சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு இசை அஞ்சலி செலுத்திய ஏ.ஆர். ரஹ்மான்

பட மூலாதாரம், AR RAHMAN / TWITTER
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி: சுசாந்த் சிங்குக்கு இசை அஞ்சலி செலுத்திய ஏ.ஆர். ரஹ்மான்
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குக்கு இணையம் வழியாக இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.
ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுஷாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். இதற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தில் பேச்சாரா திரைப்படம், ஜூலை 24 அன்று ஹாட் ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங்குக்காக இந்தப் படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் சுசாந்த் சிங்குக்கு இணையம் வழியாக இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் கலந்துகொண்டார். சென்னையில் உள்ள தனது ஸ்டூடியோவில் ரஹ்மான் பாட அவருடைய மகன் அமீன், மகள் ரஹீமா ரஹ்மான் ஆகியோர் இசைக் கருவிகளை இசைத்தார்கள். மேலும் - ஷ்ரேயா கோஷல், அர்ஜித் சிங், மோஹித் செளகான், ஹிரிடே கட்டானி, சுனிதி செளகான், ஷாஷா திருபதி, ஜொனிடா காந்தி போன்ற பிரபல இசைக்கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடல்களைப் பாடினார்கள். இதன் விடியோ யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது என்கிறது தினமணி செய்தி.


தி ஹிண்டு: தந்தையால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான மகளின் கருவை கலைக்க அனுமதி
ஏழு மாத கர்ப்பமாக இருந்த 15 வயது சிறுமியின் கருவை கலைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளதாக தி ஹிண்டு செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், coldsnowstorm
இது சாத்தியம் என்ற மருத்துவக்குழுவின் அறிக்கையை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த சிறுமியின் உறவினர் நீதிமன்றத்தில மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில், அந்த சிறுமியை அவரது தந்தையும் தாத்தாவும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், அவர்கள் இதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அச்சிறுமிக்கு தாய் இல்லை என்பதால், அவரின் நலன் கருதி, கருவை கலைக்க அனுமதி அளிக்கும்படி கோரப்பட்டிருந்தது என்கிறது அச்செய்தி.

தினமலர்: ரூ. 50 கோடி கடன் பாக்கி : ஹரியானா டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி தந்த வங்கி
ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டு வங்கியை அணுகிய டீக்கடைக்காரரிடம் ஏற்கனவே நீங்கள் ரூ. 50 கோடி கடன் பாக்கி வைத்துள்ளீர்கள் என வங்கி நிர்வாகம் கூறிய சம்பவம் நடந்துள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் குருக்க்ஷேத்ராவைச் சேர்ந்தவர் ராஜ்குமார், அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தனது டீக்கடையை மூட வேண்டிய சூழல் ஏற்பட்டது. தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
மீண்டும் டீக்கடையை திறக்க வேண்டி, ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டு வங்கி ஒன்றிற்கு மனு செய்திருந்தார்.
அவரது பெயர் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்த வங்கி அதிகாரிகள், நீங்கள் ஏற்கனவே வங்கியில் ரூ. 50 கோடி கடன் வாங்கியுள்ளீர்கள். உங்களுக்கு அது தெரியாதா, இப்போது மேலும் கடன் கேட்டால் எப்படி தரமுடியும். முதல்ல ரூ. 50 கோடி கடன் பாக்கிய கட்டுங்கள் என கூறி ராஜ்குமாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.
உடனே ராஜ்குமாருக்கு தூக்கி வாரி போட்டது. சாதாரண டீக்கடை வைத்துள்ள நான் இதுவரை எந்த வங்கியிலும் கடன் வாங்கியது கிடையாது அப்படியிருக்க எப்படி ரூ. 50 கோடி வங்கி கடன் வாங்கினேன் என எனக்கே தெரியவில்லை என்றார் என அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












