You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விகாஸ் துபே: கான்பூர் என்கவுண்டர் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் எட்டு காவல்துறையினர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான விகாஸ் துபே இன்று (ஜூலை 9) மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விகாஸ் துபே கைது செய்யப்பட்ட தகவலை மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் அவர் மேலதிக தகவல் எதையும் கொடுக்கவில்லை.
விகாஸ் துபேவைக் கைது செய்தது மத்தியப் பிரதேச மாநில காவல்துறைக்கும் மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்டுள்ள அவர் விகாஸ் இன்னும் தங்கள் மாநில காவல் துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாள் கோயிலின் பாதுகாவலர்களால் விகாஸ் துபே இன்று காலை பிடித்து வைக்கப்பட்டதாகவும் பின்பு அவர் காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மகாகாள் கோயிலுக்கு தான் செல்லப்போவதாக விகாஸ் துபேவே காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் நடந்தது என்ன?
60 குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றப்பின்னணி உடைய விகாஸ் துபேயை கைது செய்ய கடந்த 3ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே நடந்த முயற்சியின்போது குற்றவாளி தரப்பினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒருவர் உள்பட எட்டு காவல்துறையினர் உயிரிழந்தனர்.
பல காவல் துறையினரும் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.
இதையடுத்து, தாக்குதல் நடந்த அந்த கிராமத்தையே சுற்றி வளைத்த காவல்துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். மேலும், விகாஸ் துபே உடன் தொடர்பில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் செல்பேசி அழைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்த உத்தரப்பிரதேச மாநில காவல் துறை இயக்குநர் ஹிதேஷ் சந்திர அவஸ்தி, "சாபேபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திக்ரு எனும் கிராமத்தில் பல வழக்குகளில் தொடர்புடைய மோசமான குற்றவாளி ஒருவரை கைது செய்வதற்காக காவல்துறையினர் சென்றார்கள். ஜேசிபி எந்திரத்தை நிறுத்தி அவர்கள் தடுக்கப்பட்டனர். கட்டடங்களின் கூரை மீது இருந்த குற்றவாளிகள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்கள்," என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியதை அடுத்து அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவம் தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் குற்றவாளியை விரைந்து பிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
எனவே, இதற்கு அடுத்தடுத்த தினங்களில் விகாஸ் துபேவுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டதாகவும், ஒருவர் என்கவுண்டயில் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :