ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்: தடுப்பூசி போட்ட அதிபரின் மகள் எப்படி இருக்கிறார்?

பட மூலாதாரம், Adam Berry
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஒழுங்குமுறை அனுமதியை சமீபத்தில் ரஷ்யா வழங்கி உள்ளது. மனிதர்கள் மீது இந்த தடுப்பு மருந்தை பரிசோதித்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே இதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதுவே கொரோனாவுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்து என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் முடிந்துவிட்டதாகவும் அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் கூறுகிறார்.
மேலும் தனது மகளுக்கு ஏற்கனவே இந்த மருத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரும் அக்டோபரில் இருந்து இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்யா இவ்வளவு அவசரமாக இந்த தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கோவிட் 19 தடுப்பூசி உருவாக்கும்போது சர்வதேச விதிமுறைகளை பின்பற்றுமாறு ரஷ்யாவிடம் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஸ்பட்னிக்-வி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி குறித்து மறுஆய்வு செய்ய ரஷ்ய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதியளிக்கப்பட்டு மூன்றாம் கட்ட பரிசோதனை நிலையை எட்டியுள்ள ஆறு தடுப்பூசிகளின் பட்டியலில், இந்த ரஷ்ய தடுப்பூசி இல்லை. மனிதர்கள் மீது பரந்துபட்ட பரிசோதனை செய்யப்பட்ட தடுப்பூசிகளே, இந்தப் பட்டியலில் இடம்பெறும்.
உலகின் பல நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. 100க்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் ஆரம்பக்கட்ட நிலையில்தான் உள்ளன. இவற்றில் ஒருசில தடுப்பூசிகள் மனிதர்கள் மீதான சோதனை நிலையில் உள்ளது. எனினும், 2021 மே மாதம் வரை கொரோனாவுக்கான எந்தத் தடுப்பூசியின் மக்கள் பயன்பாட்டுக்கு வராது என்பதே மருத்துவ வல்லுநர்களின் கருத்து.
தடுப்பு மருந்து குறித்து அதிபர் புதின் கூறியது என்ன?
உலகின் முதல் கொரோனா தடுப்பூசி என்று இதனை குறிப்பிட்ட ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்த தடுப்பு மருந்து "நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை" வழங்குவதாக தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி மாஸ்கோவின் கமாலேயா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அதிபரின் மகள் எப்படி இருக்கிறார்?
இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக போராட "மிகவும் பயனுள்ளதாக" இருக்கும் என்பது தமக்கு தெரியும் என்று கூறிய புதின், இதுதொடர்பான மேலதிக தகவல்கள் எதையும் வழங்கவில்லை. மேலும், இந்த தடுப்பூசி "அனைத்து தேவையான பரிசோதனைகளையும்" கடந்து விட்டது என அவர் அழுத்தமாக குறிப்பிட்டார்.
தனது மகள்களில் ஒருவருக்கு இந்த தடுப்பூசி கொடுக்கப்பட்டதாக தெரிவித்த அதிபர் புதின், அவரது உடலின் வெப்பநிலை அதிகமிருந்தும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருந்ததாக கூறினார்.
"என் மகளும் இந்த பரிசோதனையில் கலந்து கொண்டதாக நினைக்கிறேன்" என்று அதிபர் புதின் தெரிவித்தார். அவரது இரண்டு மகள்களில் எந்த மகளுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்பட்டது என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
"முதல் முறை ஊசி போடப்பட்ட பிறகு அவரது உடலின் வெப்பநிலை 38 டிகிரியாக இருந்தது. அடுத்த நாள் 37.5 டிகிரயாக இருந்தது. இரண்டாவது முறை ஊசி போடப்பட்ட பிறகு அவருக்கு சற்று காய்ச்சல் அதிகரித்து, மீண்டும் சாதாரண உடல்நிலை திரும்பியது" என்று அவர் தெரிவித்தார்.
பொதுவெளியில் தனது மகள்கள் குறித்து அதிபர் விளாதிமிர் புதின் பேசுவது மிகவும் அரிதான ஒன்று. உள்ளூர் ஊடகங்களின்படி மரியா வொரன்ஸோவா, கடெரினா டிக்கோனோவா ஆகிய புதினின் இரண்டு மகள்களின் வாழ்க்கையும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடுப்பூசி குறித்து இதுவரை நமக்கு என்ன தெரியும்?
புதிதாக உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் ஆரம்பகட்ட பரிசோதனைகள் முடிந்துள்ளதாகவும், அதன் முடிவுகள் வெற்றிகரமாக இருப்பதாகவும் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், EPA
அடினோவைரஸ் என்ற வைரஸின் விகாரங்களை பயன்படுத்தி இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அடினோவைரஸ் என்பது சாதாரண சளியை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் ஒரு வைரஸ்.
ஆனால், ஆயிரக்கணக்கான மனிதர்களை வைத்து 3ஆம் கட்ட பரிசோதனை செய்யப்படும் முன்பே இந்த தடுப்பூசிக்கு ரஷ்ய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்த பரிசோதனை முறை மிகவும் அவசியமானது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பேசிய ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிக்கெல் முராஷ்கோ, புதிய தடுப்பூசி "மிகவும் பயனுள்ளது மற்றும் பாதுகாப்பானது என நிரூபணமாகியுள்ளது" என்றும் இது கோவிட் 19 தொற்றுக்கு எதிரான மனிதகுலத்தின் மிகப்பெரிய வெற்றி என்றும் கூறியுள்ளார்.
உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்பூட்னிக் - வி என்ற பெயர் இந்த தடுப்பூசிக்கு வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர். ரஷ்ய மொழியில் ஸ்பூட்னிக் என்பதற்கு செயற்கைக்கோள் என்று அர்த்தம்.
பெர்குஸ் வால்ஷ், மருத்துவத்துறை செய்தியாளர்
தடுப்பு மருந்து தயாரிப்பதில் ரஷ்யா மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. சீனா, அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய நாடுகள் தடுப்பூசி பரிசோதனைகளை தொடங்கிய பல மாதங்கள் கழித்து ஜூன் 17ஆம் தேதிதான் ரஷ்யா மருத்துவ பரிசோதனையை ஆரம்பித்தது.
தடுப்பூசி தயாரிக்கும் மற்ற குழுக்களை போல மாஸ்கோவின் கமாலெயா நிறுவனம், தங்களது ஆய்வில் கிடைத்த பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் தரவுகள் எதையும் வெளியிடவில்லை. இதனால் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்களால் இதனை மதிப்பீடு செய்ய முடியவில்லை.
ரஷ்யாவின் அறிவியல் சக்தியை உலகிற்கு காண்பிக்க வேண்டும் என்பதில் அதிபர் புதின் ஆர்வம் காட்டுகிறார். ஆனால், முதலில் யார் தடுப்பூசி கண்டுபிடிக்கிறார்கள் என்பது இங்கு முக்கியமல்ல.
இதுவரை உருவாக்கப்பட்ட எந்த தடுப்பூசியும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் என்று நிரூபிக்கப்படவில்லை.
பிற செய்திகள்:
- மியா கலிஃபா: முன்னாள் ஆபாச பட நடிகையின் மலைப்பூட்டும் மூக்கு கண்ணாடி ஏலம்
- கனிமொழி இந்தி சர்ச்சை: "நான் இதுவரை யாருடைய பேச்சையும் மொழிபெயர்த்தது கிடையாது"
- லெபனான் நிவாரணம்: மியா கலிஃபாவின் கண்ணாடி ஏலம் ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை எட்டியது
- பாஜக வி.பி. துரைசாமியின் சர்ச்சை பேட்டி: அதிமுக-பாஜக உறவு தொடருமா?
- இலங்கை அமைச்சரவை: ராஜபக்ஷ குடும்பத்தினர் 5 பேருக்கு அமைச்சர் பதவி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












