குஜராத் சர்ச்சை: வென்டிலேட்டர் பயன்படுத்துவதால் நோயாளிகளின் ரத்தக்குழாய்கள் சிதைகிறதா? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பார்க்கவா பரீக்,
- பதவி, பிபிசி குஜராத்தி சேவை
கொரோனா வைரஸ் தொற்றால் குஜராத் மாநிலத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மற்ற சில மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாகவே உள்ளது. இத்தொற்று அம்மாநிலம் கையாள்வது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில், தமன் 1 வென்டிலேட்டர் விவகாரம் அங்கு மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது.
தமன் - 1 வென்டிலேட்டர் கருவிகள்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஜோதி சிஎன்சி என்ற நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வென்டிலேட்டர் கருவிகளை தயாரிக்கத் தொடங்கின.
இதனை அம்மாநில முதல்வர் விஜய் ரூபாணி, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி அவற்றை பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.
கொரோனா வைரஸ் நோயாளிகள் பலருக்கும் மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பதால், போதுமான வென்டிலேட்டர் கருவிகளை மருத்துவமனைகள் வைத்திருப்பது அவசியமாகிறது.கொரோனா தொற்று தொடங்கிய உடனே, இதற்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பல நாடுகளும் வென்டிலேட்டர் கருவிகளை தயாரிக்கத் தொடங்கின.

பட மூலாதாரம், JYOTI CNC
ஆனால், குஜராத்தில் தயாரிக்கப்பட்ட கருவிகள் உயிர்களை காக்கும் என்ற எதிர்பார்பபை பூர்த்தி செய்யவில்லை. இதுதான் இந்த ஒட்டுமொத்த சர்ச்சையின் ஆரம்பப்புள்ளியாக இருந்தது.
சிஎன்சி நிறுவனம் தயாரித்த தமன் -1 வென்டிலேட்டர் கருவிகள் உயிர்களை காக்க ஏதுவாக இல்லை என்று அகமதாபாத் பொது மருத்துவமனை மருத்துவர்கள் துணை முதல்வர் நிதின் படேலுக்கு கடிதம் எழுதினர்.
பொதுவாக சுவாச அமைப்புகளுக்கு ஆதரவளித்து, நோயாளிகள் மூச்சுவிட சிரமப்படுவதை வென்டிலேட்டர் கருவிகள் குறைக்கும். ஆனால், தமன் - 1 வென்டிலேட்டர்கள் இதில் சரியாக செயல்படவில்லை என்று மருத்துவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
அரசியல் விவகாரமாக மாறிய உயிர்காக்கும் கருவிகள்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களும், உயிரிழப்பவர்களும் நாளுக்கு நாள் குஜராத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், தமன் 1 வென்டிலேட்டர்கள் விவகாரமானது பெரும் அரசியல் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

பட மூலாதாரம், HTTP://JYOTI.CO.IN/
இந்த வென்டிலேட்டர் கருவிகளை தொடங்கிய வைத்த மாநில அரசுக்கு எதிராக அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் பரேஷ் தனனி மற்றும் அமித் சாவ்டா ஆகியோர் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் மாநில முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.
எனினும் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
மாநில அரசின் விளக்கம் என்ன?
அனைத்து விதிமுறைளும் சரியாக பின்பற்றபட்டே தமன் 1 வென்டிலேட்டர் கருவிகள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதாக முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி விளக்கம் அளித்துள்ளார்.
"ஏப்ரல் 18ஆம் தேதியன்று முதல் 10 வென்டிலேட்டர்களை ஜொதி சிஎன்சி நிறுவனம் விநியோகித்தது. இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் விதிமுறைகள்படி இக்கருவிகளுக்கு மாநில அல்லது மத்திய அரசிடம் இருந்து உரிமம் பெற வேண்டிய அவசியமில்லை.
மேலும் இந்திய தரநிலை அமைப்பு நிர்ணயம் செய்திருக்கும் தரத்தில்தான் இந்த வென்டிலேட்டர் கருவிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. உரிமம் பெற வேண்டிய 37 பொருட்களை சுகாதாரத்துறை பட்டியலிட்டுள்ளது. அதில் வென்டிலேட்டர் கருவிகள் இடம்பெறவில்லை.
அந்த வகையில் தமன் 1 வென்டிலேட்டர்களுக்கு உரிமம் பெற வேண்டி அவசியம் இல்லை. தமன் 1 வென்டிலேட்டர் கருவிகள் அனைத்து செயல்திறன் சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டது. செயற்கை நுரையீரலில் 8 மணி நேரம் பரிசோதனை செய்யப்பட்டது" என்று ஜெயந்தி ரவி தெரிவித்தார்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
குஜராத் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசை சேர்ந்த பரேஷ் தனனி இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
அகமதாபாரத் பொது மருத்துவமனையில் தமன் 1 வென்டிலேட்டர் கருவிகளை பயன்படுத்தியதால் பல நோயாளிகளின் ரத்தக்குழாய்கள் சிதைந்துவிட்டதாக அச்சம் நிலவுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா, கொரோனா தொற்று பரவலை எதிர்கொள்வதில் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக கூறினார்.
மேலும் அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசும் முதல்வர் விஜய் ரூபானியும் தமன் 1 வென்டிலேட்டர்களுக்கு ஒப்புதல் வழங்கி மக்களின் உயிர்களை பணையம் வைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதல்வர் விஜய் ரூபானி தனது நண்பர்களின் நிறுவனங்களின் கருவிகளை விற்க உதவுவதாகவும் அமித் சாவ்டா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமன் 1 வென்டிலேட்டர்கள் கருவிகளை பயன்படுத்த முறையாக வல்லுநர் குழுவின் ஆலோசனை பெறப்பட்டதா என்று கேள்வி எழுப்பிய அவர், அகமதாபாத் மருத்துவமனையில் இக்கருவிகளை பயன்படுத்தியதால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்றும் கேட்டுள்ளார்.
மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஏப்ரல் 5ஆம் தேதியன்று தமன் 1 வென்டிலேட்டர் கருவிகளின் பயன்பாடை தொடங்கி வைத்த முதல்வர் விஜய் ரூபானி, கொரோனா வைரஸ் நோயாளிகள் விரைவில் குணமடைய இது உதவும் என்று கூறினார்.
எனினும், அப்போதில் இருந்து குஜராத்தில் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.இந்நிலையில் தமன் 1 கருவிகள் தொடர்பாக அகமதாபாத் பொது மருத்துவமனை மருத்துவர்கள் துணை முதல்வர் நிதின் படேலுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.
அதாவது, தமன் 1 வென்டிலேட்டர்கள் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கடினமாக இருப்பதாகவும், அதனால் அரசு வேறு 100 புதிய வென்டிலேட்டர்களை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எதிர்பார்த்த பலனை தமன் 1 வென்டிலேட்டர்கள் வழங்கவில்லை என அதே மருத்துவமனையில் மருத்துவ கண்காணப்பாளர் மே 15ஆம் தேதியன்று கடிதம் எழுதியுள்ளார்.
கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் ஆரம்ப கட்டத்தில் வேண்டுமானால் தமன் 1 கருவிகள் உதவலாம், ஆனால், தீவிர நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு உயர்நிலை வென்டிலேட்டர் கருவிகள் தேவைப்படுவதாக அம்மருத்துவமனையில் டீன் பிரபாகர் பிபிசி குஜராத்தி சேவையிடம் தெரிவித்தார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

தமன் 1 வென்டிலேட்டர் கருவிகள் குறைபாடுகள் நிறைந்ததா?
"தமன் 1 வென்டிலேட்டர் கருவிகள் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் உதவியாக இருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால், அது இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். தீவிர நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு இதனால் பலனில்லாமல் இருக்கலாம்" என்கிறார் மருத்துவர் பிரபாகர்.
எனினும் இந்த வென்டிலேட்டர் கருவிகள் ஒரு அவசர முயற்சி என்று கூறும் சில மருத்துவ வல்லுநர்கள், இதனை பயன்படுத்தவே தயாராக இல்லை.
அகமதாபாத்தின் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களில் ஒருவரும், அகமதாபாத் மருத்துவ அமைப்பின் அதிகாரியுமான மருத்துவர் பிபின் படேல் கூறுகையில், தமன் 1 கருவிகள், உண்மையில் வென்டிலேட்டர் கருவிகளாகவே இல்லாமல் இருக்கலாம் என்கிறார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், தமன் 1 வென்டிலேட்டர் கருவிகளில் ஆக்சிஜன் மீட்டர் இல்லை. மேலும், ஈரப்பதமான ஆக்சிஜன் வருவத்றான அமைப்பும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.
"ஈரப்பதம் உள்ள ஆக்சிஜன் நுரையீரலுக்கு கிடைக்கவில்லை என்றால், நுரையீரல் காய்ந்துபோய்விடும். ஆனால், இதற்கான எந்த வசதியும் அமைப்பும் தமன் 1 வென்டிலேட்டர் கருவிகளில் இல்லை. அப்படி இருக்கையில் ஒரு நோயாளியை நீண்ட நேரம் இந்தக் கருவிகளில் வைத்திருக்க முடியாது" என்று பிபின் படேல் கூறுகிறார்.
மேலும் இந்தக் கருவிகள் அவசர நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களின் உயிர் அபாயத்தில் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
"தொழில்நுட்பக் கருவிகள் 2017 விதிகளின் படி, தமன் 1 வென்டிலேட்டர்கள் தொழில்நுட்ப கமிட்டி மற்றும் மருத்துவ கமிட்டியின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும். அரசாங்கமும் இதற்கு முறையாக ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் இதனால் சற்று உதவிகள் இருக்கலாம், ஆனால் இதனை மருத்துவர்கள் சார்ந்திருக்க முடியாது" என்றும் பிபின் படேல் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












