You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிக்டாக் உள்ளிட்ட செயலிகளின் தடை உலக வர்த்தக அமைப்பின் நெறிகளுக்கு எதிரானது: சீனா அறிக்கை
டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்து வெளியிட்ட உத்தரவை எதிர்த்து சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கவுன்சிலர் ஜி ரோங் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், இந்த நடவடிக்கை பாரபட்சமானது, உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சில சீன திறன் பேசி செயலிகளை ஜூன் 29-ம் தேதி இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தொடர்புடைய சட்டங்கள், நெறிமுறைகளைக் காட்டி தடை செய்துள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கும், இணக்கத்துக்கும், பாதுகாப்புக்கும், அரசு மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீனா இதனால் தீவிரமாக கவலை கொள்கிறது. உறுதியாக எதிர்க்கிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுத்தும், பாகுபாடு காட்டும் வகையிலும் சில சீன செயலிகளை குறிவைக்கிறது இந்தியாவின் இந்த நடவடிக்கை என்றும், தெளிவில்லாத பொத்தாம் பொதுவான வாதங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் இந்த அறிக்கை, இது உலக வர்த்தக நிறுவனத்தின் விதிகளை மீறுவதாக இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறது.
வெளிப்படையான செயல்முறைகளுக்கான தேவைக்கு இது எதிராக இருப்பதாக இந்த அறிக்கை இந்தியாவை குற்றம்சாட்டுகிறது.
"சர்வதேச வணிகத்தின் பொதுவான போக்குகளுக்கும், மின்னணு வணிகத்துக்கும் எதிராக இது இருக்கிறது. நுகர்வோர் நலனுக்கும், சந்தைப் போட்டிக்கும் இது எதிரானது" என்றும் சீனா தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட இந்த செயலிகளைப் பயன்படுத்துவோர் ஏராளமாக இந்தியாவில் இருப்பதாகவும், இந்திய சட்டங்களின் கீழும், நெறிமுறைகளுக்கு உட்பட்டுமே இச்செயலிகள் செயல்பட்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலிகள் செயல்படுவதற்காக உள்நாட்டில் வேலை செய்த இந்திய ஊழியர்கள், இந்த செயலிகள் மூலம் செயல்பட்ட பல படைப்பாளிகள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோரும் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய சீன வணிக ஒத்துழைப்பின் பரஸ்பரம் பலன் தரும் இயல்பை இந்தியா ஏற்றுக்கொள்ளும் என்றும், இந்தியத் தரப்பு தமது பாரபட்ச நடைமுறைகளை மாற்றிக்கொள்ளும் என்றும் எதிர்பார்ப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: