You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாத்தான்குளம்: இறந்தவரின் தாய் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை - மகன் அடித்துக் கொல்லப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குக்கு முன்னரே வேறு ஓர் இளைஞர் காவல் மரணம் அடைந்ததாக கூறப்படும் வழக்கில் தமிழக உள்துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த மே 18 ஆம் தேதி பேய்குளத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் தனது மகன் துரைக்கு தொடர்பு இருப்பதாக கூறி உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் மே 22ஆம் தேதி எனது வீட்டிற்கு வந்து எனது மகன் துரை பற்றி விசாரித்தார், என்று தெரிவித்திருந்தார்.
"மே 23 ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் எனது சகோதரி வீட்டிற்கு சென்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர் எனது மகன் துரை இல்லாத நிலையில் இளைய மகன் மகேந்திரனை காவல் நிலைத்துக்கு அழைத்துச் சென்றனர்."
"இரண்டு நாட்கள் காவலில் மகேந்திரனை காவல்துறையினர் தாக்கியதில் தலை உட்பட பல இடங்களில் காயம் ஏற்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்."
"இந்நிலையில், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் - பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்திருக்கும் நிலையில் எனது மகன் இறப்பு குறித்து முறையாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை."
"ஆகவே எனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும் எனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்," எனக் கோரி மகேந்திரனின் தாயார் வடிவு வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் இது குறித்த விரிவான பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது.
இது தொடர்பாக, தமிழக உள்துறைச் செயலர், தமிழக காவல்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி, காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: