You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் மூழ்கிய தீவுகள் குறித்து நீங்கள் அறிவீர்களா? - சூழும் மற்றுமோர் ஆபத்து
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தில் உள்ள மன்னார் வளைகுடாவில் இரண்டு தீவுகள் முன்னரே மூழ்கிவிட்ட சூழலில், மேலும் ஒரு தீவு வேகமாக மூழ்கி வருவதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
தீவுகள் மூழ்குவது, வர இருக்கும் ஒரு பேராபத்துக்கான சமிக்ஞை என எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்
மன்னார் வளைகுடாவின் செழுமை
ராமேசுவரம் முதல் கன்னியாகுமரி வரை 350 கி.மீ. கடல்பரப்பில் 10,500 சதுர கி.மீ. பரப்பளவை கொண்ட மன்னார் வளைகுடா பகுதி 1986 ஆம் ஆண்டு கடல்வாழ் தேசிய பூங்காவாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. பின்னர், 1989 ஆம் ஆண்டு கடல்வாழ் உயிர்கோள காப்பமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
இந்த பகுதியில் 4,223 கடல் வாழ் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அழிந்து வரும் இனமான கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் அடங்கும் என்கிறது தமிழக அரசின் சூழலியல் பிரச்சனைகளுக்கான மையம்.
இந்த மன்னார் வளைகுடா பகுதியில், சிங்கில் தீவு, குருசடை தீவு, புள்ளிவாசல் தீவு,பூமரிச்சான் தீவு, மனோலிபுட்டி தீவு, மனோலி தீவு, முசல் தீவு, முள்ளி தீவு, வாழை தீவு, தலையாரி தீவு,பூவரசன்பட்டி தீவு,அப்பா தீவு, வான்தீவு, காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, விலங்குசல்லி தீவு, உப்புத்தண்ணி தீவு, புலுவினிசல்லி தீவு, நல்ல தண்ணி தீவு, ஆனையப்பர் தீவு, வாலிமுனை தீவு என 21 தீவுகள் உள்ளன.
இதில், தூத்துக்குடி குழுவில் 4 தீவுகளும், வேம்பார் குழுவில் 3 தீவுகளும் கீழக்கரை மற்றும் மண்டபம் குழுவில் தலா 7 தீவுகளும் அமைந்துள்ளன.
மூழ்கும் தீவுகள்
தூத்துக்குடி குழுவில் இருந்த விலங்குசல்லி தீவு, கீழக்கரை குழுவில் பூவரசன்பட்டி ஆகிய 2 குட்டி தீவுகள் கடலில் மூழ்கிவிட்டன.
மன்னார் வளைகுடாவின் கடலோர மேலாண்மை, காலநிலை மாற்றம் மற்றும் வளம் குன்றா வாழ்வு குறித்து ஓர் ஆய்வை நடத்தி மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பித்த நபார்ட், இந்த தீவுகள் மூழ்க முக்கிய காரணம் காலநிலை மாற்றம் எனக் குறிப்பிட்டது. அதிகளவில் பவளப்பாறைகள் சுரண்டப்படுவதும் இந்த தீவுகள் அழிய முக்கிய காரணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது,
ஏற்கெனவே இரண்டு தீவுகள் மூழ்கிவிட்ட சூழலில், கடந்த ஒரு தசாப்தமாக வான் தீவும் வேகமாகச் சுருங்கி வருவது பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும் வந்துள்ளன.
2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆய்வுக் கட்டுரை, 1986 ஆம் ஆண்டு 16 ஹெக்டேராக இருந்த இந்த தீவின் பரப்பளவு 2013 ஆம் ஆண்டில் 5.7 ஹெக்டேராக சுருங்கி இருக்கிறது என்று கூறுகிறது.
சுகந்தி தேவதாசன் கடல்வாழ் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த கே. திரவியராஜ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது.
இதே வேகத்தில் தீவு மூழ்கினால், 2022ஆம் ஆண்டுக்குள் வான் தீவு முழுமையாக கடலுக்குள் மூழ்கும் என சுட்டிக்காட்டுகிறது மற்றொரு ஆய்வு.
சுகந்தி தேவதாசன் கடழ்வாழ் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 2014 ஆம் ஆண்டு வரை மேற்கொண்ட ஆய்வில் மன்னார் வளைகுடாவில் உள்ள பல தீவுகள் வேகமாகச் சுருங்கி வருவதாக சுட்டிக்காட்டியது. கடல் அரிப்பு இதே வேகத்தில் அதிகரித்தால் குறிப்பாக காசுவார் தீவு, காரைச்சல்லி தீவு, 2036ஆம் ஆண்டுக்குள் முழுமையாக மூழ்கும் என்று குறிப்பிடுகிறது.
காரணமும் தாக்கமும்
காலநிலை மாற்றம், கடல் அரிப்பு என பல்வேறு காரணங்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் ஆய்வாளர்கள்.
கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் நாராயணி சுப்ரமணியன், "காலநிலை மாற்றம் முக்கிய காரணமென்றாலும் காலநிலை மாற்றம் கடல் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வு இந்தியாவில் மிகவும் குறைவு. கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த கோணத்தில் ஆய்வுகள் நடைபெறுகின்றன" என்கிறார்.
இந்த தீவுகளை அண்மையில் பார்வையிட்ட பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் பொறியாளர் வீ. பிரபாகரன் அந்த பகுதியில் காலம்காலமாக இருந்து வரும் பூர்வகுடி மீனவர்களுக்கும் அந்த தீவுகளுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டதும் இந்த தீவுகள் மூழ்குவதற்கு ஒரு காரணம் என்கிறார்.
அந்த தீவுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக இருக்கிறது. முன்பு அந்த பகுதிகளில் இந்த மீனவர்கள் சர்வசாதாரணமாகப் போய் வந்து கொண்டிருந்தனர். அதாவது உள்ளூர் மக்களின் கண்காணிப்பில் அந்த தீவுகள் இருந்தன. இப்போது அவர்கள் அங்கு செல்ல தடைவிதிக்கப்பட்டதும், வெளியாட்கள் அந்த பகுதிக்குச் சென்று பவளப் பாறைகளை எடுக்கின்றனர். இது அந்த தீவுகள் மெல்ல சுருங்குகின்றன என்கிறார் வீ. பிரபாகரன்.
ஆய்வாளர் நாராயணி சுப்ரமணியன், "இது ஏதோ கடல் சார்ந்த பிரச்சனை நமக்கு ஏதும் பாதிப்பு இல்லை என யாரும் கருத முடியாது. தீவுகள் மூழ்குகின்றன என்றால் கடல்மட்டம் உயர்கிறது என்பது பொருள். இது நேரடியாக நம் எல்லாருடைய வாழ்விலும் வரும் காலங்களில் தாக்கம் செலுத்தப் போகிறது," என்று தெரிவிக்கிறார்.
மேலும், "கடல் நீர் அமிலமாதல், கடல் நீர் வெப்பமயமாதல் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் காரணமாக மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் புலம்பெயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது மீனவர்கள் வாழ்வாதாரத்தை சிதைக்கும்," என்று கூறுகிறார் நாராயணி.
வீ. பிரபாகரன், "மன்னார் பகுதியில் நண்டு வகைகளான களிநண்டு, சம்பாரை, ஒலாகா, இறால் வகைகளான சிங்கி இறால், வெள்ளை இறால் மற்றும் மீன் வகைகளான சீலா, பாறை, வேளாமீன் ஆகியவை கணிசமாக குறைந்து வருவதாக கூறுகிறார்கள் அந்தப் பகுதி மீனவர்கள். பவளப் பாறைகள் சுரண்டப்படுவது, பெரிய ட்ராலர்களில் மீன் பிடிப்பது, காலநிலை மாற்றம் இவைதான் இதற்கு காரணம். அந்த தீவுகள் மூழ்குவதற்கும் இதுதான் காரணம். அந்த தீவுகளை எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் அந்த பகுதி கடல் வளத்தையும் காப்பாற்ற முடியும். மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மீட்க முடியும்," என்கிறார்.
இதே போன்ற பார்வையைத்தான் முன் வைக்கிறார் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின்.
கடலோடிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசியும், எழுதியும் வரும் இவர், இந்த தீவுகளைச் சுற்றி இருக்கும் பகுதிகளை சார்ந்து இருப்பது பாரம்பர்ய மீனவர்கள்தான். அந்த தீவுகளில் ஏற்படும் சிறு மாறுதல்களும் இந்த மக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் என்கிறார்.
மேலும் அவர், இந்த தீவுகள் மூழ்குவது வர இருக்கும் ஆபத்தைக் குறிக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.
கடலோடிகளின் பிரச்சனகள் குறித்து 1000 கடல் மைல், மன்னார் கண்ணீர்க் கடல், மூதாய் மரம், அணியம், கரைக்கு வராத மீனவத் துயரம் ஆகிய நூல்களை எழுதி இருக்கிறார் வறீதையா கான்ஸ்தந்தின்.
கடல்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதன் தாக்கம் இந்த தீவுகளில் உடனடியாக தெரிகிறது. சென்னையில் கரை நிலப் பகுதிகள் கடலுக்குள் செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை இது உணர்த்துகிறது என்கிறார் வறீதையா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :