கொரோனா வைரஸ் தொற்றை குணமாக்க உதவும் 'பாபிஜி அப்பளம்' - பாஜக அமைச்சர் வெளியீடு

பட மூலாதாரம், @arjunrammeghwal twitter page
அப்பளம் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு அணுக்களை உடலில் உண்டாக்கும் தன்மை உள்ளதாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் புதிய நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்ட அப்பளத்தை அறிமுகம் செய்யும்போது அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இவ்வாறு பேசியுள்ளார்.
எனினும் இவரது கூற்று அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்படவில்லை.
கொரோனா வைரஸ் குறித்து அறிவியலுக்கு முரணான மற்றும் போலியான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில் இவரது கூற்று சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

பட மூலாதாரம், Twitter
இந்தியாவின் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கனரக தொழில்துறை இணை அமைச்சராக உள்ள அர்ஜுன் ராம் மேக்வால், "தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 'பாபிஜி பப்பட்' என்னும் அப்பளம் ஒன்றை ஒரு தயாரிப்பாளர் தயாரித்துள்ளார். இது கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும். அவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என நம்புகிறேன்," என்று இந்தியில் கூறும் காணொளி ஒன்று வட இந்திய சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியில் பாபிஜி என்றால் 'அண்ணி' என்று பொருள். 'பப்பட்' என்றால் 'அப்பளம்' என்று பொருள்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

கொரோனா வைரஸால் உண்டாகும் கோவிட்-19 தொற்றுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவற்றில் பலவும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளன.
"பிகானிரில் தயாரிக்கப்படும் அப்பளங்கள், பூஜியா மற்றும் ரசகுல்லா ஆகியவை மிகவும் பிரபலமானவை. #VocalforLocal பிரசாரத்திற்கு ஆதரவு அளிக்குமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஊரில் தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்து பேசி இந்த பிரசாரத்தை மேலும் விரிவு படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்று அவர் ட்விட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு நல்ல முயற்சி என்று பாராட்டி இவரது பதிவுக்கு பின்னூட்டங்களும் வந்துள்ளன.
அர்ஜுன் ராம் மேக்வால் ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக உள்ளார்.
வெள்ளியன்று, இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 49,310 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை இந்திய அரசு வெளியிட்ட தகவலின்படி இந்தியா முழுவதும் சுமார் 12.88 லட்சம் பேர் கோவிட்-19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 8.17 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கையும் 30,600-ஐ கடந்துள்ளது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












