You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை
டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடை செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா - சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்தியாவில் திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக விளங்கும் டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், ஷேர்இட், யு.சி. புரௌசர் மற்றும் கிளாஸ் ஆஃப் கிங்ஸ் உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடைசெய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காரணம் என்ன?
"இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஊறுவிளைக்கும் வகையில் செயல்பட்டதால்" டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"கடந்த சில ஆண்டுகளில், தொழில்நுட்ப சந்தையில் இந்தியா ஒரு முதன்மையான நாடாக உருவெடுத்துள்ளது.
அதே நேரத்தில், 130 கோடி இந்தியர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பது தொடர்பாக மிகுந்த கவலைகள் எழுந்துள்ளன. இதுபோன்ற கவலைகள் நமது நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன. குறிப்பாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் இருக்கும் சில செயலிகள் திறன்பேசி பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்களை அங்கீகரிக்கப்படாத வகைகளில், விதிகளுக்கு புறம்பாக இந்தியாவிற்கு வெளியே உள்ள சர்வர்களில் பதிந்து வைப்பதாக பல்வேறு தரப்புகளில் இருந்து எங்களுக்கு புகார்களும், குற்றச்சாட்டுகளும், கவலைகளும் வந்தன" என்று இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றின் அடிப்படையிலும், இதுபோன்ற செயலிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறும் நம்பத்தகுந்த உள்ளீடுகளை அடிப்படையாக கொண்டும் இணைய வசதி உள்ள மற்றும் இணைய வசதி அல்லாத என அனைத்து வகையான அலைபேசிகளிலும் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கோடிக்கணக்கான இந்திய அலைபேசி மற்றும் இணைய பயன்பாட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதுடன் இந்திய மின்வெளியின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதி செய்வதை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
59 செயலிகள் என்னென்ன?
இந்திய அரசு தடைசெய்துள்ளதாக 59 திறன்பேசி செயலிகள் பட்டியலை கீழே உள்ள படத்தில் காணலாம்.
தடைசெய்யப்பட்டுள்ள செயலிகளில் சில முக்கியமானவற்றின் பயன்பாட்டை அறிவோம்.
டிக்டாக் - காணொளியை அடிப்படையாக கொண்ட சமூக ஊடகம்
ஷேர்இட் - திறன்பேசிகளுக்கிடையேயான கோப்புகள் பரிமாற்று செயலி
யு.சி. பிரௌசர் - இணைய உலாவி
பைடு மேப் - வரைபட செயலி
க்ளாஸ் ஆஃப் கிங்ஸ் - விளையாட்டு செயலி
ஹலோ - திறன்பேசி வழி சமூக ஊடகம்
வீசாட் - உடனடி தகவல் பரிமாற்ற சேவை
கேம் ஸ்கேனர் - கோப்பு உருவாக்க பயன்படும் செயலி
கிளீன் மாஸ்டர் - தேவையற்ற கோப்புகளை அழிக்க உதவும் செயலி
பிற செய்திகள்:
- சாத்தான்குளம்: சமூக ஊடகங்களில் அத்துமீறல்களை கொண்டாடும் சில போலீஸார் - காவல்துறை கூறுவது என்ன?
- "தமிழ்நாட்டில் மேலும் ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரைக்கவில்லை": மருத்துவர் குழு
- சாத்தான்குளம்: சமூக ஊடகங்களில் அத்துமீறல்களை கொண்டாடும் சில போலீஸார் - காவல்துறை கூறுவது என்ன?
- கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு - நான்கு பேர் உயிரிழப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: