ஐபிஎல் 2020 தேதிகள்: 'கிரிக்கெட் தொடர் செப்டம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும்'

ipl 2020 date and time table list

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: ஐ.பி.எல் 2020 கிரிக்கெட் தொடர் எப்போது?

இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. மேலும் ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை அரசும் விருப்பம் தெரிவித்திருந்தது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல்) போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8ஆம் தேதி முடிவடையும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதி விவரங்கள் குறித்து ஆலோசிப்பதற்கும், அட்டவணையை அங்கீகரிப்பதற்கும் ஐபிஎல் ஆட்சிக் குழு அடுத்த வாரம் கூடுகிறது.

ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 (சனிக்கிழமை) தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். மொத்தம் போட்டிகள் 51 நாட்கள் நடைபெறும், இது உரிமையாளர்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் பிற பங்குதாரர்களுக்கும் பொருந்தும் என பெயர் வெளியிட விரும்பாத மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

தி இந்து: இந்தியா - சீனா எல்லை பிரச்சனை

இந்திய - சீன எல்லையான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் அமைந்துள்ள பாங்கோங் த்சோ ஏரியின் 'ஃபிங்கர்' பகுதியில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கும் நடவடிக்கைகளின் வேகம் குறைந்துள்ளதால், இரு தரப்பும் ஒப்புக்கொண்ட படைகள் விலக்களில் நேர்மையான நோக்குடன் ஈடுபடுமாறு இந்தியா சீனாவை வலியுறுத்தியுள்ளது என்கிறது தி இந்து ஆங்கில நாளிதழ்.

இந்தியா - சீனா எல்லை பிரச்சனை

பட மூலாதாரம், Getty Images

பாங்கோங் த்சோ ஏரியின் ஓரங்களில் இருந்து சீன ராணுவம் பின்வாங்காமல் இருப்பதாக இந்தியா கூறுகிறது.

ஜூன் 30 அன்று இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் கோக்ரா பகுதிகளில் உள்ள பேட்ரோலிங் பாய்ண்ட் பகுதிகளில் இருந்து முழுமையாகவும், ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் பாங்கோங் த்சோ ஏரி ஆகிய இடங்களில் இருந்து பகுதி அளவும் சீனா தனது படைகளை விலக்கிக்கொண்டுள்ளது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தினமணி: நடமாடும் பால் வண்டி முகவர்கள்

நடமாடும் பால் வண்டி முகவர்களை நியமிக்கும் புதிய திட்டத்தை ஆவின் அறிமுகப்படுத்தியுள்ளதாக தினமணி செய்தி கூறுகிறது.

இதுகுறித்து, ஆவின் நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா பாதிப்பு காரணமாக ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களை நடமாடும் பால் வண்டி ஓட்டுநர்களாகப் பயன்படுத்த ஆவின் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகங்களில் ஆயிரம் ரூபாயை பணமாகவோ அல்லது காசோலையாகவோ வைப்புத் தொகையாகச் செலுத்தி உடனடியாக நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை நகரைப் பொருத்தவரை ஆவின் தலைமை அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் விற்பனைப் பிரிவிடம் வைப்புத் தொகையை பணமாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம்.

இதனால் பால் முகவர்களாக மாறும் ஆட்டோ, டாக்சி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு மாதத்துக்கு ரூ.15 ஆயிரம் அளவுக்கு வருமானம் கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: