New Education Policy 2020 : “குலக்கல்விக்கான வழி”, “புதுமைகள் நிரம்பியது” - ஆதரவும், எதிர்ப்பும்

பட மூலாதாரம், VIKRAMRAGHUVANSHI/ Getty images
- எழுதியவர், மு.நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை நேற்று வெளியிடப்பட்டது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல், ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்குவது, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்தை மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வருவது என பல விஷயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த புதிய கல்விக் கொள்கை புதுமையானது என்றும், எந்த புதுமையும் இந்த கல்விக் கொள்கையில் இல்லை என்றும் இரு வேறு கருத்துகள் இதில் நிலவுகின்றன.
புதிய கல்விக் கொள்கை
இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை தயாரிப்பதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது.
இந்த கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை குறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த கல்வி செயற்பாட்டாளரும், பேராசிரியருமான அனில் சடகோபால், "இந்தக் கல்விக் கொள்கையில் எந்த புதுமையும் இல்லை, அறிவுசார் சமூகத்தை அல்லாமல் கூலிகளை உண்டாக்கத்தான் இந்தக் கல்விக் கொள்கை பயன்படும்," என தெரிவித்து இருந்தார்.
676 மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 2 லட்சம் பேரிடம் கருத்துக் கேட்ட பின்னரே இந்தக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதாக இந்த புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வேலைத் திட்டத்தின்படியே இந்த கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டிருப்பதாகச் செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பான பாரதிய சிக்ஸான் மண்டல் இந்த புதிய கல்விக் கொள்கையை வரவேற்றுள்ளது. தங்களது 60 சதவீத ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குலக்கல்விக்கான தந்திரமான வழி

பட மூலாதாரம், Facebook
இந்த புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த கல்வி செயற்பாட்டாளர் மற்றும் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, "இந்த கல்விக் கொள்கை மீண்டும் குலக்கல்விக்கே வழிவகை செய்யும்," என்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அடிப்படையில் சமமான கற்றல் வாய்ப்பை தொடக்கக்கல்வியில் கூட இந்த புதிய கல்விக் கொள்கை தர மறுக்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தை 12ஆம் வகுப்பு வரை நீட்டிக்கிறோம் என்கிறார்கள். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கல்வி உரிமைச் சட்டத்தை வைத்துப் பார்க்கும் போது நிச்சயம் இதனை நேர்மறையான விஷயமாகக் கருத முடியாது. தனியாருக்கு நிதி அளிக்கத்தான் இது பயன்படும். இந்த தொகையை அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தலாம்," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
மேலும் அவர், "ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்குள் ஏதாவது ஒரு தொழில் கல்வியை கற்றுக் கொண்டு அதில் திறமையுடன் வெளியே வர வேண்டும் என்கிறார்கள். நீங்கள் இந்தியச் சமூகச் சூழலில் இதனைப் பொருத்திப் பாருங்கள் ஒரு மாணவர் 14 வயதில் ஒரு தொழிலில் திறமையாக இருந்தால், அவர் ஆர்வம் எதில் செல்லும்? பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வரும் மாணவர்கள் அந்த வயதில் சரி ஏன் மேலும் படித்துக் கொண்டு, கற்ற தொழிலை வைத்து குடும்பத்தைக் காப்பாற்றுவோம் என்றுதானே நினைப்பான்." என்கிறார்.
"பத்தாம் வகுப்பில் அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கிய மாணவன் கூட பதினொன்றாம் வகுப்பில் அறிவியல் பாடத்திட்டத்தை எடுக்கவில்லை. மருத்துவம் படிக்க நீட் இருக்கிறது. அதற்குச் செலவு செய்ய முடியாது என்பதுதான் காரணம். இதை நான் ஏதோ நடக்காத விஷயத்தைக் கூறவில்லை. நாளிதழ்களில் பதிவான தகவல்கள் இவை. இப்போது 12 ஆம் வகுப்பு முடித்து உயர் கல்விக்குச் சேர மற்றொரு நுழைவுத் தேர்வு என்கிறீர்கள். அது கட்டாயம் கிடையாது, தேவையென்றால் எழுதலாம் என்கிறீர்கள். யாருக்குத் தேவையென்றால்? நான் படிக்க விரும்பும் ஒரு பல்கலைக்கழகம் அந்த நுழைவுத் தேர்வு தேவை என்று சொன்னால் நான் என்ன செய்ய?பள்ளிக் கல்வியை மேம்படுத்துகிறோம், க்ரியேடீவ் லேர்னிங் தருகிறோம் என்கிறீர்கள். பின் ஏன் இந்த தகுதித் தேர்வு?," என்று கேள்வி எழுப்புகிறார்.
சந்தைக்கு தேவையான கூலிகள்
"உயர்கல்வியில் முதலாம் ஆண்டு முடித்தால் ஒரு சான்றிதழ், இரண்டாம் ஆண்டு முடித்தால் ஒரு பட்டயப்படிப்பு என்கிறீர்கள். நம் சமூக சூழலை நினைத்துப் பாருங்கள், பொருளாதார அழுத்தத்தைக் கணக்கிட்டுப் பாருங்கள். எத்தனை பேர் முழுமையாகப் படிப்பார்கள். ஒரு சான்றிதழ் கிடைத்தவுடன் பலர் வெளியேறிவிட மாட்டார்களா?
இந்த கல்விக் கொள்கையில் நுட்பமான ஏராளமான தடுப்பு அரண்களை வைத்திருக்கிறார்கள். சந்தைக்குத் தேவையான கூலிகளை உற்பத்தி செய்யவே இது உதவும். குலக்கல்வியை நேரடியாக வலியுறுத்தாமல், மிகவும் தந்திரமாக இதனை வடிவமைத்து இருக்கிறார்கள்," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

பட மூலாதாரம், Getty Images
மேலும் இந்த கல்விக் கொள்கை மாநில உரிமைகளைப் பறிக்கிறது என்று கூறும் பிரின்ஸ், "இந்திய உயர் கல்விக்கான ஆணையம்தான் உயர் கல்வியைத் தீர்மானிக்கும் என்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை. அப்படியானால் பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் உரிமையும், அந்த பல்கலைக்கழகத்தைக் கட்டுப்படுத்தும் மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமையும் இல்லாமல் போகிறதே?" என்கிறார்.
"மேம்போக்காகப் பார்த்தால் சில விஷயங்களைப் பார்த்தால், புதுமையானதாக, புரட்சிகரமானதாகத் தெரியலாம். ஆனால், இந்தியச் சமூக சூழலுடன் பொருத்திப் பாருங்கள். எளிய மாணவர்களை உயர் பதவிகளுக்கு வராமல் தடுக்கும், கூலிகளாக்கும் கல்வி திட்டம் இது. இது முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றார் போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது," என்கிறார்.
மூன்று மொழிகள் கற்க வேண்டும் என்பது குழந்தைகளின் சுமையைத்தான் அதிகரிக்கும் என்று கூறும் அவர், "இந்தியை திணிக்கவில்லை என்கிறீர்கள். ஏதாவது ஒரு மொழியை மூன்றாவதாக கற்க வேண்டும் என்கிறீர்கள். அதைதான் ஏன் என்கிறோம்? ஏன் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டும்? அவர்களுக்கு தேவையான போது எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும்," என்கிறார்.
நெகிழ்வுத்தன்மை, புதுமை
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் நஜ்மா அக்தர், "இந்த புதிய கல்விக் கொள்கையைப் புதுமையான கொள்கை," எனக் கூறி உள்ளார்.
"இனி மாணவர்கள் தடையற்ற கல்வி சூழலில் அதிக நெகிழ்வுத்தன்மையுடன் கல்வியைத் தொடர முடியும் . இந்தியாவில் உயர்கல்வி இப்போது அறிவியல், கலை மற்றும் மனிதநேயம் ஆகியவற்றில் பகிரப்பட்ட கவனம் செலுத்துவதன் மூலம் முழுமையானதாக இருக்கும்," என கூறி உள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் மற்றும் வலதுசாரி சிந்தனையாளர் ராம சுப்ரமணியன், "எல்லா திட்டங்கள், கொள்கைகளிலும் சில குறைபாடுகள் இருக்கும். அதுபோல இதிலும் சில உள்ளன. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வரவேற்கத் தகுந்த பல அம்சங்கள் இதில் உள்ளன," என்கிறார் அவர்.
"ஆறு வயதிலிருந்து 14 வயது வரை இருந்த கல்வி உரிமைச் சட்டத்தை, இந்த புதிய கல்விக் கொள்கை மூன்று வயதிலிருந்து 18 வயது என உயர்த்துகிறது. இதனை முழுமையாக வரவேற்கிறேன்," என்கிறார் ராம சுப்ரமணியன்.

பட மூலாதாரம், Facebook
மேலும் அவர், "குழந்தைகளின் கல்வி சுமையைக் குறைக்கிறது. குறிப்பாக 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை சிறப்பானது. ஒரு கல்வியாளராக நான் மிகவும் வரவேற்பது, சுய அங்கீகார முறையைத்தான்," என்கிறார்.
"இப்போது ஒரு பள்ளி தொடங்கவும், இருக்கும் பள்ளிகளை நடத்தவும், ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இந்த புதிய கல்விக் கொள்கை சொல்லும் சுய அங்கீகார முறையும், கண்காணிக்க, தணிக்கை செய்ய ஓர் ஆணையம் என்ற முறையும் இந்த விஷயத்தை எளிமையாக்குகிறது," என்று கூறுகிறார்.
"ஆராய்ச்சிக்கான அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதையும், உயர் கல்வியில் உரிய சான்றிதழ்களுடன் கூடிய பல்முனை நுழைவு, வெளியேறுதல் ஆகியவற்றை ஆதரிக்கிறேன். இப்போது ஒரு மாணவன் கல்லூரியில் இடைநின்றால் அவரிடம் எந்த சான்றிதழும் இருக்காது. இந்த புதிய முறையில் முதலாம் ஆண்டோடு நின்றால் ஒரு சான்றிதழ், இரண்டாம் ஆண்டோடு நின்றால் பட்டய சான்றிதழ் தரப்படும் என கூறப்பட்டிருக்கிறது. இது மிகவும் நல்ல விஷயம்," என்கிறார்
இந்த புதிய கல்விக் கொள்கை குலக்கல்விக்கு மீண்டும் அழைத்துச் செல்லும் எனும் குற்றச்சாட்டை மறுக்கும் இவர், "பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் கல்வியோடு சேர்த்து ஒரு தொழிலை கற்றுக் கொடுக்கும் முறை இருக்கிறது. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு திறன் இருக்கும், அதனை மேம்படுத்துவதில் என்ன தவறு?" எனக் கேள்வி எழுப்புகிறார்.
தாய்மொழிக் கல்வியை ஐந்தாம் வகுப்பு வரை நடத்தலாம், அதனை 8ஆம் வகுப்பு வரை நீட்டிக்கலாம் என்பது நல்ல யோசனை. ஆனால், அதனை கட்டாயப்படுத்த முடியாது. மாணவர்கள் என்ன மொழியில் படிக்க வேண்டும் என்பதை அவர்கள் பெற்றோர் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. இது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது.
இந்த கல்விக் கொள்கை வலியுறுத்தும் நுழைவுத் தேர்வுகளை எதிர்ப்பதாகக் கூறும் ராம சுப்ரமணியன், "ஒரு பக்கம் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கையை 2030ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்துவோம் என்று சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் மாணவர்களை வடிக்கட்டும் இந்த நுழைவுத் தேர்வுகளை எதிர்க்கிறேன்," என்கிறார்.
"இந்த நுழைவுத் தேர்வுக்காக ஒரு பயிற்சி மையத்தில் சேர வேண்டும். அதற்குத் தனி செலவாகும். இந்தியச் சூழலில் இதனை எல்லாம் எல்லாராலும் தாங்கிக் கொள்ள முடியாது," என்கிறார்.
புதிய கல்விக் கொள்கை 2020: இருபது முக்கிய அம்சங்கள்
- மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை, அனைத்து மட்டத்திலும் பள்ளிக் கல்விக்கு உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்தல்.
- தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்துதல்.
- எந்தக் குழந்தையும் பிறந்த சூழ்நிலை காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ, கற்பதுடன் சிறந்து விளங்கும், எந்த வாய்ப்பையும் இழந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்தல்.
- இளைஞர் மற்றும் வயது வந்தோருக்கான கல்வியை 100 சதவீதம் உறுதி செய்தல்.
- பள்ளி கல்வியிலிருந்து வெளியே வரும் போது ஒவ்வொரு மாணவரும் கூடுதலகாக ஒரு திறனை வளர்த்து கொள்வதை உறுதி செய்தல்.
- கற்பித்தலுக்கான குறைந்தபட்ச பட்டத் தகுதி 2030-க்குள் நான்கு வருட பி எட் பட்டமாக இருக்கும். தரம் குறைந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- 3,5,8-ஆம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் , உரிய ஆணையம் நடத்தும் பள்ளித் தேர்வுகளை எழுதுவார்கள். 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் தொடரும்.
- ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி வழிக் கல்வி.
- திறந்தநிலை பள்ளிகளை உருவாக்குதல்.
- மாணவர்களுகான பள்ளி ரிப்போர்ட் கார்டுகளில் வெறும் மதிப்பெண்களை மட்டும் குறிப்பிடாமல், விரிவாக அவர்களது முழு திறனையும் குறிப்பிடுதல்.
- உயர் கல்விக்கான சேர்கை விகிதம் 50 சதவீதமாக உயர்வதை உறுதி செய்தல்.
- எம்.பில் படிப்புகள் இனி இருக்காது.
- இளநிலை பட்டக் கல்வி , பன்நோக்கு வாய்ப்புகளுடன் 3 அல்லது 4 ஆண்டு கால படிப்பாக இருக்கலாம். இந்தக் காலத்திற்குள் பொருத்தமான சான்றிதழ் பெற வேண்டும். உதாரணமாக, ஓராண்டுக்குப் பின்னர் சான்றிதழ், 2 ஆண்டுக்குப் பின்னர் மேம்பட்ட டிப்ளமோ , 3 ஆண்டுக்குப் பின்னர் இளநிலைப் பட்டம், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் பட்டத்துடன் ஆராய்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். ஓராண்டு கல்வியுடன் வெளியேறினால் சான்றிதழ் மட்டுமே கிடைக்கும், இரண்டாண்டு கல்வியுடன் வெளியேறினால் டிப்ளமோ மட்டுமே கிடைக்கும்.
- இந்திய மொழிகளை, கலைகளை, கலாசாரத்தை ஊக்குவிக்க பாடத்திடங்களை ஏற்படுத்துதல்.
- மொழி பெயர்ப்புக்கான கல்வி நிலையங்களை உருவாக்குதல்.
- சமஸ்கிருதம் மற்றும் இதர செம்மொழிகளுக்கான கல்வி நிலையங்கள் மற்றும் துறைகளை வலிமைப்படுத்துதல்.
- பாலி, பாரசீகம், பிராகிரதம் ஆகியவற்றுக்கான தேசிய கல்வி நிலையங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உருவாக்கப்படும்.
- கல்வித் துறையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
- பட்டியில் இன, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தகுதியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- மேல்நிலை பள்ளி படிப்பு முடித்த மாணவர்கள், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, தேசிய கல்வி முகமை (NTA) மூலம் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












