You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர்: பாஜக தலைவர், தந்தை, சகோதரர் சுட்டுக்கொலை - நடந்தது என்ன?
- எழுதியவர், மஜித் ஜஹாங்கிர்
- பதவி, பிபிசி
இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் மற்றும் அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த யூனியன் பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
தங்களது வீட்டுக்கு அருகில் நடத்தி வரும் சொந்த கடை ஒன்றில் இவர்கள் மூவரும் நேற்று மாலை இருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரியை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதாக காஷ்மீர் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் வாசிம் பாரி, அவரது தந்தை பஷீர் அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் காயமடைந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரும் துரதிருஷ்வடமாக இறந்துவிட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீரில் நடந்த இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி விசாரித்ததாகவும், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலக அதிகாரி ஜிதேந்திர சிங் நேற்றிரவு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
காஷ்மீரில் தேசியவாதத்தின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இந்த தாக்குதல் என்று பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய பாஜகவின் ஜம்மு, காஷ்மீருக்கான செய்தித்தொடர்பாளரான அனில் குப்தா, "இதுபோன்ற தாக்குதல்கள் காஷ்மீரில் எங்களது குரலை மட்டுப்படுத்தாது. கடந்த மூன்றாண்டுகளாக வாசிம் பாஜகவின் மாவட்ட தலைவராக இருந்து வந்தார். மிகவும் சுறுசுறுப்பான தொண்டரான அவர், சமூக சேவைகளையும் செய்து வந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்தபோது நாங்கள் அதிர்ந்துவிட்டோம். தங்களுக்கு சொந்தமான கடையில் அவர்கள் இருந்தபோது, அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுடத் தொடங்கினர்" என்று அவர் தெரிவித்தார்.
"இது காஷ்மீரில் தேசியவாத குரலை அடக்குவதற்கான தெளிவான செய்தி. ஒரு மாதத்திற்கு முன்புதான், ஒரு பயங்கரவாத அமைப்பு பாஜக தொண்டர்களுக்கு மிரட்டல் விடுத்திருந்தது. இதுபோன்ற செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, "இது கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்; முழு கட்சியும் துயரமடைந்த குடும்பத்துடன் நிற்கிறது. அவர்களின் தியாகம் வீணாகாது என்று நான் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மற்ற அரசியல் கட்சிகளும் இந்த சம்பவத்தை ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்று கண்டித்துள்ளன.
"பாஜக தொண்டர் மற்றும் அவரது தந்தை மீது நடத்தப்பட்ட தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். துயரத்தில் வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல்வாதிகள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வருவது வருத்தமளிக்கிறது" என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உயிரிழந்த பாஜக தலைவரின் எட்டு பாதுகாப்பு காவலர்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தாக்குதல் நடந்த நேரத்தில் இறந்தவர்களுடன் பாதுகாப்பு காவலர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தாக்குதல் தொடுத்தவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: