சாத்தான்குளம்: சமூக ஊடகங்களில் அத்துமீறல்களை கொண்டாடும் சில போலீஸார்

சாத்தான்குளம் சம்பவத்தை கொண்டாடும் பதிவுகளை சில போலீஸார் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவது மக்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

விசாரணை சாவு

சாத்தான்குளம் சம்பவம் பற்றி சென்னை ஆயுதப்படை போலீஸை சேர்ந்த சதீஷ் முத்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அடுத்த ‘லாக்அப்’ டெத்துக்கு(போலீஸ் விசாரணையில் சாவு) ஆள் கிடைத்து விட்டது” என்பது போன்று சில கருத்துக்களை பதிவு செய்து அவதூறான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இதனை அடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவரை பணி இடைநீக்கம் செய்து சென்னை ஆயுதப்படை துணை ஆணையர் செளந்திரராஜன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

பலர் இருக்கின்றனர்

ஒருவர் மீது மட்டும்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது பல காவலர்கள் சாத்தான்குளம் சம்பவத்தை கொண்டாடும் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர் என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

இவ்வாறான பதிவுகள் அச்சம் தருவதாகவும், ஆரோக்கியமான குடிமை சமூகத்திற்கு இது நல்லதல்ல என்கின்றனர் அவர்கள்.

நாகப்பட்டினத்தை சேர்ந்த காவலர் ரமணன் ரோஹித் பகிர்ந்துள்ள ஃபேஸ்புக் பதிவில்,”பால் விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும், வாகனத்தை மறிப்போம், மாஸ்க் இல்லை, வித் அவுட் ஹெல்மட், வித் அவுட் சீட் பெல்ட் போன்ற வழக்குகளைப் பதிவு செய்வோம்,” என குறிப்பிட்டுள்ளார்.

பால் விற்பனையாளர்கள் காவலர்களின் வீடுகளுக்கு பால் கொடுக்க மாட்டோம் என அண்மையில் அறிவித்து இருந்தனர். இதனை அடுத்து ரமணன் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இது சர்ச்சையானதை அடுத்து இந்த பதிவு அவரால் நீக்கப்பட்டது.

இது தொடர்பாக ஊடகவியலாளர் கவின்மலர் பகிர்ந்துள்ள ஃபேஸ்புக் பதிவில், “காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எழுதி இருப்பதைப் பாருங்கள். இப்படி வெளிப்படையாக இதற்குமுன் பேசியிருப்பார்களா? மிரட்டியிருப்பார்களா? ஒப்புதல் வாக்குமூலம் தந்திருப்பார்களா? இந்த ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய நாகப்பட்டின காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், “இது நேரடியாக சாத்தான்குளம் விவகாரத்துடன் தொடர்புடையது அல்ல. நடத்தைவிதிகளின் படி அவர் பகிர்ந்தது தவறு. இது தொடர்பாக நாங்கள் விசாரணை செய்து வருகிறோம்,” என கூறினார்.

தண்டனை இல்லை என்பதே தைரியம்

போலீஸ் செய்யும் குற்றங்களில் அவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதே அவர்களுக்கு அபரிமிதமான தைரியத்தை தருகிறது. அந்த தைரியம்தான் இவ்வாறு வெளிப்படையாக சமூக ஊடகங்களில் மிரட்டல் விடுப்பதற்கு காரணமாக இருக்கிறது என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் அ. மார்க்ஸ்.

சாத்தான்குளம் சம்பவம் முதல் சம்பவமல்ல, இதற்கு முன் பல சம்பவங்களை போலீஸ் அரங்கேற்றி இருக்கிறது. அத்துமீறி இருக்கிறது. அவற்றில் அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் போலீஸார் இவ்வாறு மக்களை மிரட்டமாட்டார்கள். ஆனால், எப்போதும் போலீஸை அரசு காப்பாற்றவே பார்க்கிறது என்கிறார் மார்க்ஸ்.

பொதுமக்களே எஜமானர்கள்

இந்த சூழலில், குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி வெளியிட்டுள்ள காணொளியில், “பொதுமக்கள் நம்முடைய எஜமானர்கள். நாம் அவர்களுடையே சேவகர்கள் என்று எழுதி இருக்கு. இந்த சீருடை போடுவது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்கு தான். நான் ஒரு ஐபிஎஸ், நான் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், நான் ஒரு காவலன் என்று சொல்லி ஒரு இருமாப்போடு இருப்பதற்காக இந்த சீருடை அல்ல. இந்த சீருடை என்பது பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான்.” என குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்பை தட்டிக்கழிக்கவேண்டாம்: கமல்

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-வசம் ஒப்படைக்கும் தமிழக அரசின் முடிவை விமர்சித்து நடிகர், மக்கள் நீதிமையம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் செய்துள்ள பதிவு:

"சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே!குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள்.காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி" என்று குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: