மாரிதாஸ் வீட்டில் ஒரு மணி நேரம் போலீஸ் சோதனை - ஆவணங்கள் கைப்பற்றப்பட்டனவா? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை: மாரிதாஸ் வீட்டில் ஒரு மணி நேரம் போலீஸ் சோதனை
மாரிதாஸ் வீட்டில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்திய போலீஸார். சில ஆவணங்களையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ்.
பின் வருமாறு அந்நாளிதழ் விவரிக்கிறது:
மதுரை கே.புதூர் சூர்யா நகரைச் சேர்ந்த சேர்ந்த யூ-டியூபர் மாரிதாஸ், யூ டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் திராவிட கொள்கைகளுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிர்வாகமும், தொலைக்காட்சி நெறியாளர்களும் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக குற்றம்சாட்டி கருத்துகளை வெளியிட்டார்.
இந்நிலையில், மாரிதாஸ் போலி கடிதம் வெளியிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸில் தனியார் டிவி சேனல் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் சென்னை சைபர்கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி தலைமையில் 4 போலீஸார் நேற்று மதுரை வந்து மாரிதாஸ் வீட்டுக்குச் சென்று சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சில ஆவணங்களையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மாரிதாஸ் வீட்டின் முன்பாக திரண்டனர் என்கிறது அந்தச் செய்தி.

தினத்தந்தி: கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தாய்மொழி கல்வியா?

புதிய கல்விக் கொள்கையின்படி கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் பயிற்று மொழியாக அந்தந்த மாநில தாய் மொழியை மாற்ற வாய்ப்பில்லை என்று கல்வி அதிகாரிகள் கூறியுள்ளனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
இதுகுறித்து மூத்த கல்வி அதிகாரிகள், "இந்தியா முழுவதும் இந்தப் பள்ளிகள் உள்ளன. இங்கு கடந்த 55 ஆண்டுகளாக மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. அவற்றில் மாணவர்களின் தாய்மொழி அல்லது உள்ளூர் மொழியை பயிற்று மொழியாக மாற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை. இந்தியாவில் இது சாத்தியமற்றது.
இங்கு பல்வேறு வித்தியாசங்கள் இருக்கும் நிலையில் தாய்மொழியின் பயனை இந்தக் கல்விக் கொள்கை கட்டாயமாக்கவில்லை. கேந்திர வித்தியாலயா பள்ளிகளும், அங்குள்ள வகுப்புகளும் ஒரு குட்டி இந்தியா போன்றவை. ஜம்மு காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையுள்ள மாணவர்கள் படிக்கிறார்கள். எனவே தாய்மொழியை பயிற்று மொழியாக்கலாம் என்ற கொள்கை சாத்தியமானது அல்ல. எனவேதான், 'முடிந்தால்' என்ற ஷரத்து அதில் சேர்க்கப்பட்டுள்ளது," என்றனர்.
இதுதொடர்பாக மத்திய கல்வித் துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், "இந்த விஷயத்தில் அந்தந்த மாநிலங்களே அதை எப்படி அங்குள்ள பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும் என்பது பற்றி முடிவு செய்துகொள்ளலாம். இந்த கல்விக் கொள்கை, சூழ்நிலைக்கு ஏற்றபடி அமல்படுத்துவதற்கான வழிவகைகளைக் கொண்டுள்ளது. இதுதான் அதன் சிறப்பு," என்றார்.
- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

தினமணி: ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது
ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
இதுகுறித்து ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மதுரை கோட்டத்தில் ரத்தான ரயில்களுக்கான பயணச்சீட்டு கட்டணத்தைத் திரும்ப அளிப்பதற்காக மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, விருதுநகா், தூத்துக்குடி, கோவில்பட்டி, தென்காசி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், பழனி, ராஜபாளையம், திருச்செந்தூா் ஆகிய ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.
இந்த முன்பதிவு மையங்கள் அனைத்தும் திங்கள் முதல் சனி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரையும் செயல்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தளா்வுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வற்ற முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை கோட்ட ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் ஆகஸ்ட் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இயங்காது," என குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













