ஹைட்ராக்ஸிகுளோராகுயின்: கொரோனாவுக்கு டிரம்ப் பரிந்துரைக்கும் மருந்தால் 'மரணிக்க வாய்ப்பு அதிகம்'

Trump drug hydroxychloroquine raises death risk in Covid patients, study says

பட மூலாதாரம், Getty Images

மலேரியாவிற்கு வழங்கப்படும் மருந்தான ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை கொரோனா நோய் தொற்று நேயாளிகளுக்கு அளிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும், மாறாக அதனால், நோயாளிகள் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

லேன்செட் அறிவியல் சஞ்சிகையில் இந்த ஆய்வு பதிப்பிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை தாம் எடுத்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்தை உட்கொண்டால் இருதயப் பிரச்சனைகள் வரும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தாலும், தாம் எடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவ ஆலோசனையை புறக்கணித்து மக்கள் இதனை எடுத்துக் கொள்ளுமாறு டிரம்ப் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்து மலேரியாவின் சிகிச்சைக்காக பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஆர்திரிடிஸ் போன்ற பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால், கொரோனா தொற்றாளர்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ள இதுவரை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் ஏதும் பரிந்துரைக்கவில்லை.

96,000 கொரோனா நோயாளிகளை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 15,000 பேருக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தோ அல்லது இதை ஒத்த மருந்தோ அளிக்கப்பட்டது.

இந்த மருந்து அளிக்கப்பட்டவர்கள் மற்ற கொரோனா நோயாளிகளை விட மருத்துவமனைகளில் அதிகம் இறக்க வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு இருதய பிரச்சனைகள் ஏற்படவும் அதிக வாய்ப்பிருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை எடுத்துக் கொண்டவர்களின் இறப்பு விகிதம் 18 சதவீதமாக இருந்தது. இதை ஒத்த குளோரோகுயினை உட்கொண்டவர்களின் இறப்பு விகிதம் 16.4 சதவீதமாக இருந்தது.

hydroxychloroquine raises death risk in Covid patients

பட மூலாதாரம், Reuters

இந்த மருந்துகளை ஆன்டிபயோடிக் அதாவது நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுடன் சேர்ந்து உட்கொண்டவர்களில் இறப்பு விகிதம் மேலும் அதிகமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

மருத்துவப் பரிசோதகளுக்கான பயன்பாட்டை தவிற, வேறு யாரும் இந்த மருந்தை எடுத்துக் கொள்ளக்கூட என்று ஆய்வாளர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.

எனினும் இதனால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நம்புவதால், தாம் எடுத்தக் கொண்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஹைட்ராக்ஸிகுளோராகுயின் கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: