You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிக்டாக் தடையால் சீன நிறுவனத்துக்கு 45,000 கோடி ரூபாய் இழப்பு
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ் திசை - டிக் டாக் தடையால் இழப்பு
இந்தியாவில் டிக்-டாக் மீது விதிக் கப்பட்ட தடையால், அதன் தாய் நிறுவனமான பைட்-டான்ஸ் நிறுவனத்துக்கு ரூ.45,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என சீன அரசு ஊடகம் கருத்து தெரிவித்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
சீன செயலிகளை தடை செய்யும் இந்திய அரசின் முடிவால் டிக்-டாக், ஹலோ செயலி ஆகியற்றின் தாய் நிறுவனமான 'பைட்-டான்ஸ்'-க்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும். செல்போன் செயலிகளை ஆய்வு செய்யும் 'சென்சார் டூவர்' நிறுவனம் அளித் துள்ள புள்ளிவிவரப்படி, கடந்த மே மாதம் டிக்-டாக் செயலி 11.2 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட் டுள்ளது என சீன அரசு ஊடக மான 'குளோபல் டைம்ஸ்' கட்டுரையை மேற்கோள் காட்டி இந்து தமிழ் திசை கூறுகிறது.
அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்யப்பட்டதை விட இரு மடங்கு இந்தியாவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு தடை விதித்ததால், சீன முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் நம்பிக்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக்-டாக் செயலிக்கு முக்கிய வருவாய் ஆதார நாடாக இந்தியா இல்லாவிடினும் அந்த செயலியை அதிகம் பதிவிறக்கம் செய்த முன் னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்திய சந்தையில் பைட்-டான்ஸ் சுமார் ரூ.7,473 கோடி முதலீடு செய்துள்ளது என்கிறது அந்தச் செய்தி.
தி இந்து - 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமிட வறுபுறுத்தப்பட்டு கொலை
டெல்லி மத வன்முறையில் பிப்ரவரி 25 மாலை முதல் பிப்ரவரி 26 பின்னிரவு வரை கொல்லப்பட்ட ஒன்பது முஸ்லிம் இளைஞர்களும், அவர்கள் கொலை செய்யப்படும் முன்பு ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட வற்புறுத்தப்பட்டனர் என்று டெல்லி காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொல்லப்படும் முன்பு அவர்கள் ஆடைகள் களையப்பட்டு, தாக்கப்பட்டனர் என்கிறது அந்த செய்தி.
அவர்கள் அனைவரின் உடல்களும் பாகீரதி விகார் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டன.
இந்த ஒன்பது முஸ்லிம் இளைஞர்களைக் கொலை செய்ததாக கைதாகியுள்ள நபர்கள் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர் இவர்கள் அனைவரும் 'கத்தார் இந்து ஏக்தா' வாட்ஸ்அப் குழுவில் உறுப்பினராக இருந்தவர்கள்.
இந்தக் குழு இஸ்லாமியர்களை பழிவாங்குவதற்காக பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கப்பட்டது என்று அந்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் டெல்லியில், குடியுரிமைத் திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் போது உண்டான வன்முறையில் 51 பேர் கொல்லப்பட்டனர்.
தினத்தந்தி - இந்திய ரயில்வேயின் துல்லியமான நேரம்
இந்தியா முழுவதும் பொது முடக்கம், தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில், இந்திய ரயில்வே அனைத்து ரயில்களையும் சரியான நேரத்தில் இயக்கும் தனித்துவமான சாதனையை நேற்றைய தினம் படைத்துள்ளது என்கிறது தினத்தந்தி.
முடக்கநிலை அமலில் உள்ளதால் பல்லாயிரம் ரயில்கள் இயக்கப்படாமல், மிகச் சில சிறப்பு ரயில்களே இயக்கப்படுகின்றன.
நாட்டில் நேற்று இயக்கப்பட்ட 201 ரயில்களும் குறிப்பிட்ட நேரத்தில் அவை செல்லும் ரயில் நிலையத்தை சென்றடைந்ததாக இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஜூன் 23-ம் இயக்கப்பட்ட ரயில்களில், 99.54 சதவீதம் ரயில்கள் துல்லியமான நேரத்தில் அவை செல்ல வேண்டிய ரயில் நிலையங்களுக்கு சென்றடைந்துள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: