ரெம்டிசிவர், டோசிலிசம்ப்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்துகள் கொள்முதல்

தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள டோசிலிசம்ப், ரெம்டெசிவிர் பயன்பாடு

பட மூலாதாரம், Getty Images

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அளிக்கப்படும் டோசிலிசம்ப், ரெம்டிசிவர், ஏனாக்ஸாபரின் ஆகிய மருந்துகளை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது என்றும் மாவட்ட மருத்துவமனைகளுக்கும் அந்த மருந்துகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உயிர்காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகளை தருவித்து பயன்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகம் ஈடுபட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்துள்ள தகவலின்படி, தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவைக் கழகம் மூலம் 1,200 குப்பிகள் டோசிலிசம்ப்,(400 mg), 42,500 குப்பிகள் ரெம்டிசிவர் (100 mg) மற்றும் 1,00,000 குப்பிகள் ஏனாக்ஸாபரின் (40 mg) ஊசி மருந்துகளை வாங்குவதற்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதுவரை 1000 குப்பிகள், 1100 குப்பிகள் மற்றும் 1,00,000 குப்பிகள் முறையே பெறப்பட்டுள்ளன என்றும் மீதமுள்ள குப்பிகள் ஒரிருநாட்களில் வந்துவிடும் என்றும் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள டோசிலிசம்ப், ரெம்டெசிவிர் பயன்பாடு

பட மூலாதாரம், Getty Images

''இதுவரை பெறப்பட்ட உயிர்காக்கும் ஊசி மருந்துகள் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற உயர்தர, உயரிய உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்வதிலும், இம்மருந்துகள் மாவட்ட அளவில் இருப்பில் வைத்து பயன்படுத்துவதிலும் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

மேலும், தேவையின் அடிப்படையில் இம்மருந்துகள் கூடுதலாக தருவிக்கப்படும்,'' என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அதோடு கொரோனா தொற்றுக்கான சிகிச்சைக்காக, 1,769 மருத்துவர்கள் உட்பட 14,814 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏழை எளிய மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோக்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் எவ்வித கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளன என்றார்.

தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னர் ஆணைகள் பிறப்பித்துள்ளார் என்றும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: