கோவிட் 19: கொரோனா தடுப்பூசி 2021க்கு முன்பு கிடைக்காது - சர்ச்சைக்குள்ளான மத்திய அரசு

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு குறித்து, மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் முக்கிய தகவல்கள் நீக்கப்பட்டுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் கூறியிருந்ததது.
இதைத் தொடர்ந்து தடுப்பூசி குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த கட்டுரையில், பாரத் பயோடெக் கோவாக்சின் (COVAXIN) மற்றும் ஜைடஸ் கேடிலாவின் ஜைகோவ்-டி (ZyCov-D) தடுப்பூசி கண்டுபிடிப்பும், இதை மனிதர்கள் மீது சோதனை நடத்தக் கிடைத்த அனுமதியும், கொரோனா முடிவின் தொடக்கத்தைக் குறிக்கிறது என டி.வி. வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார்,
அத்துடன், ஆறு இந்திய நிறுவனங்கள் கோவிட்-19க்கான தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகின்றன. இரண்டு இந்தியத் தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி ஆகியவற்றுடன் சேர்த்து உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட 140 தடுப்பூசிகளில் 11 தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைகளில் உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
இதில் முக்கிய தகவலாக, இந்த தடுப்பூசிகள் எதுவும் 2021 க்கு முன்னர் வெகுஜனப் பயன்பாட்டிற்கும் வர வாய்ப்பில்லை என்பதையும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.


மருந்து 2021க்கு முன்பு மக்கள் பயன்பாட்டுக்கு வ ராது என்ற தகவலையும் சேர்த்து இந்த கட்டுரையை தனது இணையதளத்தில் வெளியிட்ட மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவகலம், பின்னர் இந்த குறிப்பிட்ட தகவலை மட்டும் நீக்கியுள்ளது.

பட மூலாதாரம், PIB
ஆகஸ்ட் 15-ல் தடுப்பூசி வரும் என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கருத்துக்கு எதிர்க் கருத்தாக 2021க்கு முன்பு மருந்து கிடைக்காது என விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், இந்த தகவல் நீக்கப்பட்டது குறித்து பலரும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர், இருந்தபோதிலும், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணையத்தில் இந்த கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பில், முழு பதிப்பும் உள்ளது. அதில் எந்த கருத்துகளும் இன்னும் நீக்கப்படவில்லை.
கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொடுத்த காலக்கெடுவுக்குள் பரிசோதனைகளை முடிப்பது சாத்தியமா என்று கேட்டு பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
’’இவ்வளவு குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்வதற்கு சாத்தியமே இல்லை. தடுப்பு மருந்து உருவாக்கத்தை எவ்வளவு துரிதப்படுத்தினாலும் அதனை செய்து முடிக்க குறைந்தது 12-18 மாதங்களாகும். அதைவிட குறைவான காலத்தில் தடுப்பு மருந்தை தயாரிப்பது என்பது சாத்தியமில்லாத காரியம்’’ என்று மகாராஷ்டிர அரசின் கொரோனா தடுப்பு குழுவின் உறுப்பினரான மருத்துவர் ஷஷாக் ஜோஷி பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












