தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் பட்டியலில் விடுபட்ட 444 பேர்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் பிற இணை நோய்களால் பாதிக்கப்பட்டு, கொரோனாவாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 444 பேரை கொரோனாவால் உயிரிழந்தோர் பட்டியலில் சேர்த்து தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700ஆக இருக்கும் நிலையில், அந்தப் பட்டியலில் 444 பேருடைய மரணங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், இணை நோய்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு இரத்த பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி அமைக்க திட்டமிடப்பட்டு, அதனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்துவைத்தார்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், 444 உயிரிழப்புகள் கெரொனாவால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுமெனத் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டில் கொரோனாவால் நிகழும் மரணங்களைப் பட்டியலிட மத்திய அரசு Guidance for appropriate recording of COVID deaths என்ற விதிமுறையை வெளியிட்டுள்ளது. அதன்படி விடுபட்டுப்போன மரணங்கள் குறித்து ஆராய டாக்டர் வடிவேல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் ஆய்வில், மார்ச் 1ஆம் தேதி முதல் தற்போதுவரை 444 மரணங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கத்தக்கவை எனக் கண்டறியப்பட்டது. இவர்கள் கோவிட் - 19 நோயால் மட்டுமே இறந்தார்கள் எனச் சொல்ல முடியாது. இவர்களுக்கு பல இணை நோய்களும் இருந்தன" என்று தெரிவித்தார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

தமிழ்நாட்டில் உள்ள 102 மருத்துவமனைகளில் இந்தக் குழு ஆய்வுநடத்தியது. இது தவிர, மயானங்கள், இடுகாடுகளில் இருந்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் இந்த 444 மரணங்கள் கோவிட் - 19 மரணங்களாகக் கருதப்பட்டு, பட்டியலில் சேர்க்கப்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இனி மாதாமாதம் இந்தப் பட்டியல் சரிபார்க்கப்படுமெனவும் மகாராஷ்ட்ராவில் 1,382 மரணங்களும் தில்லியில் 344 மரணங்களும் இதுபோல பிறகு இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, "சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 50 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளன. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 60 சதவீத படுக்கைகள் காலியாக உள்ளன. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 750 படுக்கைகள் இருந்தாலும் 364 பேரே அதில் சிகிச்சைபெற்று வருகின்றனர். ஆகவே 50 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன" என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்தார். கோவிட் கேர் மையங்கள், கோவிட் கேர் க்ளீனிக்குகள் ஆகியவற்றில் 80 சதவீத இடங்கள் காலியாக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டில் பிளாஸ்மா சிகிச்சையைப் பொறுத்தவரை, கோவிட் - 19 தாக்கி குணமடைந்தவர்கள், அதற்குப் 14 நாட்களுக்குப் பிறகு தங்கள் பிளாஸ்மாவைத் தானம் செய்யலாம். 14 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு முறை தானம் செய்ய முடியும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், உடல் உறுப்பு தானம் பெற்றவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முடியாது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 26 பேருக்கு சோதனை முறையில் இதனை செலுத்தியதில் 24 பேர் முழுமையாகக் குணமடைந்தனர். தற்போது ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியில் ஒரே நேரத்தில் 7 பேர் பிளாஸ்மா தானம் செய்யலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












