Mars Mission: செவ்வாய் நோக்கிப் பயணம் செய்யப்போகும் முதல் அரபு விண்கலம் - சிறப்பு என்ன?

பட மூலாதாரம், THE MOHAMMED BIN RASHID SPACE CENTRE
செவ்வாய் கோளுக்கு முதல்முறையாக அரபு விண்கலம் ஒன்று பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும்.
செவ்வாய் கிரகத்தை சென்றடைய 493 மில்லியன் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும். எனவே ஏழு மாதங்கள் பயணித்த பிறகே செவ்வாய் கோளைச் சுற்றிவருவதற்காக திட்டமிடப்பட்ட வட்டப் பாதையை இந்த விண்கலம் சென்றடையும். செவ்வாய் கோளுக்கு சென்றடைந்தவுடன் காலநிலை மாற்றம் மற்றும் செவ்வாயின் சுற்று சூழல் குறித்த தரவுகளை இந்த விண்கலம் அனுப்ப துவங்கிவிடும். பிறகு 687 நாட்களுக்கு செவ்வாய் குறித்த தரவுகளை இது புவிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.
ஐக்கிய அரபு எமிரேட் இந்த விண்கலத்தை ஏவுகிறது. செவ்வாய் கோளை ஒரு முறை சுற்றிவர 55 மணிநேரம் ஆகும்.
இளம் அரபு விஞ்ஞானிகள் விண்வெளிப் பொறியியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு இந்த திட்டம் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என திட்ட இயக்குனர் சாரா அல் அமிரி கூறுகிறார்.
''நாமேட் அமல்'' என இந்த அரபு விண்கலத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ''நாமேட் அமல்'' என்பதன் பொருள் நம்பிக்கை. ஜப்பானிய தீவு ஒன்றில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
மேலும் ஜப்பானிய ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ள இந்த விண்கலம் மூன்று விதமான உணர்விகளைக் கொண்டுள்ளது.
இந்தக் கோளின் தூசி மற்றும் ஓசோனை அளவிடுவதற்கான உயர்-தெளிவு மல்டிபேண்ட் கேமராவும் இதில் அடங்கும். இரண்டாவதாக வளிமண்டலத்தின் கீழ்ப் பகுதியை ஆராய்வதற்கான இன்ஃபிராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் என்னும் கருவியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் மூன்றாவது உணர்வி ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனைஅளவிடுவதற்கான அல்ட்ராவைலெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகும்.
தண்ணீரை உருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பதால், தங்கள் ஆராய்ச்சி இதில் தான் அதிக கவனம் செலுத்தும் என அல் அமிரி கூறுகிறார்.
செவ்வாயில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் மண்ணியல் தரவுகளை அளித்துள்ளன. ஆனால் இந்த அரபு விண்கலம் செவ்வாயின் காலநிலை குறித்த தரவுகளை மிகவும் துல்லியமாக அளிக்கும் என லண்டனை சேர்ந்த அறிவியல் அருங்காட்சியாக குழுவின் இயக்குனர் லேன் பிளாட்ச்போர்ட் குறிப்பிடுகிறார்.
ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட் புவியின் சுற்றுப்பாதைக்கு செயற்கைகோள்களை அனுப்பியுள்ளது. மேலும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு விண்வெளி வீரரும் சென்று வந்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
முதல் அரபு விண்வெளி வீரராக சவுதி அரேபியாவின் இளவரசர் சுல்தான் பின் சல்மான் அல்-சவுத் 1985ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்றார். இவர் அமெரிக்க விண்கலத்தில் சென்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொலரோடோவில் உதிரி பாகங்களை ஒன்றிணைத்து இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டது. பிறகு அது ஜப்பானுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சத்தில் பாதுகாப்பு கருதி பொறியியலாளர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். இந்நிலையில் செவ்வாய் கோளுக்கு விண்கலம் ஏவப்படும் நாள் தாமதிக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
"ஐரோப்பிய விண்வெளி மையம் மற்றும் நாசா தவிர பிற நாடுகளும் செவ்வாய்க்கு உண்மையிலேயே செல்ல முடியும் என்று காட்டும் என்பதால் இது செவ்வாய்க்கோள் ஆராய்ச்சியில் முக்கியமான முன்னேற்றம் ஆகும். இந்த விண்கலம் நிச்சயம் செவ்வாயை சென்றடையும் என நம்புகிறோம். செவ்வாய்ப்பயணங்கள் தோல்வியில் முடிவடையும் நீண்ட வரலாறு உண்டு" என பேராசிரியர் மோனிகா கிரேடி கூறுகிறார்.
எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே அரபு நாட்டை சேர்ந்தவர்கள் அறிவியல் கண்டு பிடிப்புகளில் சிறந்து விளங்கியவர்கள் என்பதை இந்த உலகிற்கு உணர்த்தும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெவ்வாய்க் கோள் விண்வெளி பயணம் அமையும். மேலும் ஐக்கிய அரபு எமிரேட் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த ஆண்டே செவ்வாய் நோய்க்கிய பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதில் யு.ஏ.இ அதிக கவனம் செலுத்தி வருகிறது.

பட மூலாதாரம், THE MOHAMMED BIN RASHID SPACE CENTRE
2117 ஆம் ஆண்டுக்குள் செவ்வாயில் மனிதர்கள் குடியேறுவதை சாத்தியமாக்கி காட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐக்கிய அரபு எமிரேட் செயல்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












