தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்: புதிதாக 1,685 பேருக்கு கோவிட்-19 தொற்று; 21 பேர் பலி - உலக நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் 1685 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 798 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேர கொரோனா தொற்று தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தமிழ்நாட்டில் புதிதாக 1685 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்களில் 1,649 பேர் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள். மீதமுள்ள 36 பேர் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள்.
இதன் மூலம் இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,914ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 798 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,325ஆக உள்ளது. 16,279 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 15 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர்.
வழக்கம்போலவே இன்றும் சென்னையில்தான் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1,242 பேர் இன்று புதிதாக சென்னையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆகவே, இதுவரை 24,545 பேர் இந்நோயால் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டில் 158 பேரும் காஞ்சிபுரத்தில் 132 பேரும் மதுரையில் 16 பேரும் திருவள்ளூரில் 90 பேரும் திருவண்ணாமலை மற்றும் வேலூரில் தலா 16 பேரும் நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 16 பேர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிற தொடர் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். ஐந்து பேர் கொரோனா பாதிப்பால் மட்டும் உயரிழந்தவர்கள். இவர்களில் 20 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் திருவள்ளூரைச் சேர்ந்தவர்.

உயிரிழந்தவர்களில் 30 வயது இளைஞரும் ஒருவர். இவருக்கு வேறுவிதமான உடல்நல பாதிப்புகள் ஏதுமில்லாத நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் இதுவரை 6,21,171 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
உலக நிலவரம் என்ன?
இந்திய / இலங்கை நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71.5 லட்சத்தைக் கடந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
கோவிட்-19 நோய்த்தொற்றால் உலக அளவில் இதுவரை 4 லட்சத்து ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், சுமார் 33 லட்சதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் ஐந்து நாடுகளாக உள்ளன.
மலேசியாவில் முதன்முறையாக புது நோயாளிகளில் ஒருவர் கூட மலேசியர் அல்ல
மலேசியாவில் இன்று புதிதாக ஏழு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஆறு பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், மீதமுள்ள ஒருவர் மலேசியாவில் உள்ள வெளிநாட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் கடந்த மார்ச் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்திய பிறகு, முதன்முறையாக ஒரு மலேசியர் கூட நோய்த் தொற்றால் பாதிக்கப்படாத நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது என மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
"கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,336. கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 281 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதுவரை 83.7 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்," என்றார் நூர் ஹிஷாம்.
இனி வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மலேசியர்கள் தங்கள் வீடுகளிலேயே 14 நாட்கள் தனித்து இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் மலேசியர்கள் அங்கு தினந்தோறும் சென்று வருவது வழக்கம். தற்போது இரு நாடுகளின் எல்லைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், மலேசியர்கள் தொடர்ந்து சிங்கப்பூரில் வேலை செய்வது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் நுழைவதற்கு முன்பு மலேசியர்கள் கோவிட்-19 நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டால், அதற்கு மலேசியா இணக்கம் தெரிவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நிலவரம்
கொரோனா தொற்றுக்கு வாய்ப்பின்றி பாதுகாப்பான தேர்தலுக்கு தயாராகும் சிங்கப்பூர்
சிங்கப்பூரில் இன்று புதிதாக 218 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 38,514ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 25,359 பேர் குணமடைந்துள்ளனர். நோய்த்தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 25ஆக நீடிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், சிங்கப்பூரில் அடுத்த சில வாரங்களில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து தொற்றுப் பரவலுக்கான வாய்ப்பு இன்றி தேர்தலை பாதுகாப்பாக நடத்த, நேரடிப் பிரசாரக் கூட்டங்களைக் குறைப்பது, இணையம் வழி பிரசாரம் மேற்கொள்வது.
என அந்நாடு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
வாக்காளர்களுக்கு கிருமிநாசினி, ஒருமுறை பயன்படுத்தும் கையுறை, முகக்கவசம் ஆகியவற்றை அளிக்கவும், மூத்த வாக்காளர்கள், உடல்நலம் குன்றியவர்கள் தங்களது வாக்கை முதலில் செலுத்தவும் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
வாக்குச் சாவடிகளில் ஒரே சமயத்தில் அதிகமானோர் கூடுவதைத் தவிர்க்க ஒவ்வொரு வாக்காளருக்கும் குறிப்பிட்ட இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டு, அதற்குரிய நேர அட்டவணையும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












