சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: மேலும் 5 போலீசார் கைது

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மேலும் ஐந்து போலீசார் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி. போலீசார், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து இன்று, புதன்கிழமை, அதிகாலை முதல் சாத்தான்குளம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர்கள் உட்பட சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 14 போலிசாரிடம் சிபிசிஐடி போலீசார் தூத்துக்குடியில் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில்,இன்று இரவு தந்தை மகன் உயிரிழப்பு சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் , சாமதுரை, ஆகிய 5 போலீசாரையும் கைது செய்த சிபிசிஐடி போலீசார் தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய தலைமைக்காவலர் ரேவதியிடம் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கினர்.

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆஜர்படுத்திய போது சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரை தான் தவறு செய்யவில்லை என்றும் தன்னை வழக்கில் சேர்த்து விட்டதாக அதிகாரிகளையும், பத்திரிகையாளர்களையும் தகாத வார்த்தைகளில் திட்டினார்.

சிபிஐ வழக்குப்பதிவு

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும் என தமிழக அரசு கூறியிருந்தது.

சிபிஐ அந்த வழக்குகளை முறைப்படி ஏற்றுக் கொள்வதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டிருப்பதாக தமிழக அரசு சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இன்று காலை சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான இரு வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில், அந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள் குழு, தமிழகம் வந்து விசாரணையை தொடங்கவுள்ளது.

தற்போது அந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி தமிழ்நாடு காவல்துறையின் மாநில குற்றப்புலனாய்வுத்துறை விசாரித்து வருகிறது.

எனவே, அவர்கள் வசம் உள்ள வழக்கு ஆவணங்கள், தமிழகம் வரும் சிபிஐ விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள், அந்த வழக்கு விசாரணைக்கான களப்பணியைத் தொடங்குவார்கள் என்று டெல்லியில் உள்ள சிபிஐ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கைது - வழக்கின் பின்னணி

சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.

ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல் துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஜூன் 19ஆம் தேதியன்று பென்னிக்ஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.

இதற்குப் பிறகு, பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜை கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூன் 22) இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.

இந்த மரணங்களால் தமிழகம் மட்டுமல்லாது சர்வதேச அளவில் காவல்துறை அத்துமீறல்கள் குறித்த விமர்சனங்கள் எழுந்தன.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உதவி சார்பு ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் தலைமைக் காவலராக இருந்த முருகன் மற்றும் காவலராக இருந்த முத்துராஜ் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: