தமிழ்நாட்டில் 2710 பேருக்கு புதிதாக கொரோனா; நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் மருந்து

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2710 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 37 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 62,087ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் வைரஸ் கொல்லி மருந்து தரப்படுவதும், பிளாஸ்மா சிகிச்சையும் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மாநில சுகாதாரத் துறை அளித்துள்ள தகவல்களின்படி, இன்று அடையாளம் காணப்பட்ட 2710 பேரில் 2,652 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 6 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். மீதமிருப்பவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக டெல்லியில் இருந்து வந்தவர்களில் 8 பேருக்கும் கர்நாடகத்தில் இருந்து வந்தவர்களில் 10 பேருக்கும் இன்று நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.
கடந்த சில நாட்களாகவே, சென்னைத் தவிர்த்த பிற மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட 2710 பேரில் 1487 பேர் சென்னையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 126 பேரும் கோயம்புத்தூரில் 11 பேரும் கடலூரில் 50 பேரும் காஞ்சிபுரத்தில் 56 பேரும் மதுரையில் 153 பேரும் ராணிப்பேட்டையில் 50 பேரும் திருவள்ளூரில் 120 பேரும் திருவண்ணாமலையில் 130 பேரும் திருச்சியில் 52 பேரும் தூத்துக்குடியில் 57 பேரும் விழுப்புரத்தில் 40 பேரும் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சென்னை தவிர்த்து நான்கு நகரங்களில் கொரோனா தொற்று 100 என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.
சென்னையில் மட்டும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,752ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 3,872 பேரும் திருவள்ளூரில் 2,645 பேரும் காஞ்சிபுரத்தில் 1215 பேரும் இதுவரை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 26,592 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆகவே தமிழ்நாட்டில் செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 9,19,204 ஆக உயர்ந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 24 மணி நேரத்தில் 1358 பேர் குணமடைந்துள்ளனர். ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,112உயர்ந்திருக்கிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 27,178ஆக இருக்கிறது.
இன்று 37 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 30 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்நோய்த் தொற்றினால் 794 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 2 பேருக்கு வேறு எவ்வித இணை காரணிகளும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 27 பேர் ஆண்கள். 10 பேர் பெண்கள். 10 பேர் ஐம்பது வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் இரண்டு பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள்.


இதற்கிடையில் சென்னையில் வீடியோ பதிவு மூலம் அனுப்பப்பட்ட செய்தியாளர் அறிவிப்பில், முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட மார்ச் மாதம் முதலே தமிழ்நாட்டில்தான் சோதனைகள் அதிகம் செய்யப்பட்டுவருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
"தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் 7,77,680 சோதனைகள்தான் செய்துள்ளனர் ஆனால் நாம் 9,19, 204 லட்சத்து சோதனைகளைச் செய்துள்ளோம். இந்த நோய்க்கு மருந்தே கிடையாது. பல்வேறு சிகிச்சை முறைகளை ஒருங்கிணைத்து 55 சதவீத நோயாளிகளை குணப்படுத்தியுள்ளோம்" என்று கூறினார்.
மேலும், கொரோனாவிலிருந்து எப்போது விடுபட முடியுமென முதல்வரிடம் கேட்டபோது, கடவுளுக்குத்தான் தெரியுமென அவர் கூறியது தொடர்பான விமர்சனங்களுக்கும் விஜயபாஸ்கர் பதிலளித்தார். "முதல்வர் அதீத கடவுள் பக்தி கொண்டவர். அவர் யதார்த்தமாக பதில் சொன்னார். கடவுள் என்ற பெயரைக் கேட்டாலே எதிர்க்கட்சித் தலைவருக்கு கோபம் வருவது ஏன்?" எனக் கேள்வியெழுப்பினார்.
’’14814 மருத்துவ பணியாளர்கள் முதல்வரால் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் ஐயாயிரம் படுக்கைகள் உறுதிப்படுத்தியிருக்கிறோம். கோவிட் கேர் சென்டர்களில் 17,500 படுக்கைகள் மாநகராட்சியின் சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் 75 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் பைப் லைன்களை அமைக்க பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.`` என்றார் விஜய பாஸ்கர்.
மேலும் அவர்,``தமிழ்நாட்டில் பிளாஸ்மா சிகிச்சை ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் வெற்றிகரமாக செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் மருந்தும் டொசிலிமாப் மருந்தும் வாங்கப்பட்டு வழங்கப்பட்டுவருகிறது. முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு செய்த கொரோனா பரிசோதனையில், அவருக்கு அந்நோய் இல்லை எனத் தெரியவந்துள்ளது. ’’என்றார்.
பிற செய்திகள்:
- விஜய் மென்மையான கதாநாயகனாக இருந்து ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தது எப்படி?
- டிரம்ப் தேர்தல் பிரசாரத்தை முறியடிக்க வித்தியாசமான முயற்சியைக் கையாண்டி டிக்டாக் பயனர்கள்
- இந்தியா - சீனா எல்லை சிக்கல்: லே, லடாக் பகுதியில் தற்போது என்ன நிலவரம்?
- தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 53 பேர் பலி
- டெக்ஸாமெத்தாசோன்: கொரோனா மருந்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












