இந்திய விமானப் படையில் ரஃபால் போர் விமானங்கள்: தாக்கம் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், IAF
- எழுதியவர், ஜுகல் புரோகித்
- பதவி, பிபிசி
ஐந்து ரஃபால் ஜெட் போர் விமானங்கள் ஜூலை 29 ஆம் தேதி அம்பாலாவில் தரையிறங்கியதைப் பற்றிப் பேசுவதற்கு முன்னதாக, சற்று பின்னோக்கிச் செல்வோம்.
2000வது ஆண்டு கோடைக் காலம் .... சரியாகச் சொன்னால் ஆகஸ்ட் மாதம்.
கார்கில் போர் முடிந்து ஓராண்டு கடந்து ஆகியிருந்தது.
தங்களுக்கு மிராஜ் 2000 II வகையைச் சேர்ந்த 126 போர் ஜெட் விமானங்கள் தேவை என்று இந்தியப் பாதுகாப்புத் துறையிடம் இந்திய விமானப் படை தெரிவித்தது.
ஏன்?
போர் விமானங்களின் எண்ணிக்கையின் பற்றாக்குறையை சரி செய்யவும், அதிக முக்கியமாகப் போர்க் களத்தில் பன்முக செயல்பாடுகள் காரணமாக மிராஜ் விமானங்கள் வெற்றிகரமானதாக இருக்கும் என்று இந்திய விமானப் படை கருதியதுமே இதற்குக் காரணம்.
மூன்று ஆண்டுகள் கழித்து, 2004 ஜனவரியில், அந்த முன்மொழிவை அமைச்சகம் கிடப்பில் போட்டுவிட்டது.
நாம் 2004 ஆம் ஆண்டுக்கு வருவோம். ஆனால் கொஞ்சம் தாமதமாக வருவோம்.
இப்போது ஜூலை 29 ஆம் தேதி நடந்த நிகழ்வில், 36 விமானங்களுக்கு ஒப்பந்தம் செய்ததில், முதல் தொகுப்பாக பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து ரஃபால் விமானங்கள் அம்பாலாவுக்கு வந்து சேர்ந்தன.

பட மூலாதாரம், IAF
இதுபற்றி அன்றைய தினம் கருத்து தெரிவித்த இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``நமது ராணுவ வரலாற்றில் இது புதிய யுகத்தின் தொடக்கமாக இருக்கிறது. பன்முக செயல்பாடுகள் கொண்ட இந்த விமானங்கள் இந்திய விமானப் படையின் செயல் திறனில் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்யும்'' என்று கூறியுள்ளார். ``கொள்முதல் விவகாரத்தில் நீண்டகாலம் கருத்து வேறுபாடு தீர்க்கப்படாமல் இருந்த நிலையில், பிரான்ஸ் நாட்டுடன் அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் இவற்றை வாங்குவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சரியான முடிவு செய்த காரணத்தால் தான் இது சாத்தியமானது'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவருடைய தகவல்களில் சில கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்படவில்லை.
இரண்டு தசாப்த காலத்திற்கு முன்பு 126 போர் விமானங்கள் தேவை என கூறப்பட்ட நிலையில், வெறும் 36 ரஃபால் போர் விமானங்களால் அந்தத் தேவையை எப்படி பூர்த்தி செய்துவிட முடியும்? பற்றாக்குறையை அரசு எப்போது சரி செய்யும்?

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

எண்ணிக்கை முக்கியம்
டிசம்பர் 1998 முதல் டிசம்பர் 2001 வரையில் இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதியாக இருந்த ஏர் சீப் மார்ஷல் ஏ.ஒய், டிப்னிஸ், கார்கில் பகுதியில் வான்வெளியில் Operation Safed Sagar நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டார். ``இரண்டு ஸ்குவாட்ரன்கள் (18 விமானங்கள் கொண்ட படைப் பிரிவுகள்) அளவுக்குக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், நமது எல்லைகள் எவ்வளவு நீளம் என்பதைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 4 அல்லது 5 பிரிவுகள் (ரஃபால் விமானப் பிரிவுகள்) இருக்க வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.
சீனாவின் விமானங்களைவிட ரஃபால் விமானங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது என்று கூறும் கருத்தை சிலர் மறுக்கின்றனர். ``இதுபோன்ற விமானங்கள் சீனாவிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்களிடம் உள்ள போர் விமானங்களின் எண்ணிக்கை அதிகம் என்பது தான் கவலைப்பட வேண்டிய விஷயம். போர் விமானம் என்பது, ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கான ஒரு வசதி என்பது தான் உண்மை நிலை'' என்று அவர்கள் கூறுகின்றனர்.
``இந்திய விமானப் படையின் பிரிவுகளின் எண்ணிக்கை 40 ஸ்குவாட்ரன்கள் என்பதில் இருந்து 30 ஸ்குவாட்ரன்கள் என்ற அளவிற்குக் குறைந்துவிட்டன. நமது எதிரிகள் தீவிரமாக இந்த வசதியை அதிகரித்துக் கொண்டிருக்கும்போது, நாம் எப்படி இதை பார்த்துக் கொண்டிருக்க முடியும்! மிக் 21 ரக விமானங்கள் பயன்பாட்டில் இல்லாமல் போய்விடும், பிறகு மிக் 27 ரக விமானங்கள், அதையடுத்து ஜாகுவார் விமானங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும். அந்த நிலையில், தேவைகளை எதிர்கொள்ள இந்திய விமானப் படைக்கு உதவியாக எது இருக்கப் போகிறது'' என்று பெயரைத் தெரிவிக்க விரும்பாத முன்னாள் விமானப் படை தளபதி ஒருவர் கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், European Photopress Agency
போர் விமானப் பிரிவுகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், ரஃபால் போன்ற விமானங்கள் வந்து சேரும் நிலையில், நாம் எந்த அளவுக்குக் கவலைப்பட வேண்டும் என்று நான் அவரிடம் கேட்டேன்.
``அதிக எண்ணிக்கையிலான விமானங்களும், அதிக வல்லமை மிக்க விமானங்களும் தற்காப்புக்கு உதவும். மோதலைத் தடுக்க இந்தியா விரும்புகிறது. ஆனால் உங்களுடைய தற்காப்பு அல்லது ராணுவ பலம் தொடர்ந்து குறைந்து கொண்டே போனால், நமது எதிரிகளுக்கு மோதிப் பார்க்கலாமே என்ற எண்ணம் ஒரு சமயத்தில் தோன்றலாம். அப்போது அவர்களுக்குச் சாதகமான நிலை ஏற்படலாம். சுருக்கமாகக் கூறினால் - நம் மீது போர் திணிக்கப்படும்'' என்று அவர் பதிலளித்தார்.
பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட போர் விமானங்கள் எண்ணிக்கை சரியானதாக இல்லாமல் போனால் நிலைமை எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள் என என்னிடம் அவர் சொன்னார்.
விண்ணிலேயே எரிபொருளை நிரப்பும் வசதி, வான்வழியான தாக்குதலை சீக்கிரம் கண்டறிந்து எச்சரிக்கை செய்தல் மற்றும் கட்டுப்படுத்தும் திறன் உள்ள விமானங்கள், நவீன கால ராணுவ விமான பயன்பாட்டின் திறன்களை மேம்படுத்த அவசியம் என்பவை போன்ற விஷயங்களை அவர் பட்டியலிட்டார்.
இவற்றில் ``நம்மிடம் குறைவான எண்ணிக்கையிலேயே வசதிகள் உள்ளன. இவற்றை வாங்குவதற்கு நாங்கள் 10-15 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். ஆனால், நமது தேவையை பூர்த்தி செய்வதற்கு நெருக்கமான நிலையிலாவது நாம் இன்றைக்கு இருக்கிறோமா'' என்று அவர் கேட்டார்.
`இந்திய விமானப் படைக்கு ரஃபால் விமானங்கள் தொழில்நுட்ப சாதகத்தை அளிக்கும். ஆனால் ... '
விமானப் படை ஏமாற்றத்தில் இருக்கிறது என்று சொல்வது சரியானதாக இருக்காது.
எல்லாவற்றையும் விட, இப்போது வந்திருக்கும் ஐந்து ஜெட் விமானங்களை, தொழில்நுட்ப ரீதியில் பார்த்தால், நல்ல திறமை இருப்பதாகச் சொல்ல வேண்டும்.

பட மூலாதாரம், Joe Giddens/PA Wire
சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகள் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கமாண்ட் பகுதிகளில் இந்திய விமானப் படையில் துணை தலைமை தளபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ஏர் மார்ஷல் எஸ்.பி. தியோ, ``இந்த ஐந்து ஜெட் விமானங்களும் முழுமையாக ஆயுதங்களைக் கையாளும் திறன்களைக் கொண்டதாக, கணிசமான அளவுக்கு திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் கொண்டதாக, தொழில்நுட்ப ரீதியில் நமது ஆளுமையை மேம்படுத்துவதாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.
நடுத்தர வகைப்பாட்டில் நவீன போர் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முயற்சிகள் எடுக்காதது கவலைக்குரியது என்று அவர் குறிப்பிடுகிறார். தேஜாஸ் போன்ற மிதமான தாக்குதல் திறன் கொண்ட விமானம் என்பதுடன் இதை குழப்பிக் கொள்ளக் கூடாது. அது மிதமான தாக்குதல் திறன் கொண்டது என்பது அதன் பெயரிலேயே உள்ளது.
``ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட், ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் ஏஜென்சி, பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் போன்ற நமது உள்நாட்டு நிறுவனங்கள் செயல்பாடுகளை நிறைவேற்ற அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்கின்றன. தேஜாஸ் விமானங்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த, நாமே தயாரிக்கும் வகையிலான போர் விமானங்களுக்கான வடிவமைப்பை இந்நேரம் உருவாக்கி, உற்பத்தியைத் தொடங்கி இருக்க வேண்டும். அந்த முயற்சியில் நாம் எங்கே இருக்கிறோம்'' என்று அவர் கேட்கிறார்.
`உள்நாட்டு ஏஜென்சிகள்' என்பது அரசின் கணக்கில் மட்டுமின்றி, விமானப் படையையும் சேர்த்ததாகத்தான் கணக்கில் கொள்ள வேண்டும்.
அந்த வகையில், போர் விமானங்களை இறக்குமதி செய்வதை தாம் ஊக்குவிக்கவில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் ஏர் சீப் மார்ஷல் ஆர்.கே.எஸ். பகதூரியா வெளிப்படையாகக் கூறினார்.
புதிய தலைமுறை தேவைக்கான போர் விமானத்தை இந்தியா தயாரிக்க முடியுமா?
கடற்படை கமோடர் சி.டி. பாலாஜியைவிட ஒரு சிலரால் மட்டுமே இதற்கு பதில் அளிக்க முடியும். பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியின் தலைமைப் பொறுப்பை இவர் ஏற்றிருந்தார்.
``முற்றிலும் உள்நாட்டில் தயாரித்தலில் - ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு - என இரண்டு அம்சங்கள் உள்ளன. முதலில் ஆராய்ச்சி பற்றி நாம் பேசுவோம்; இந்தியாவின் அடுத்த தலைமுறை போர் விமானம் அட்வான்ஸ்ட் நடுத்தர அளவிலான தாக்குதல் திறன் விமானம் (ஏ.எம்.சி.ஏ.) என்பதாக உள்ளது. இப்போது இதற்கான தொடக்கநிலை வடிவமைப்பு உருவாக்கப்பட்டு விட்டது. முழு அளவிலான பொறியியல் மேம்பாட்டுக்கு (FSED) கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். விமானப் படை ஆதரவு அளிக்கவில்லை அல்லது அரசுக்கு ஆர்வம் இல்லை என்று சொல்ல முடியாது, இதற்கான காரணங்களை, உண்மை நிலவரங்களே சொல்லும்'' என்று அவர் தெரிவித்தார்.
ஒப்புதல் அளிக்க ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது?
``எங்கள் முயற்சி தடைபடுகிறது. தொழில்நுட்ப இடைவெளி ஏற்படுகிறது. அதை சரி செய்ய வடிவமைப்பை நாங்கள் மேம்படுத்திக் கொண்டே இருக்கிறோம்'' என்று அவர் விவரித்தார்.
உற்பத்தி பற்றிய விஷயம் குறித்துப் பேசிய அவர், ``பாதுகாப்பு அமைச்சகத்தின் விமானத் தயாரிப்புக்கான எச்.ஏ.எல். நிறுவனம் அதிக அளவில் தேஜாஸ் விமானங்களை தயாரித்து அளிக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் இங்கே நான் ஒரு விஷயம் பற்றி சுட்டிக்காட்ட விரும்புகிறேன் - LCA தேஜாஸ் MK 1A வகையில் (தேஜாஸ் விமானத்தின் நவீன ரகம்) 83 விமானங்களை, இந்தியாவின் தயாரிப்பாக இந்த விமானங்களை வாங்குவதற்கு 2016ல் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. ஆனால் இதுவரையில், அதற்கான ஆர்டர் தரப்படவில்லை. உள்நாட்டுத் தயாரிப்பு என்ற வகையில், இந்த தாமதத்தை எப்படி நியாயப்படுத்த முடியும்'' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பணம் முக்கியம்
பிறரைவிட மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செலவுமிகுந்த சொத்துகளை வாங்குவதற்கு விமானப் படைக்கு முதலீடு தேவைப்படுகிறது.
ஆனால் இந்திய விமானப் படைக்கு அது எளிதில் கிடைக்கும் நிலையில் இல்லை.
பாதுகாப்பு அமைச்சகத்தின் சிந்தனை அமைப்பாக இருக்கும், மனோகர் பாரிகர் பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வுகள் நிறுவனத்தில் (MP-IDSA) ஆராய்ச்சியாளராக இருப்பவர் டாக்டர் லட்சுமணன் குமார் பெஹெரா.
``மூன்று (ராணுவம், கடற்படை, விமானப் படை) படைகளையும் நவீனப்படுத்தும் செல்பாடு பல ஆண்டுகளாக தடைபட்டுள்ளது. விமானப் படை தேவைகளுக்கு மிக அதிகமான நிதி தேவை. அதனால் நிதி பற்றாக்குறையால் அது மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது'' என்று அவர் தெரிவிக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளில் உறுதியளிக்கப்பட்ட செலவினங்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கான நிதித் தேவைக்கும் (புதிய பேரம் கையெழுத்திடுதல் அல்லது ஏதாவது வாங்குவதற்கு) இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது என்று அவருடைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2018-19ல் இது 33 சதவீதமாக இருந்தது. 2019-20ல் 29 சதவீதமாக உள்ளது.
``இதில் இந்திய விமானப் படை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.100-200 விமானங்கள் வாங்குவது என்று பேசிய காலம் எல்லாம் மாறிவிட்டது. கோவிட் 19 சூழ்நிலையில் நமக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில், பழைய வாதங்களையும், எண்ணிக்கைகளையும் இன்னும் வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டுமா என்று யோசிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.''
பழைய வாதம் குறித்த பின்னோக்கிய பார்வை
மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் தேவை என இந்திய விமானப் படை முன்வைத்த கோரிக்கைக்கும், அது நிராகரிக்கப்பட்டதற்கும், ஆகஸ்ட் 2000 முதல் ஜனவரி 2004 வரையிலான காலத்தில் உண்மையில் என்ன நடந்தது?
126 மிராஜ் 2000 II ஜெட் விமானங்களை வாங்க வேண்டும் என அமைச்சகத்திடம் இந்திய விமானப் படை மூன்று முறை விளக்கியுள்ளது.
அப்போது ரஃபால் விமானங்கள் பற்றிக் குறிப்பிட்ட இந்திய விமானப் படை, மிராஜ் 2000 II விமானங்கள் எந்த வகையில் செலவைக் குறைவாக இருக்கும் என்பதை விளக்கியது. மேலும், நவீன தொழில்நுட்பம் கொண்டதாகவும், ஒப்பீட்டளவில் சிறந்த செயல்திறன் கொண்டதாகவும் உள்ளது குறித்தும் விளக்கப்பட்டது.
அப்போதிருந்த அரசு அதற்கு அசைந்து கொடுக்கவில்லை.
இதெல்லாம் நடந்து பல காலம் ஆகிவிட்டதால் இதன் நுட்பங்கள் சிலருக்கு மட்டும் தான் நினைவிருக்கும். ஆனால் இதை இந்திய விமானப் படை மறந்திருக்க வாய்ப்பில்லை.
``126 போர் விமானங்களை வாங்குவதற்கு நாங்கள் 15 ஆண்டுகள் முயற்சித்தோம். வெறும் 36 விமானங்கள் மட்டுமே வரும், அதுவும்கூட வருவதற்கு 5-6 ஆண்டுகள் ஆகும் என்று ஒருநாள் எங்களிடம் கூறினார்கள். இன்றைக்கு அதில் வெறும் ஐந்து விமானங்கள் மட்டுமே வந்துள்ளன, நாம் அதில் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம். ஏன்'' என்று தன் பெயரை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத முன்னாள் விமானப் படை தலைவர் ஒருவர் கூறினார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












