தமிழர் வரலாறு: கீழடி - கொந்தகை அகழாய்வில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கிடைத்தது

பட மூலாதாரம், https://tnarch.gov.in/keeladi
கீழடி அகழாய்வின் ஒரு பகுதியாக உள்ள கொந்தகையில்,நேற்று (செவ்வாய்கிழமை) மற்றொரு குழந்தையின் எலும்பு கூடு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 19-ம் தேதி குழந்தை ஒன்றின் முழு அளவிலான எலும்புக்கூடு முதன் முறையாக கண்டெடுக்கப்பட்டது.
கீழடி அகழாய்வுத் திட்டத்தின் ஆறாம் கட்ட அகழாய்வு கொந்தகை, மணலூர், அகரம், கீழடி ஆகிய நான்கு இடங்களில் 40 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.
ஏற்கனவே கொந்தகையில் சுரேஷ் என்பவரது நிலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு 12 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் நான்கு தாழிகளில் உள்ள எலும்புகள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்காக அனுப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology
கடந்த ஜூன் 19-ம் தேதி நடந்த அகழாய்வில் 75 செ.மீ நீளமுள்ள குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று முழு அளவில் கிடைத்துள்ளது.
மேலும் இந்த இடத்தில் அகழாய்வு பணிகள் நடந்த போது நேற்று (செவ்வாய்கிழமை) 95 செ.மீ நீளத்தில் மற்றொரு குழந்தையின் எலும்புகூடு கிடைத்தது. இடுகாடாக பயன்படுத்தப்பட்ட கொந்தகையில் முதல், 2ம், 3ம் நிலை எலும்பு துண்டுகள் தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றன. குழந்தையின் எலும்பு கூடுகள் 3ம் நிலை என கருதப்படுவதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கொந்தகை அகழாய்வு பணியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார்.

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology
"இன்று கொந்தகை அகழாய்வின்போது குழந்தையின் எலும்புக்கூடு முழு அளவில் கிடைத்துள்ளது.
பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை மூன்று வெவ்வேறு வழிமுறைகளில் புதைக்கும் வழக்கம் இருந்தது. பூமியில் போட்டு மூடுவது, பள்ளம் தோண்டிப் புதைப்பது, தாழியில் வைத்துப் புதைப்பது ஆகிய வழக்கங்கள் இருந்தன. இன்று கொந்தகையில் கிடைத்துள்ள குழந்தையின் உடல் முதல் வழிமுறையில் புதைக்கப்பட்டது. ஏனனில், இன்று கிடைத்துள்ள குழந்தையின் எலும்புக்கூடு இருந்த பகுதியில் மணல் மிகவும் தளர்வாக இருந்தது, " என அவர் தெரிவித்தார்.
கொந்தகையில் கிடைத்துள்ள எலும்புக்கூட்டின் உயரம் 75 சென்டி மீட்டராக உள்ளது. ஆனால், அது ஆணா, பெண்ணா என்பது குறித்த தெரியவில்லை. பொதுவாக இடுப்பு எழும்பு 'V' வடிவத்தில் இருந்தால் அது ஆண். எலும்பு 'U' வடிவத்தில் இருந்தால் பெண். ஆனால் இந்த எலும்புக் கூட்டில் இடுப்பு எலும்புப் பகுதி சேதமாகியுள்ளதால் வடிவம் சரியாகத் தெரியவில்லை. அகழாய்வில் கிடைத்துள்ள எலும்புக்கூடு உயரம் 75 செ.மீ என்பதால் அது குழந்தையின் எலும்புக்கூடாகத்தான் இருக்கும். ஆனால், குழந்தை இறந்தபோது என்ன வயது என்பது தெரியவில்லை, என அவர் மேலும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Tamil Nadu State Department of Archaeology
தற்போது கிடைத்துள்ள மனித எலும்புக்கூட்டை கருப்பு கவரால் குளிக்குள் மூடி வைக்கப்பட்டுள்ளது. நாளை அல்லது நாளை மறு நாள் குழியில் இருந்து எலும்புக்கூடு எடுக்கப்பட்டு அதில் இருந்து தேவைப்படும் எலும்புகளை மரபணு சோதனைக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயிரியல் துறையிடம் ஒப்படைக்கப்டும்.
உயிரியல் துறையின் மரபணு சோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட தகவல்கள் கிடைக்கும். கொந்தகையில் அதிக அளவு மனிதர்கள் வாழ்ந்த சுவடுகள் கிடைத்து வருகின்றன. எதிர் வரும் காலங்களில் இன்னும் மக்கள் வாழ்ந்ததுக்கான கூடுதல் அடையாளங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இது தொல்லியல் துறைக்கு மிக பெரிய மைல்கல், என்றார் அந்தத் தொல்லியல் ஆய்வாளர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












