கொரோனா பாதிப்பு விகிதம் உலகிலே இந்தியாவில்தான் குறைவு- மத்திய அரசு

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு என்றும் 10 லட்சம் பேரில் 505 பேருக்குத்தான் தொற்று உள்ளது என்று மத்திய அரசு புள்ளி விவரங்களுடன் கூறி உள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ''இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 7 லட்சத்தை கடந்து உள்ளது.இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிவேகமாக இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது.``
’’ஆனால் இதில் உண்மை இல்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை, பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவுதான்’’ என்கிறது மத்திய அரசின் சுகாதார அமைச்சகம்.
உலகளவில் 10 லட்சம் பேருக்கு சராசரியாக 1453 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இந்த எண்ணிக்கை வெறும் 505 ஆகத்தான் உள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இதையொட்டிய உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா நிலவர அறிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக்காட்டி இருக்கிறது. இதன்படி, தென் அமெரிக்க நாடான சிலியில் 10 லட்சம் பேருக்கு 15 ஆயிரத்து 459 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்த எண்ணிக்கை பெரு நாட்டில் 9,070, அமெரிக்காவில் 8,560, பிரேசிலில் 7,419, ஸ்பெயினில் 5,358 ஆக உள்ளது.
’’கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளும் இந்தியாவில் குறைவுதான். இந்தியாவில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்து இருந்தாலும், இது பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான அளவாகத்தான் இருக்கிறது.’’ என்கிறது மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா பலி 10 லட்சம் பேருக்கு 14 ஆகத்தான் இருக்கிறது. ஆனால் உலக அளவிலான சராசரி என்பது இதை விட 4 மடங்குக்கும் அதிகம். அது 68 ஆக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்தில் 10 லட்சம் பேருக்கு இறப்புவீதம் 651, ஸ்பெயினில் 607, இத்தாலியில் 576, பிரான்சில் 456, அமெரிக்காவில் 391 ஆக இருக்கிறது.
இந்தியாவில் முன்கூட்டியே தொற்றை கண்டுபிடித்து, சரியான நேரத்தில் பயனுள்ள மருத்துவ சிகிச்சை அளித்து வருவதால் தினமும் குணம் அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
’’கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 15 ஆயிரத்து 515 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இந்தியாவில் மொத்தம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரத்து 947 ஆக உள்ளது. இது 61.13 சதவீதம் ஆகும்.’’
’’தற்போது நாடு முழுவதும் தொடர் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 59 ஆயிரத்து 557 ஆகும்'' என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தோனி பிறந்தநாள்: வைரலான 'ஹெலிகாப்டர் 7' பாடல் - டைம்ஸ் ஆஃப் இந்தியா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பிறந்தநாளான நேற்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்து மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரரும், சிஎஸ்கே அணியில் விளையாடியவருமான பிராவோ வெளியிட்ட பாடல் வைரலானது குறித்த செய்தியை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வளியிட்டுள்ளது.
'ஹெலிகாப்டர் 7' என்ற பெயரில் பிராவோ வெளியிட்டுள்ள காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.
தோனியின் கிரிக்கெட் பயணத்தில் அவர் படைத்த சாதனைகள் பற்றிப் பேசும் வகையில் இந்த காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 6-ஆம் தேதி இரவு இந்தப் பாடல் வெளியானது.
'ஹெலிகாப்டர் 7' புறப்பட்டுவிட்டது என்ற செய்தியுடன் இந்த காணொளி வெளியானது. "நான் தோனிக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். அவருக்காக 7' என்ற பாடலை வெளியிடுகிறேன்" என்று பிராவோ கூறினார்.
நீண்ட காலமாகவே ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் பிராவோ தோனிக்காக வெளியிட்டுள்ள இந்தப் பாடல் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஊரடங்கின்போது 80 வயது மூதாட்டிக்கு உதவிய சென்னை பெண் காவலருக்கு பாராட்டு - இந்து தமிழ் திசை
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் ஐதராபாத் செல்ல சென்னை விமான நிலையம் அழைத்துச் சென்ற பெண் காவலரை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை மாம்பலம் காவல் நிலையத்துக்கு கடந்த மாதம் 29-ம்தேதி தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.
எதிர்முனையில் பேசிய பெண், தான் ஐதராபாத்தில் வசிப்பதாகவும், தனது தாய் வசந்தா (80) தியாகராய நகர், நீலகண்ட மேத்தா தெருவில் தற்போது தனியாக வசித்து வருவதாகவும், இ-பாஸ், விமான டிக்கெட் பெற்றுள்ள நிலையில் தனது தாயை சென்னை விமான நிலையம் வரை அழைத்து வந்து விமானத்தில் ஏற்றிவிடுமாறும் உதவி கோரியிருந்தார்.

பட மூலாதாரம், GREATER CHENNAI POLICE
இதையடுத்து மாம்பலம் காவல்நிலையத்தில் பணிபுரியும் முதல்நிலை பெண் காவலர் ஆர்.மகாலட்சுமி கடந்த1-ம் தேதி வசந்தாவின் வீட்டுக்குச் சென்று, அவரை தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்த கார் மூலம் விமான நிலையம் அழைத்து வந்து விமானத்தில் அனுப்பி வைத்தார். நல்லபடியாக அவரும் ஐதராபாத் சென்றடைந்தார்.
இந்நிலையில், தக்க சமயத்தில் மூதாட்டியை அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றிவிட்ட முதல்நிலை பெண் காவலர் மகாலட்சுமியை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று நேரில் வரவழைத்து பாராட்டியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












