இந்தியா - சீனா மோதல்: "கொரோனா காலத்தில் இந்தியா - சீனாவால் ஒரு போரை தாங்க முடியாது" - எஸ்.எல். நரசிம்மன்

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

லடாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியா மற்றும் சீனா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதல்களால் இரு நாடுகள் இடையிலான உறவு மற்றும் பேச்சுவார்த்தைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என நிபுணர்கள் நம்புகின்றனர்.

''எல்லையில் துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் துப்பாக்கிச்சூடு நடந்திருந்தால், இறப்பு எண்ணிக்கை இப்போது உள்ளதை விட மிக அதிகமாக இருந்திருக்கும். 2013 முதல் இருநாட்டு எல்லையில் பிரச்சனை அதிகரித்து வருகிறது. அதே போல அந்தப் பிரச்சனைகள் மேலும் வளராமல் தீர்க்கப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம்'' என்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும், முன்னாள் லெப்டினன்ட் ஜெனரருமான எஸ்.எல் நரசிம்மன்.

மேலும் அவர், ''திங்கட்கிழமை நடந்த மோதலை தவிர்த்திருக்கலாம். இரு நாட்டு ராணுவத்தினர் இடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியிருப்பதாகத் தெரிகிறது. இந்திய ராணுவத்தினருக்கு மட்டுமல்லாமல், சீன ராணுவத்தினருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இரு நாட்டுக்கும் இது நல்ல விஷயம் அல்ல'' என்கிறார் அவர்.

இந்தப் பிரச்சனை தொடங்கியதிலிருந்தே இந்திய, சீன அரசுகளின் கருத்துகளைப் பார்த்தால், பிரச்சனையை மேலும் வளர்க்க இரு நாடுகளும் விரும்பவில்லை என்பது தெரிகிறது என நரசிம்மன் கூறுகிறார்.

''மே மாதம் இந்த பிரச்சனை துவங்கியபோது பேசிய சீன வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர்கள், எல்லைப் பிரச்சனையை மேலும் வளர்க்க விரும்பவில்லை என்றும், பிரச்சனையைத் தீர்க்க ஒவ்வொரு நாட்டிடமும் வழிமுறைகள் உள்ளன எனவும் தெரிவித்தனர். அதே போல இந்திய வெளியுறவுத்துறையும் அமைதியை ஏற்படுத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும் போது இரு நாடுகளும் போர்ச் சூழல் ஏற்படுவதை விரும்பவில்லை என்பது தெரிகிறது'' என்கிறார்.

கொரோனா உலகத் தொற்றுக்கு எதிராக இரு நாடுகளும் போராடி வரும் நேரத்தில் ஒரு போரை இந்த இரு நாடுகளாலும் தாங்க முடியாது என கூறும் அவர், ''இந்தப் பிரச்சனை விரைவில் சுமுகமாகத் தீர்க்கப்படும்'' என்கிறார்.

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

''1962 போருக்குப் பிறகு இரு நாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை முற்றிலும் நின்றுபோனது. அதன் பின்னர் தூதரக பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், 1988ல் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி சீனா சென்ற போதுதான் இருநாடுகள் இடையிலே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பிறகு இரு நாடுகளும் இணைந்து செயல்பட பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன'' என்கிறார் அவர்.

அப்போது முதல் இருநாடுகள் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் உறவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்கிறார் நரசிம்மன்.

''என்னதான் இருநாடுகள் இடையே சுமுக உறவுகள் இருந்தாலும், எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பது என்பது ஒரு கடினமான விஷயமாகவே உள்ளது. எதிர்காலத்தில் தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும்'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: