சிவகங்கையில் அகழாய்வின்போது கிடைத்த 5 அடி உயர மனித எலும்புக்கூடு

மனித எலும்புக்கூடு

பட மூலாதாரம், ANI

இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை: "சிவகங்கையில் அகழாய்வின்போது கிடைத்த மனித எலும்புக்கூடு"

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகை அகழாய்வில் 5 அடி உயர மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பிப்.19-ம் தேதி தொடங்கியது.

கீழடியில் விலங்கின் எலும்பு, இருவண்ண பானைகள், இணைப்பு பானைகள், உலைகலன், தரைதளம், செங்கல்கட்டுமானம், வட்டவடிவ துளைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. மணலூரில் உலைகலன் கண்டறியப்பட்டது.

அகரத்தில் தங்க நாணயம், நத்தை ஓடுகள், பல்வேறு வித வடிவ பானைகள், பானை ஓடுகள், 5 அடுக்குகள் கொண்ட உறைகிணறு உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

கொந்தகையில் முதுமக்கள் தாழிகள், 4 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் ஏற்கெனவே கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 5 அடி உயர மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Transparent line

தினமணி: "தமிழகம், மகாராஷ்டிராவில் விரைவில் கொரோனா உச்சத்தை அடையும்" - வல்லுநர்கள் கணிப்பு

இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 31 சதவிகித நோயாளிகளைக் கொண்டிருக்கும் மகாராஷ்டிராவிலும், தமிழகத்திலும் விரைவில் கொரோனா உச்சடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோயாளிகளில் மகாராஷ்டிராவில் 23 சதவிகிதமும், தமிழகத்தில் 8 சதவிகித கொரோனா நோயாளிகளும் இருக்கிறார்கள், இந்த மாநிலங்களில் விரைவில் கொரோனா உச்சம் அடைந்து, விரைவில் அங்கு கொரோனாவில் இருந்து விடுபடும் காலம் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதும், நாள்தோறும் குணமடைவோரின் எண்ணிக்கையால் உச்சமடைவது தடுக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் ஜூலை மாதம் இறுதி வாரத்தில் கொரோனா தொற்று உச்சத்தைத் தொட்டது. பிறகு அது மெல்ல குறைந்து வருவதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தொற்றுநோய் துறை பேராசிரியர் டாக்டர் பிரபாகரன் துரைராஜ் கூறுகையில், டெல்லியைப் போலவே மகாராஷ்டிராவும், தமிழகமும் கொரோனா உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியிலுள்ள கொரோனா பரிசோதனை மையத்தின் தலைவர் அல்பனா ரஸாதான் கூறுகையில், ஜூலை கடைசி வாரத்தில் டெல்லியில் கொரோனா உச்சத்தை அடைந்தது. பிறகு பாதிப்பு மெல்ல குறைந்தது. அதுபோலவே மகாராஷ்டிராவிலும், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டு பிறகு திரும்ப கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்துவிடும் என்கிறார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Transparent line

தினத்தந்தி: ஈட்டிய வருவாயை விட அதிகமாக திரும்பிக் கொடுத்த ரயில்வே

ரயில்வே

பட மூலாதாரம், Getty Images

ரயில் பயணச்சீட்டு விற்பனை மூலம் ஈட்டிய வருவாயை விட அதிகமாக ரயில்வே நிர்வாகம் திருப்பிக் கொடுத்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாத இறுதியில் ரயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு சேவைகள் தளர்த்தப்பட்டாலும், ரயில் சேவை காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், அவற்றில் பயணம் செய்ய எடுக்கப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பயணிகள் கட்டணத்தை திரும்பப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் 'தகவல் அறியும் உரிமை' சட்டம் மூலமாக ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள பதில் மூலம் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல், மே, ஜூன் என முதல் காலாண்டில், பயணச்சீட்டு விற்பனை மூலம் கிடைத்த வருவாயை விட அதிகமாக 'ரீபண்ட்' தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. அதனால், பயணிகள் பிரிவு வருவாய் எதிர்மறையாக, அதாவது 'மைனஸ்' ஆக பதிவாகி உள்ளது.

167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.

இருப்பினும், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட கடந்த 2 வாரங்களில் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதனால், பயணிகள் வருவாய் இழப்பு, சரக்கு ரெயில்கள் வருவாய் மூலம் ஈடுகட்டப்படும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று இந்திய ரயில்வே செய்தித்தொடர்பாளர் டி.ஜே.நரைன் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Transparent line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: