சாத்தான்குளம் கொலை வழக்கு: ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளம் கொலை வழக்கு: ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் தந்தை, மகன் மரணமடைந்த கூறப்படும் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் இன்று மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உதவி சார்பு ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதுகாப்பு காரணங்கள்

இந்நிலையில் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் இன்று மாலை திடீரென மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட சிறையில் பாதுகாப்பு பிரச்சனை உள்ளதால் சிறைத்துறை நிர்வாகம் அவர்களை மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Presentational grey line

Police Revathi husband:விடிய விடிய தாக்கியது உண்மை;காவல்துறை ஆதரவில்லை

Presentational grey line

நடவடிக்கை எடுக்கப்படும்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இணையதளங்கள், சமூக ஊடகங்களில் தவறான கருத்துகள் பரப்பினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இணையதளங்கள், சமூக ஊடகங்களில் சிலர் தவறான கருத்துகள் உள்நோக்கத்துடன் பரப்பி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அது பாதிக்கும்.

சிபிசிஐடி இந்த வழக்கை நேர்மையாகவும், நடுநிலையாகவும் விசாரித்து வருகிறது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறது.

சமூக ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம். இந்த வழக்கு சம்பந்தமாக உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பகிரக் கூடாது என சிபிசிஐடி ஐஜி சங்கர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: