சாத்தான்குளம் சம்பவம்: ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்த தமிழக அரசு

காவல்துறையினர்ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை பயன்படுத்திக்கொள்ள இருந்த அனுமதியை ரத்துசெய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சாத்தான் குளம் சம்பவத்தை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழக காவல் துறைத் தலைவரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி, ஃப்ராண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்திக்கொள்ள அளிக்கப்பட்டிருந்த அனுமதி ரத்துசெய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் தந்தை - மகன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சாத்தான் குளம் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் தவிர, தன்னார்வலர்களாக இருந்த இளைஞர்கள் சிலரும் தாக்குதலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.

இந்தத் தன்னார்வலர்கள் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறிய நிலையில், ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினர் அதனைக் கடுமையாக மறுத்தனர். இதற்குப் பிறகு, சில மாவட்டங்களில் வாய்மொழி உத்தரவாக ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் தன்னார்வலர்களைப் பயன்படுத்திக்கொள்ள அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தடை விதித்தனர்.

இந்த அமைப்பை முழுமையாகத் தடை செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட அங்கீகாரம் குறித்து கேள்வியெழுப்பியது.

இந்த நிலையில்தான் அந்த அமைப்பை பயன்படுத்த வழங்கப்பட்ட அனுமதியை மாநில அரசு ரத்துசெய்துள்ளது.

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு, 1993ல் ராமநாதபுரத்தில் அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பிரதீப் வி. பிலிப்பால் துவங்கப்பட்டது. மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்பும் நோக்கில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, 1994 செப்டம்பர் 12ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை பயன்படுத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணைதான் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் - வழக்கின் பின்னணி

சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.

ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல் துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஜூன் 19ஆம் தேதியன்று பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.

இதற்குப் பிறகு, பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜை கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூன் 22) இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.

இந்த மரணங்களால் தமிழகம் மட்டுமல்லாது சர்வதேச அளவில் காவல்துறை அத்துமீறல்கள் குறித்த விமர்சனங்கள் எழுந்தன.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உதவி சார்பு ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலராக இருந்த முருகன் மற்றும் காவலராக இருந்த முத்துராஜ் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிபிஐ அந்த வழக்குகளை முறைப்படி ஏற்றுக் கொள்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டிருப்பதாக தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தது.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :