ரெம்டிசிவர், டோசிலிசம்ப் : இந்தியாவில் கள்ளச் சந்தையில் விற்கப்படும் கொரோனா மருந்துகள் - பிபிசி புலனாய்வு

பட மூலாதாரம், Reuters
கொரோனாவுக்கு மருந்தாகக் கருதப்படும் ரெம்டிசிவர், டோசிலிசம்ப் ஆகிய இரண்டு மருந்துகள் டெல்லியின் கறுப்பு சந்தைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன என்கிறார் பிபிசியின் செய்தியாளர் விகாஸ் பாண்டே.
என்ன நடக்கிறது?
இது குறித்த விரிவான புலனாய்வை பிபிசி மேற்கொண்டது. இந்த புலனாய்வில் நாங்கள் சேகரித்த தகவல்களை அப்படியே தொகுத்து வழங்குகிறோம்.
அபினவ் சர்மாவின் உறவினருக்கு அதிக காய்ச்சலும், மூச்சுத் திணறலும் இருந்தது. இதனை அடுத்து அவர் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
அங்கு அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
அங்கு மருத்துவர்கள் அபினவ் குடும்பத்தினருக்கு ரெம்டிசிவர் மருந்து குறித்து விவரித்து இருக்கின்றனர். இந்த மருந்து இந்தியாவில் மருத்துவ பரிசோதனையில் இருப்பதாகவும், அவசரக் காலத்தில் நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்கப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள்.
ஆனால், இந்த மருந்தை வாங்குவது கடினமாக ஒரு காரியம். டெல்லியில் எங்குமே இந்த ரெம்டிசிவர் மருந்து கிடைப்பதில்லை.
நேரம் செல்ல செல்ல அபினவின் உறவினர் உடல்நிலை மோசமாகிக் கொண்டே சென்றிருக்கிறது. இந்த மருந்தை எப்படியாவது வாங்கி தாருங்கள் என சிலரிடம் சொல்லி இருக்கிறார்.
"நான் அழுதேவிட்டேன். ஒரு பக்கம் என் மாமா உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். நான் ஒரு பக்கம் இந்த மருந்தை வாங்க என்னாலான அனைத்து வழிகளிலும் போராடிக் கொண்டிருந்தேன்," என்கிறார்.
எவ்விலை கொடுத்தாவது?
"தெரிந்தவர்கள், தெரிந்தவர்களின் நண்பர்கள் எனப் பலரை அழைத்தேன். கடைசியாக ஏழு மடங்கு பணம் கொடுத்து இந்த மருந்தை வாங்கினேன். என்னால் முடிந்தது கொடுத்துவிட்டேன். பணம் கொடுக்க முடியாதவர்கள் நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்," என்கிறார் அவர்.
அபினவ் சர்மாவின் நிலைத்தான் இங்குப் பலருக்கு. தங்களது அன்புக்குரியவர்களை கொரோனாவிலிருந்து மீட்க பெரு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இதே காரணமாகப் பலர் பல மடங்கு பணத்தைக் கொடுத்து கள்ளச் சந்தையில் மருந்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இது போன்ற சந்தையில் பணியாற்றும் சிலரை பிபிசி தொடர்பு கொண்டது. அவர்கள் சரியான விலைக்கு மருந்தை வாங்கி தருவதாக நம்மிடம் தெரிவித்தனர்.
மருத்துவ வணிகத்தில் இருப்பதாக அறிமுகம் செய்து கொண்ட ஒரு நபர் "என்னால் மூன்று குப்பிகள் மருந்தை வாங்கி தர முடியும். ஒரு குப்பியின் விலை 30 ஆயிரம் ரூபாய். அதுவும் நீங்கள் உடனடியாக வர வேண்டும்," என்று என்னிடம் தெரிவித்தார்.
ஒரு குப்பி மருந்தின் அதிகாரபூர்வ விலை 5,400 ரூபாய். ஒரு நோயாளிக்கு சராசரியாக ஐந்திலிருந்து, ஆறு குப்பிகள் தேவைப்படும்.
நாம் தொடர்பு கொண்ட இன்னொரு நபர் ஒரு குப்பி மருந்தின் விலை 38,000 ரூபாய் என்றார்.
உயிர் காப்பான் கிடையாது
இந்த மருந்து உயிர் காப்பான் இல்லை. இன்னும் கொரோனாவுக்கான உரிய மருந்துகள் சந்தைக்கு வராத காரணத்தினால், இந்தியாவில் மருத்துவர்கள் இந்த மருந்தைப் பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாகவே டெல்லி உள்ளிட்ட பிற நகரங்களில் இந்த மருந்துக்கான தேவை அதிகரித்திருக்கிறது.
அபினவ் சர்மாவின் குடும்பத்தைப் போலப் பல குடும்பங்கள் அதிக விலை கொடுத்து இந்த மருந்தை வாங்கி இருப்பது பிபிசியின் ஆய்வில் தெரியவந்தது.
இந்த மருந்தைக் கொடுத்தால் உறுதியாகப் பிழைப்பார்களா என்றெல்லாம் தெரியாது. ஆனால், தமது நேசத்துக்குரியவர்கள் எப்படியாவது பிழைத்துவிடமாட்டார்களா என இந்த மருந்தினை பலர் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
தேவையும் உற்பத்தியும்
தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள இடைவெளிதான் இந்த மருந்து அதிக விலைக்கு விற்கக் காரணம்,

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க நிறுவனமான ஜிலெட் இந்த மருந்தை எபோலாவை குணப்படுத்த உருவாக்கியது. அந்த நிறுவனம் இந்தியாவில் சிப்லா, ஜுபிலண்ட் லைஃப், ஹெடிரோ ட்ரெக்ஸ், மயிலோம் ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு இந்த மருந்தைத் தயாரிக்க அனுமதி வழங்கி இருக்கிறது.
ஆனால், ஹெடிரோ ட்ரெக்ஸ்தான் தற்சமயம் இந்த மருந்து உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது.
இதுவரை 20,000 மருந்து குப்பிகளை ஐந்து மாநிலங்களுக்கு அனுப்பி இருப்பதாக பிபிசியிடம் கூறியது இந்த நிறுவனம்.
"எப்படி கள்ளச்சந்தைக்கு இந்த மருந்து சென்றது என தெரியவில்லை. விதிமுறைகளின்படி நாங்கள் நேரடியாக இந்த மருந்தை மருத்துவமனைக்கு அனுப்பி விட்டோம்," என்கிறார் இந்த நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் சந்தீப்.
``நாங்கள் தேவைக்கு ஏற்ப உற்பத்தியைப் பெருக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். இப்படியான சூழலில் கள்ளச் சந்தையில் மருந்து விற்கப்படுவது மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.’’


"எங்களுக்கு மக்களின் வேதனை புரிகிறது. அவர்கள் கள்ளச் சந்தையை நாட வேண்டாம். இன்னும் ஓரிரு நாளில் உற்பத்தியைப் பெருக்குவோம்," என்கிறார் அவர்.
எப்படி கள்ளச் சந்தைக்கு வருகிறது?
மருந்து விற்பனை செய்யும் கடைகளும் எங்களிடம் இன்னும் இந்த ரெம்டிசிவர் மருந்து வந்து சேரவில்லை என்றே கூறுகின்றனர்.
"ஒரு பெண் நேற்று ஹைதராபாத்திலிருந்து பேசினார். இந்த மருந்துக்காக என்ன விலை வேண்டுமானாலும் தருகிறேன் என தெரிவித்தார். ஆனால், என்னால் எதுவுமே செய்ய முடியாது. எங்களுக்கு இன்னும் மருந்தே வரவில்லை," என்கிறார் காசியாபாத் மருந்து விற்பனை சங்கத்தின் துணை தலைவர் ராஜீவ் தியாகி.
சரி. பின் எப்படி மருந்து கள்ளச்சந்தைக்கு வருகிறது?
எந்த மருந்துக் கடைகளும் இந்த முறைகேடான விஷயத்தில் ஈடுபடவில்லை என்கிறார் அனைத்திந்திய மருந்து விற்பனை சங்கத்தின் பொது செயலாளர் ராஜீவ் சிங்கால்.
"இது தேசிய பேரிடர். எந்த நிறுவனமும் இப்படியான முறைகேட்டில் ஈடுபடவில்லை. அப்படி எந்த மருந்துக் கடைகளாவது சட்டத்திற்குப் புறம்பான இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தெரிந்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Hindustan Times
ரெம்டிசிவரில் மட்டும் இந்த பிரச்சனை இல்லை. மற்றொரு மருந்தான டோசிலிசம்ப் மருந்தின் விலையும் கள்ளச்சந்தையில் மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது.
சுவிட்சர்லாந்து நிறுவனம் ஒன்றின் சார்பாக இந்த மருந்தை சிப்லா விற்பனை செய்கிறது. முழுக்க முழுக்க இந்த மருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உரிய நேரத்தில் இந்த மருந்து கிடைப்பது சிரமமாக இருக்கிறது.
பிபிசியிடம் பேசிய சிப்லாவின் பிரதிநிதி, "நாங்கள் விற்பனையை அதிகப்படுத்துகிறோம். ஆனால், வரும் வாரங்களில் தேவையும் அதிகரிக்கும்," என்கிறார்.
டோசிலிசம்ப் மருந்து கள்ளச் சந்தையில் விற்கப்படுவதை சிப்லா மறுக்கிறது. "நாங்கள் இப்படி நடக்க விடமாட்டோம்," என்கிறார் சிப்லாவின் பிரதிநிதி.
சில மருத்துவமனைகள் நோயாளிகளிடமே மருந்து கேட்பது எங்கள் ஆய்வில் தெரியவந்தது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












