கொரோனா வைரஸ் சமூக முடக்கம்: சென்னை, மதுரை - புதிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் என்னென்ன? - விரிவான தகவல்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா பரவலை குறைக்க சென்னை நகரத்தில் நீடிக்கப்பட்டிருந்த ஊரடங்கு நாளை முடிவடைவதால், மறு உத்தரவு வரும்வரை மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளின் படி, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட உணவகங்களில் காலை 6 முதல் இரவு 9 மணி வரை பார்சல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களோடு இணைந்து தொலைபேசி மூலம் ஆன்லைன் ஆர்டர் மூலம் வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9:00 மணி வரை மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளது. அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேநீர் கடைகளில் (பார்சல் மட்டும்) காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதி.
- காய்கறி கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயங்க அனுமதி.
- வணிக வளாகங்கள் (மால்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் நகை, ஜவுளி போன்றவை) ஏற்கனவே அறிவித்து இருந்த வழிமுறைகளுடன் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படலாம்.
- மற்ற செயல்பாடுகளைப் பொருத்தவரை, 19.6.2020க்கு முன்னர் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்டு ஊரடங்கில் அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

மதுரை நிலவரம்:
கொரோனா பரவல் அதிகரித்த காரணத்தால் மதுரை மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்னதாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், மதுரையில் சில தளர்வுகளுடன் ஜூலை மாதம் 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு ஊரடங்கு ஜூன் மாதம் 25ம் தேதி முதல் ஜூலை மாதம் 5ம்தேதி வரை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த முழு ஊரடங்கின்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், கொரோனா நோய்த்தொற்றினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முழு ஊரடங்கினை மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் மேலும் 7 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும். கட்டுப்பாட்டுப் பகுதிகளில், எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும். இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது என கூறியுள்ள முதல்வர், பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், பொது இடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













