கொரோனா வைரஸ்: பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனியில் மீண்டும் புதிய உச்சத்தை அடைந்த நோய்த்தொற்று பாதிப்புகள் மற்றும் பிற செய்திகள்

பெண்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பேரழிவை சந்தித்த பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கோவிட்-19 நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.

ஜெர்மனியில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு நோய்த்தொற்று பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அதாவது, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அந்த நாட்டில் புதிதாக 1,200 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், கடந்த மே மாதத்தில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து முதல் முறையாக பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 2,524 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்புவரை, கொரோனா வைரஸால் அதிகபட்ச பாதிப்பை சந்தித்த நாடாக இருந்த ஸ்பெயினில் மறுபடியும் நிலைமை மோசமடைய துவங்கியுள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை மட்டும், புதிதாக 1,418 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இதுகுறித்து ஏ.எஃப்.பி. முகமையிடம் பேசிய ஸ்பெயினிலுள்ள கேட்டலோனியா பல்கலைக்கழகத்தின் சுகாதார அறிவியல் நிபுணரான சால்வடார் மேசிப், நாடு ஒரு "முக்கியமான தருணத்தில்" இருப்பதாக கூறியுள்ளார்.

"நிலைமை இன்னும் சிறப்பாக மாறவோ அல்லது மோசமடையவோ கூடிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். நாடுமுழுவதும் உள்ள நோய்த்தொற்று பரவல் மூலங்கள் தீவிரமடைவதற்கு முன்னதாக அவற்றை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளை போன்றே பெல்ஜியம், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளிலும் நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Transparent line

செளதி அரேபியாவுடன் பாகிஸ்தான் ஏன் விரோதப்போக்குடன் நடந்துகொள்கிறது?

இம்ரான் கான் மற்றும் சவுதி முடியரசர் சல்மான்

பட மூலாதாரம், ANADOLU AGENCY

ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு செளதி அரேபியாவின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால், பாகிஸ்தான் செளதி அரேபியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது.

அண்மையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, "செளதி அரேபியா, காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக ஓஐசி எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை" என்று பகிரங்கமாக விமர்சித்தார்.

Transparent line

இலங்கை அமைச்சரவை: ராஜபக்ஷ குடும்பத்தினர் 5 பேருக்கு அமைச்சர் பதவி

ராஜபக்ச

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவையில், ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.

புதிய நியமனத்திபடி, பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோட்டாபய தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார். அமைச்சுப்பொறுப்பில் மஹிந்த ராஜபக்ஷ, - நாமல் ராஜபக்ஷ (மஹிந்தவின் மகன்), சமல் ராஜபக்ஷ (மஹிந்தவின் சகோதரர்), சசிந்திர ராஜபக்ஷ (சமல் ராஜபக்ஷவின் மகன் - ராஜாங்க அமைச்சர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவைதவிர, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியின் மகன் நிபுண ரணவக்க (நாடாளுமன்ற உறுப்பினர்) இன்று மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Transparent line

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்: தடுப்பூசி போட்ட அதிபரின் மகள் எப்படி இருக்கிறார்?

புதின்

பட மூலாதாரம், ADAM BERRY

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஒழுங்குமுறை அனுமதியை சமீபத்தில் ரஷ்யா வழங்கி உள்ளது. மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாகவும் அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் கூறுகிறார்.

மேலும் தனது மகளுக்கு ஏற்கனவே இந்த மருத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரும் அக்டோபரில் இருந்து இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யா இவ்வளவு அவசரமாக இந்த தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Transparent line

சென்னை அம்மோனியம் நைட்ரேட்: எஞ்சிய ரசாயனத்தின் தற்போதைய நிலை என்ன?

சித்தரிப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

சென்னை சுங்கத்துறை சேமிப்புக் கிடங்கில் மீதமிருந்த அம்மோனியம் நைட்ரேட் அனைத்தும் 22 கன்டெய்னர்களில் ஹைதராபாதுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி, 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 2015ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது.

ஆனால், அந்த தனியார் நிறுவனத்திடம் தகுந்த உரிமம் இல்லை என்று கூறி, இறக்குமதி செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை சுங்கத் துறை பறிமுதல் செய்தது.

பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட், மணலியில் உள்ள சுங்கத் துறையின் வேதிப் பொருட்களுக்கான சத்வா சிஎஸ்எஃப் கிடங்கில் 37 கன்டெய்னர்களில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

Transparent line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: