ஜெய்சங்கர் Vs வாங் யி: இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசியில் பேச்சு

பட மூலாதாரம், Getty Images
இந்திய - சீன ராணுவ வீரர்கள் இடையே லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட கைகலப்பில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் உயிரிழந்தனர்.
இந்த மோதலில் சீன ராணுவ வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் இன்று மாலை தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

பட மூலாதாரம், Getty Images
சீன வெளியுறவுத்துறை அமைச்சருடனான தொலைபேசி அழைப்பின்போது, கல்வான் பள்ளத்தாக்கில் சீனா நடத்திய முன்கூட்டியே திட்டமிட்ட செயல்தான் தொடர்நிகழ்வுகளுக்கு காரணம் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் இருதரப்பு உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அடிக்கோடிட்டுக் காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"சீன தரப்பு அதன் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் சரியான நடவடிக்கை எடுப்பதற்கும் காலத்தின் தேவை இருந்தது. ஜூன் 6 ம் தேதி இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் எட்டிய புரிந்துணர்வை இரு தரப்பினரும் நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்படுத்த வேண்டும். இரு தரப்பு படையினரும் இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும். சீன ராணுவத்தினர் உண்மையான கட்டுப்பாட்டு கோட்டை கண்டிப்பாக மதித்து கடைபிடிக்க வேண்டுமே தவிர அதை மாற்றுவதற்கு ஒருதலைப்பட்சமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீன தரப்பு கூறுவது என்ன?
இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி, சம்பவத்திற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பதுடன், இந்தியா தனது துருப்புகளை கட்டுப்படுத்த வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதை உறுதிப்படுத்த அனைத்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்தவும் இந்திய தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்திய தரப்பு தற்போதைய நிலைமையை தவறாக மதிப்பிடக்கூடாது. மேலும், பிராந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான சீனாவின் உறுதியான விருப்பத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கல்வான் பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?
இந்தியாவின் லடாக் பிராந்தியத்திற்கும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சீனா பகுதிக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. இந்த பள்ளத்தாக்கு, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்த பகுதியை இந்தியாவும் சீனாவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதி வருகின்றன.
இந்தப் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடுதான் இந்தியா மற்றும் சீனாவை பிரிக்கிறது. இந்த பள்ளத்தாக்கு அமைந்துள்ள அக்சாய் சீனா பகுதி தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த பகுதி தங்களுக்கு சொந்தமானது என இந்தியா உரிமை கோரி வருகிறது.
1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தீய - சீனப் போரின்போது, கல்வான் நதி போரின் மையப்பகுதியாக இருந்ததை வைத்தே அதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கிறார் சர்வதேச விவகார நிபுணரான எஸ்.டி முனி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












