டேரன் சமி: ‘என்னை காலு என அழைத்தவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்’ - சிக்கலில் இஷாந்த் சர்மா?

டேரன் சமி

பட மூலாதாரம், SAMMY / INSTAGRAM

இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணைய பக்கங்களில் வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்துள்ளோம்.

டைம்ஸ் ஆப் இந்தியா: 'என்னை காலு என அழைத்தவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும்' - விஸ்வரூபம் எடுக்கும் நிறவெறி புகார்

ஐபிஎல் போட்டிகளில் விளையாடியபோது தன்னையும், இலங்கை வீரர் திசரே பெரேராவையும் சிலர் 'காலு' என்று அழைத்ததாக சமூகவலைத்தளத்தில் கடந்த வார இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணிகளின் முன்னாள் கேப்டனும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்அணியின் வீரருமான டேரன் சமி தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது என 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேடு தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமையன்று 'காலு' என்று தன்னை அழைத்த அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டேரன் சமி இன்ஸ்டாகிராம் வீடியோவில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சமூகவலைதளவாசிகள் சிலர், இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் பழைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றை எடுத்து சர்ச்சையை பெரிதாக்கி உள்ளனர்.

அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் இஷாந்த் சர்மா சர்ச்சைக்குரிய அந்தச் சொல்லை டேரன் சமிக்குப் பதிலாகப் பயன்படுத்தியது தெரியவந்தது.

இஷாந்த் சர்மாவின் பதிவு

பட மூலாதாரம், ISHANT / INSTAGRAM

2014-ல் இஷாந்த் சர்மா வெளியிட்ட அந்தப் பதிவில், "நான், புவி, காலு, மற்றும் சன் ரைசர்ஸ்" என்று குறிப்பிட்டு பகிர்ந்த புகைப்படத்தில் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், டேல் ஸ்டெய்ன், இடையே நிற்கும் டேரன் சமியை 'காலு' என்று குறிப்பிட்டுள்ளார்.

இஷாந்த் சர்மாவின் பழைய பதிவை இப்போது சிலர் பகிர்ந்துள்ளதால், இந்த பிரச்னை மேலும் பெரிதாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Presentational grey line

தினமணி: பள்ளி பாடங்களை குறைக்க மத்திய அரசு பரிசீலனை

பள்ளி பாடங்களை குறைக்க மத்திய அரசு பரிசீலனை

பட மூலாதாரம், Hindustan Times

வரும் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கான பாடங்களையும், பள்ளி நடைபெறும் நேரத்தையும் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக பள்ளிகளை மீண்டும் திறப்பதில் காலதாமதம் நீடித்து வருகிறது. எனவே, மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால்வெளியிட்ட பதிவில், 'தற்போது பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் வரும் கல்வியாண்டில் பள்ளி பாடங்களைக் குறைக்கவும், பள்ளியில் வகுப்புகள் நடைபெறும் நேரத்தை குறைக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக கல்வியாளர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், பெற்றோர்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. முதலில் 10 மற்றும் 12 வகுப்புக்கான பாடங்கள் குறைத்து அறிவிக்கப்படும். அடுத்த கட்டமாக பிற வகுப்புக்கான பாடங்கள் குறைத்து அறிவிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.

முன்னதாக, இந்த விஷயம் தொடர்பாக மத்திய கல்வித் துறை செயலர் அனிதா அகர்வால், மாநில கல்வித் துறை செயலர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

Presentational grey line

இந்து தமிழ் திசை: ஒடிசா விமான விபத்தில் சென்னை பெண் பயிற்சி விமானி உயிரிழப்பு

ஒடிசா விமான விபத்தில் சென்னை பெண் பயிற்சி விமானி உயிரிழப்பு

பட மூலாதாரம், HINDUI TAMIL

ஒடிசா மாநிலம் பிர்சாலாவில் அரசுவிமான பயிற்சி கல்வி நிறுவனம் உள்ளது. இங்குள்ள விமான தளத்தில் தினமும் பயிற்சி வகுப்புகள் நடப்பது வழக்கம். நேற்றும் சிறிய ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.

அப்போது எதிர்பாராத விதமாக ஒரு விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகிய இருவரும் உயிரிழந்ததாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த பயிற்சி விமானி அனீஸ் பாத்திமா(20) என்பதும், இவர் சென்னை அருகே உள்ள பொழிச்சலூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவரது குடும்பத்தினர் ஒடிசா விரைந்துள்ளனர்.

உயிரிழந்த அனீஸ் பாத்திமாவின் தந்தை மறைந்த முகமது கோரி வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி மையத்தில் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: