விஜய் மென்மையான கதாநாயகனாக இருந்து ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்தது எப்படி? #Vijay

பட மூலாதாரம், FACEBOOK
- எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
1995-ஆம் ஆண்டின் கோடை விடுமுறை காலம் அது. சென்னையில் உறவினர் வீட்டுக்கு வந்த நான், முதல்முறையாக நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு செல்கிறேன்.
மாணவ பருவத்தில் இருந்த எனக்கு, சென்னைக்கு வருவது மிகவும் அரிது. அதிலும் நட்சத்திர ஹோட்டலுக்கு செல்வது அரிதிலும் அரிது. காணும் காட்சிகள் அனைத்தும் எனக்கு வியப்பையும், சிலிர்ப்பையும் அளித்தன.
அந்த நட்சத்திர ஹோட்டலின் பிரம்மாண்ட வரவேற்பறையில் சில நண்பர்களுக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கையில், அங்கு நடிகர் விஜய் அமர்ந்திருந்ததை பார்த்தேன்.
யாரும் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கவில்லை. அவரை யாரும் வியப்பாக பார்க்கவில்லை. அவருக்கே உரித்த அமைதியான முகபாவத்துடன், யாரிடமும் பேசாமல் தன் உள்ளங்கையை பார்த்தபடி அமர்ந்திருந்தார் விஜய்.
தற்போது 2020-இல், சரியாக 25 ஆண்டுகள் கழித்து எந்த பொது இடத்திலும் எந்த இடையூறும், ரசிகர்கள் ஆரவாரமும் இல்லாமல் அமரும் வாய்ப்பு விஜய்க்கு இல்லை.
25 ஆண்டுகள் நிச்சயம் நீண்ட காலஅளவுதான். ஆனால் பல எதிர்பார்ப்புகளையும், கணிப்புகளையும் தாண்டி, அதிகளவு ரசிகர்கள் உள்ள நடிகர்களில் ஒருவராக விஜய் மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
தனது 46-ஆவது பிறந்தநாளை இன்று (ஜூன் 22) கொண்டாடும் நடிகர் விஜயை வாழ்த்தி அவரது எண்ணற்ற ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். ட்விட்டர் போன்ற சமூக ஊடகத்தில் அவரது பிறந்தநாள் தொடர்பான ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் உள்ளன.
தமிழ் திரையுலகில், வணிகம் மற்றும் ரசிகர்களின் ஆதரவு ஆகிய அளவுகோல்களை கொண்டு எல்லா காலகட்டங்களிலும் இரண்டு கதாநாயகர்கள் முன்னணி கதாநாயகர்களாக கருதப்படுவர்.
தியாகராஜ பாகவதர்-பி.யூ. சின்னப்பா, எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல் வரிசையில் வந்தவர்கள்தான் விஜய் மற்றும் அஜித்.
2000களில் தொடங்கி, 2010-20 வரையிலான தசாப்தம் என இந்த இரு நடிகர்களின் திரைப்படங்களின் வணிகம், இவர்களின் திரைப்படம் வெளியாகும்போது மற்ற சிறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற பேச்சு, எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களின் ரசிகர்களுக்கு இடையே சமூக ஊடகங்களில் நடக்கும் மோதல்கள் ஆகியவை இவர்களுக்கு சூப்பர்ஸ்டார் என்ற பிம்பத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் பாணி என்ன?
பெரும்பாலும் சிவாஜி மற்றும் கமல் ஆகியோரின் பாணி மற்றும் கதாபாத்திர தேர்வு சற்று மாறுபட்டதாக பார்க்கப்படும் சூழலில், எம்.ஜி.ஆர். ரஜினி, விஜய் மற்றும் அஜித் இவர்கள் நால்வருக்கும் ஒரு ஒற்றுமை இவர்கள் 'மாஸ் ஹீரோக்கள்' என கருதப்படுபவர்கள்.
அதிலும் மற்றவர்களை விட முற்றிலும் மாறுபட்ட கதாநாயகன் விஜய். எம். ஜி. ஆர், ரஜினி, அஜித் ஆகியோர் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த காலத்தில் இந்தியாவில் மாஸ் ஹீரோக்கள் உருவாக காரணமான 'Angry young man' கதாப்பாத்திரத்திலேயே பெரும்பாலும் நடித்திருப்பர்.
பாசமான அண்ணனாக, மகனாக, அநியாயத்தை தட்டிக் கேட்கும் இளைஞனாக எம்ஜிஆர் நடித்த ஆரம்பகால கதாப்பாத்திரங்கள் அவருக்கு திரையுலகிலும், பிற்காலத்தில் தமிழக அரசியலிலும் தனிப் பாதையை அமைத்து தந்தது எனலாம்.
தொடக்கத்தில் வில்லனாக சில படங்களில் நடித்த ரஜினிகாந்த், கதாநாயகனாக நடிக்க தொடங்கிய பிறகு, ஓரிரு திரைபடங்களைத் தவிர நீதிக்காக போராடும் இளைஞன் கதாப்பாத்திரத்திலேயே பெரும்பாலும் நடித்திருப்பார். அவரின் படத்தலைப்புகளும் அவ்வாறான பாணியிலேயே இருக்கும். இது அவரின் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பெரிதும் உதவியது.

பட மூலாதாரம், FACEBOOK PAGE
அஜித்தின் ஆரம்பகாலத்தில் சில காதல் படங்கள் வெற்றிகரமான திரைப்படங்களாக அமைந்தாலும், ஆவேசமான உடல்மொழியுடன் கூடிய சண்டை காட்சிகள், மாஸ் ஹீரோ படங்களில் வரும் பிரத்யேக வசனங்கள் ஆகியவை அவருக்கு அதிக வரவேற்பையும், ரசிகர்களையும் பெற்றுத்தந்தது. அவரது பாணியையும் மாற்றியது.
இவர்களை விட முற்றிலும் மாறுபட்ட பாணியே விஜய்யின் ஆரம்பகால திரைப்படங்கள். ஆரம்பத்தில் பெரும்பாலும் தனது தந்தையின் இயக்கத்தில் நடித்துவந்த விஜய், பிறகு மற்ற இயக்குநர்களின் நடிக்க தொடங்கினார்.
முதல் ஹிட் தந்த பூவே உனக்காக
அந்த காலக்கட்டத்தில் அவருக்கு பெயர் வாங்கித்தந்த கோயம்புத்தூர் மாப்பிள்ளை, பூவே உனக்காக மற்றும் லவ் டுடே போன்றவை காதல் மற்றும் நகைச்சுவை சார்ந்த படங்களே. இவை மட்டுமல்ல, மிகவும் வெற்றித் திரைப்படமாக அமைந்த காதலுக்கு மரியாதையும் இவ்வகை படம்தான்.
இவரது சமகால நடிகரும், போட்டியாளராகவும் கருதப்பட்ட அஜித் அக்காலகட்டத்தில் உல்லாசம், அமர்க்களம் போன்ற ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்தார். ஆசை, வாலி போன்ற ஆக்ஷன் திரில்லர்களும் அவற்றில் அடங்கும்.
ஆனால், அக்காலகட்டத்தில் வெளிவந்த விஜய் திரைப்படங்களில் மிக சிலவற்றை தவிர பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் காதல் சார்ந்த படங்களாகவே அமைந்தன. குஷி, மின்சார கண்ணா, பிரண்ட்ஸ், ஷாஜஹான் போன்ற வெற்றி படங்களும் இதற்கு உதாரணங்கள்.
ஆனால், 2003க்கு பிறகு நிலைமை முற்றிலும் மாறியது. ஆக்ரோஷமான சண்டை காட்சிகள், மாஸ் ஹீரோக்களுக்கு என எழுதப்படும் பிரத்யேக வசனங்கள், mass hero entry என கூறப்படும் படத்தில் ஹீரோ தோன்றும் ஆரவாரமான முதல் காட்சி ஆகியவை வழக்கமான விஜய் திரைப்படங்களில் இருந்து மாறுபட தொடங்கியது.
2010க்கு பிறகு விஜய்யின் திரைப்படங்களில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம்பெறத் தொடங்க, அது வேறு சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. தலைவா திரைப்படத்தில் தொடங்கி அதற்கு பிறகு வெளிவந்த அவரின் பல படங்கள் சில பிரச்னைகளையும், எதிர்வினைகளையும் சந்திக்க வேண்டியதாயிற்று.
திரையுலகில் விஜய் கடந்துவந்த பாதை குறித்தும், தற்போதைய காலகட்டத்தில் அவரின் திரைப்படங்கள் மற்றும் திரைப்பட விழாக்களில் அவரின் பேச்சுக்கள் ஆகியவை கூடுதல் கவனம் பெறுவது குறித்தும் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் 'கருந்தேள்' ராஜேஷ் பிபிசி தமிழிடம் பேசினார்.
''கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா போன்ற பல இந்திய மாநிலங்களை விட தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகியவை நடிகர்களை கொண்டாடும், அதிக அளவில் துதி பாடும் மனப்பான்மை கொண்ட மாநிலங்கள். இதனை சில ஹீரோக்கள் மிக சரியாக பயன்படுத்தி கொள்கின்றனர். இதுவும் ஒருவகை திறமை என்றே கூறலாம்'' என்றார்.
விஜயின் வெற்றியில் எஸ்.ஏ. சந்திரசேகரின் பங்கு என்ன?
''அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு கதாநாயகர்கள் அப்படிப்பட்ட மாஸ் ஹீரோக்களாக இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது அஜித் மற்றும் விஜய் உள்ளனர்''
''விஜயை பொறுத்தவரை அவர் ஒரு முன்னணி இயக்குநரின் மகன். குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய அவர், தனது தந்தையின் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தில் முதல்முறையாக இளம் கதாநாயகனாக விஜய் தோன்றினார்'' என்று 'கருந்தேள்' ராஜேஷ் மேலும் கூறினார்.
''பெரும்பாலும் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நடித்துவந்த விஜய்க்கு முதல்முறையாக ஒரு பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது விக்ரமனின் பூவே உனக்காகதான்.
ஆனால், முதல் நான்கைந்து படங்களில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது அவை அவரின் தந்தையின் இயக்கத்தில் வெளிவந்ததால் என்பதே. இதே வாய்ப்பு திறமையிருந்தாலும், பின்னணி எதுவுமில்லாத ஒரு புதிய ஹீரோவுக்கு கிடைத்திருக்குமா?
லவ்டுடே மற்றும் காதலுக்கு மரியாதை
ஒரு சூப்பர் ஸ்டாராக உருவெடுக்க விஜயின் திரையுலக வாழ்க்கையில் நிச்சயம் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பெரும் பங்குள்ளது. இதனை விஜய் கூட மறுக்க மாட்டார்'' என்று ராஜேஷ் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Karunthel Rajesh FB
''இதற்கு பிறகு பாலசேகரனின் இயக்கத்தில் 1997-இல் வெளிவந்த லவ் டுடே தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஒரு தனி இடத்தை பெற்று தந்தது. அதே ஆண்டில் வெளிவந்த காதலுக்கு மரியாதை, அந்த இடத்தை உறுதி செய்தது'' என்றார்.
விஜயின் தனித் திறமைகள் என்னவென்று கேட்டதற்கு பதிலளித்த ராஜேஷ், ''நடிப்பு என்று பார்த்தால் விஜய் தன்னை பெரிதாக வளர்த்து கொள்ளவில்லை. இதே பிரச்சனை அஜித்திடமும் உள்ளது. நடிப்பு என்ற முக்கிய அம்சத்தில், அஜித் மற்றும் விஜய் இருவருமே தங்களை மெருகேற்றி கொள்ளவில்லை என்றே கூறலாம்'' என்று குறிப்பிட்டார்.
''அதேவேளையில் நடனத்தில் தனி கவனம் செலுத்தி தன்னை அதில் விஜய் மெருகேற்றி கொண்டார். அதேபோல் நகைச்சுவை கதாபாத்திரங்களில் அவரது நடிப்பு நன்றாக பொருத்தும். பிரெண்ட்ஸ், கில்லி, சிவகாசி போன்ற பல படங்கள் இதற்கு உதாரணம்'' என்று ராஜேஷ் மேலும் தெரிவித்தார்.
திருமலைக்கு முன்பும், பின்பும்
''முதல் 10, 11 ஆண்டுகளில் ஓரிரு படங்களைத் தவிர பெரும்பாலும் மென்மையான கதாநாயகனாக காதல் அல்லது நகைச்சுவை சார்ந்த படங்களில் நடித்து வந்த விஜய் 2003-இல் திருமலை திரைப்படத்தில் நடித்தார். இது ஒரு முழு ஆக்ஷன் திரைப்படம். இந்த படம் ஹிட்டானது. விஜய்யின் பாணியும் அப்போது தான் மாறியது''.
இதற்கு அடுத்த ஆண்டில் வெளிவந்த கில்லியும் ஆக்ஷன் திரைப்படமே. இது விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து மதுர, திருப்பாச்சி, சிவகாசி, ஆதி, போக்கிரி என அவர் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்தார்.
இதற்கு இடையே வெளிவந்த சச்சின் மட்டும் அவரது பழைய பாணி படமாக இருந்தது. அந்த படம் பெரிய வெற்றியும் பெறவில்லை. இதுவே தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடிக்கலாம் என்ற முடிவுக்கு அவர் வர காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.
''அழகிய தமிழ் மகன் திரைப்படத்துக்கு பிறகு அவர் நடித்த குருவி, சுறா போன்ற சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதற்கு அந்த படங்களில் இருந்த நம்பமுடியாத சண்டை காட்சிகளும் காரணம்''
''அதற்கு பிறகு காவலன், ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த நண்பன் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி ஆகியவை மீண்டும் விஜய்யை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றன'' என்று நினைவுகூர்ந்தார்.
''பக்கத்து வீட்டு பையன் போன்ற இயல்பான தோற்றம் கொண்ட விஜய் தற்போது எடுத்துள்ள அவதாரம் வேறு. அவர் அரசியலுக்கு வருவார் என்றும், அவரது சில பட வசனங்கள் அதை வெளிக்காட்டுவதாகவும் செய்திகளும், பேச்சுகளும் தற்போது இடம்பெறுகின்றன. ஆனால், அவர் அரசியல் குறித்து வெளிப்படையாக அறிவிக்காதவரை அதனை பற்றி மேலும் கூற எதுவும் இல்லை''.

பட மூலாதாரம், FACEBOOK
''தனது திரை வாழ்வில் குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள விஜய், இனி திரையுலகில் சாதிக்க வேண்டியது நல்ல திரைப்படங்களை தருவது தான். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பது நல்ல விஷயமாக அமையும். ஆனால், அதை அவர் செய்வாரா என்று தெரியவில்லை'' என்று ராஜேஷ் கூறினார்.
இனி விஜய் சாதிக்க வேண்டியது என்ன?
Soft spoken hero என்று கூறப்படும் மென்மையான கதாநாயகனாக ஆரம்பத்தில் இருந்து வந்த விஜய், திருமலை மற்றும் கில்லி திரைப்படங்களுக்கு பிறகு சினிமாவில் வேறு அவதாரம் எடுத்தார்.
விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரின் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். விஜயின் திரைப்பட வசனங்களில் வெளிப்படும் அரசியல் கருத்துக்கள் மட்டுமின்றி அவரது திரைப்பட விழாக்களும் தமிழக அரசியலில் உற்று கவனிக்கப்படுகிறது.
இவை ஒருபுறமிருக்க, விஜய் பேசுவது போல ''...ண்ணா'' என்று பேசி கைதட்டல் வாங்குவது கல்லூரி கலை விழாக்களில் மட்டுமல்ல, திரைவிழாக்களிலும் நடக்கிறது.
இளம் நடிகர்கள் பலர் விஜய்யுடன் இணைந்து நடிக்கவும், அவர் குறித்து பேசவும் விருப்பப்படுகின்றனர். இவை அனைத்தும் விஜய் கவனிக்கப்படுகிறார் என்பதையே விளக்குவதாக கூறப்படுகிறது.
தனது திரையுலகில் நல்ல உயரத்தையும், அதிக ரசிகர்களையும் பெற்றுள்ள நடிகர் விஜய், அவரது ரசிகர்களுக்கும், தமிழ் திரையுலகுக்கும் என்ன செய்யப் போகிறார் என்பது இயல்பாக அவரது பிறந்தநாளில் எழும் கேள்வி.
அரசியலுக்கு வருவதும், சமூக பணி செய்வதும் அவரது சொந்த விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால், ஒரு முன்னணி கதாநாயகனாக தன்னை போற்றும் அவரது ரசிகர்களுக்கும், மக்களுக்கும் தொடர்ந்து சிறந்த திரைப்படங்களை விஜய் அளிக்கிறாரா?
மாறுபட்ட கதாபாத்திரங்களில் ஏன் நடிப்பதில்லை என்று கேட்டால், 'எனது ரசிகர்களுக்கு என்னை இப்படி பார்க்கவே பிடிக்கிறது. எனது படம் முதலில் என் ரசிகர்களுக்கு தான்' என்பதே பெரும்பாலும் மாஸ் ஹீரோக்களின் பதிலாக இருக்கிறது.
ரசிகர்களின் விருப்பத்தை, ரசனையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதும், ஒரு தலைவனாக கருதப்படும் மாஸ் ஹீரோக்களின் பணியல்லவா?
பிகில் திரைப்படத்தில், தந்தை மற்றும் மகன் ஆகிய இரு கதாபாத்திரங்களில் நடித்த விஜய், இரு கதாபாத்திரங்களுக்கும் தேவையான வித்தியாசத்தை உடல் மொழியில், தோற்றத்தில் பிரதிபலித்தாரா என்ற கேள்வி அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் ஊடகங்களில் கேட்கப்பட்ட கேள்வி.
இந்த பொறுப்பு இயக்குநருக்கும் உண்டு என்றாலும், கதாபாத்திரத்தை, கதையை தேர்வு செய்ய, மாற்றம் செய்ய வாய்ப்புள்ள கதாநாயகனை நோக்கி அந்த கேள்வி எழுவது இயல்பான ஒன்றே.
விளையாட்டு கலாசாரம் பெரிதும் இல்லாத இந்தியாவில், விளையாட்டை மையமாக அல்லது ஒரு கருப்பொருளாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் பெரும் தாக்கத்தை, இளைஞர்களின் மனதில் வேட்கையை ஏற்படுத்தியுள்ளன. அப்படிப்பட்ட தாக்கத்தை பிகில் ஏற்படுத்தியதா?
ஆழமான திரைக்கதை மற்றும் அழுத்தமான வசனங்களால் சமூகத்தில் எண்ணற்ற மாற்றங்களை கொண்டு வர முடியும். தமிழகத்தை பொறுத்தவரை பல மேடை பேச்சுக்கள், புத்தகங்கள் சாதித்ததை மக்களின் அபிமானம் கொண்ட ஒரு கதாநாயகனின் படம் சாதிக்க முடியும்.
வழக்கமான கதாபாத்திரங்கள், திரைக்கதை பாணியில் இருந்து மாறி, தனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் திரையுலக ரசிகர்களுக்கும் வணிக ரீதியில் வெற்றி பெறும் ஆழமான, சமூக நலன் சார்ந்த திரைப்படங்களை விஜய் அளித்தால், அந்த கருத்துக்கள் மற்றும் நோக்கம் மக்களை விரைவாக சென்றடையும் என்பதே பொதுக்கருத்தாக உள்ளது. அதனை விஜய் செய்வாரா என்பது இனிவரும் அவரின் திரைப்படங்களில் தெரிய வரும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












