கான்பூரில் கொரோனா: சிறுமிகள் காப்பகத்தில் 57 பேருக்கு தொற்று, 7 பேர் கர்ப்பம்

கொரோனா

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, சித்தரிப்பு படம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கான்பூரில் உள்ள அரசு பெண் குழந்தைகள் காப்பகத்தில் வாழும் 57 சிறுமிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் காப்பகத்தில் இருக்கும் 7 பேர் கருவுற்றிருக்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் காப்பக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து கான்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிரம்மதேவ்ராம் திவாரி கூறுகையில், ”இந்த காப்பகத்தில் இருக்கும் 57 சிறுமிகளுக்கு கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 7 பேர் கருவுற்றிருக்கிறார்கள். இவர்களில் ஐவருக்கு கொரோனாத் தொற்று உள்ளது. மீதமுள்ள இருவருக்கு கொரோனா தொற்று இல்லை. கொரோனாத் தொற்று உள்ள ஐந்து கர்ப்பிணி சிறுமிகள் ஆக்ரா, ஏட்டா, மற்றும் கான்பூர் நகரின் குழந்தைகள் நல ஆணையம் கூறியே கான்பூர் காப்பகத்திற்கு வந்தனர். அவர்கள் இங்கு வரும்போதே கர்ப்பிணியாக இருந்துள்ளனர். இதற்கான ஆதாரம் நிர்வாகத்திடம் உள்ளது”, என்றார்.

காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதி

கடந்த வாரம் காப்பகத்தில் இருக்கும் ஒரு சிறுமிக்கு காய்ச்சல் வந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து பார்த்தபோது அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. அதன் பின் மற்ற சிறுமிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஆனால் இவர்களில் பெரும்பாலானோருக்கு எந்த வித நோய் அறிகுறியும் இல்லை. இருந்தும் தற்போது சோதனை முடிவுகளில் கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது தனிமைப்படுத்துதல் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பெண் குழந்தைகள் காப்பகத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் எப்படி இவர்களுக்கு பரவியது எனத் தெரியவில்லை.

இந்த சிறுமிகளுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்ததும் சிலரின் கருவுற்றிருத்தல் தெரிய வந்ததும் காப்பகத்தின் நிர்வாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

கான்பூர் மாநகராட்சி ஆணையர் டாக்டர்.சுதீர் போப்டே மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரம்ம தேவ்ராம் திவாரி இந்த சிறுமிகள் இங்கு வரும்போதே கர்ப்பமாக இருந்துள்ளனர் என விளக்கம் தந்தனர். ஆனால் கொரோனாத் தொற்று எவ்வாறு பரவியது என்பது குறித்து அவர்களிடம் எந்த பதிலும் இல்லை.

தேவையில்லாமல் பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து, மூத்த காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் பிபிசியிடம் தெரிவித்த போது, சிறுமிகளின் கருவுற்றலை தேவையில்லாமல் பெரிதாக்குகின்றனர் என்றார்.

”இந்த காப்பகத்திற்கு வரும் முன்னரே கருவுற்றிருக்கும் சிறுமிகள் கர்ப்பிணியாக இருந்துள்ளனர். அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கு குற்றவாளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது பெண் குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டிருப்பதனால் , அங்கு உள்ள இவர்களின் ஆவணத்தை பார்க்க முடியவில்லை. அதைப்பார்த்தால்தான் இவர்கள் எப்போது வந்தார்கள் எனக் கூற முடியும்”, என்றார் அவர்.

கான்பூரில் உள்ள இந்த பெண் குழந்தைகள் காப்பகத்தில் 97 பேருக்கு கடந்த வாரம் பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் 57 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில் மொத்தம் 171 பேர் உள்ளனர்.

இப்போது காப்பகம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இங்கு வேலை செய்யும் ஊழியர்களையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

அரசு பெண் குழந்தைகள் காப்பத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து, மாநில பெண்கள் நல உறுப்பினர் பூனம் கபூர் கூறும்போது, ”பெண் குழந்தைகள் காப்பகத்திற்கு வரும் பெரும்பாலான குழந்தைகள் போக்ஸோ சட்ட விவகாரமாகவே வருகிறார்கள். இவர்களுக்கு வயதும் குறைவாக உள்ளது. குழந்தைகளை கான்பூரில் இருக்கும் ஹைஸ்ட் மருத்துவமனைக்கு அனுப்பியபோது, எங்களுடைய ஊழியர்களும் உடன் சென்றார்கள். அங்கிருந்து கூட கொரோனா தொற்று பரவியிருக்கலாம். அரசு பெண் குழந்தைகள் காப்பகத்தில் ஆண்கள் செல்ல அனுமதி கிடையாது. நான் அடிக்கடி அங்கு செல்வேன். அதனால் இது போன்ற விஷயங்களை பரபரப்பு செய்யாதீர்கள்” , எனக் கேட்டுக்கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: