்தியத்தில் மட்டும் 280க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பிற செய்திகள்:
- டெல்லி கலவரத்தில் போலீஸின் பங்கு என்ன? - ஆதாரங்களுடன் அம்னெஸ்டி அறிக்கை
- 100 ஏக்கர் நிலம்; 25 ஆண்டுகள் உழைப்பு - தமிழகத்தில் தனி மனிதர் உருவாக்கிய செழிப்பான காடு
- அரியர் பாடங்களில் தேர்ச்சி அறிவிப்பு: 'தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை' - எழும் எதிர்ப்புகள்
- NEET-JEE தேர்வுகளை தள்ளிவைக்க மோதி அரசு தயங்குவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












