கொரோனா பொது முடக்கம் தமிழகத்தில் மேலும் நீடிக்கப்படுகிறதா? - விரிவான தகவல்கள்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி: கொரோனா சமூக முடக்கம் தமிழகத்தில் மேலும் நீடிக்கப்படுகிறதா?

நாளையுடன் 5-ம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, தேவையான ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்கும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு, தாங்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையிலான முடிவுகளை, முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அடுத்து செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையை அளித்து வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலிலிருந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட சில முக்கிய மாவட்டங்களிலும் ஊரடங்குக்குள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தங்கள் ஆலோசனைகளை, எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்க உள்ளனர். இதன் அடிப்படையில் முக்கிய முடிவுகள் குறித்து தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கினை மேலும் நீட்டிப்பதா? அல்லது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தளர்த்துவதா? என்பது குறித்து முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்துக்கு பின்னர் எடுக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் குழு உடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது இவ்வாறு அந்நாளிதழ் விவரிக்கிறது.

இந்து தமிழ் திசை: 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் நா.புவியரசன் கூறினார் என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நேற்று பகலில் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப் பாக கிண்டி, அண்ணாநகர், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. திடீரென பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

தினமணி: சீன நிறுவனங்களிடமிருந்து பிஎம்-கேர்ஸ் நிதியம் பெற்றது நியாயமா?- ப. சிதம்பரம்

2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள பிஎம்-கேர்ஸ் நிதியம் பெற்றது நியாயமா? என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார் என்று அவர் ட்விட்டர் பதிவை மேற்கோள்காட்டி தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் ட்விட்டரில் பதிவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறுகிறது அந்நாளிதழ்.

"2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு?

சீன அதிபர் ஜீயும், இந்தியப் பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவிகின்றன! இது எப்படி இருக்கு?

சீனா எப்பொழுது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020 இல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்குப் பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களுடமிருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா?

2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது தவறு என்றால் 2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்?"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: