அர்னாப் கோஸ்வாமி வழக்கு: முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு - நடந்தது என்ன?

பட மூலாதாரம், Alamy
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவதூறாகப் பேசியதாக பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்யக்கோரியும், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும் அர்னாப் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.
முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது என்றும் கூறி உள்ளது.
அர்னாப் மீது நடவடிக்கை எடுக்க மூன்று வார காலம் இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

பட மூலாதாரம், Getty Images
நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தனர்.
நீதிபதிகள் கூறியது என்ன?
இந்திய அரசமைப்பு சட்டப்பிரிவு 32, கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கிறது. ஊடகவியலாளர்கள் அதிகாரத்திடம் உண்மை பேச முடிந்தால்தான் பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும். ஆனால் அதே நேரம் சுதந்திரம் என்பது கட்டுக்கு அடங்காதது அல்ல. தொடர் புகார்கள் விளைவுகளை ஏற்படுத்தும் என நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.
அரசமைப்பு சட்டப்பிரிவு 32க்கு கீழ் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கை விசாரிக்க மும்பை போலீஸுக்கு உரிமை இருக்கிறது. இந்த வழக்கை ரத்து செய்ய மனுதாரர் கோரினால், அவர் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடட்டும் என நீதிபதிகள் கூறி உள்ளனர்.
அர்னாப் மீது நடவடிக்கை எடுக்க மூன்று வார காலம் இடைக்காலத் தடையை நீதிபதிகள் விதித்தனர்.
ஏன் இந்த வழக்கு?
மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் இந்து துறவிகள் இருவர் கும்பல் கொலை செய்யப்பட்டது தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், இந்த கும்பல் கொலையைக் கண்டித்து ஏன் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்னும் கருத்து தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் என்று கேள்வியெழுப்பினார் அர்னாப்.

பட மூலாதாரம், FACEBOOK
சோனியா காந்தி பற்றி தனிப்பட்ட கருத்துகள் சிலவற்றையும் அர்னாப் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.
இதன்பின் சோனியா காந்தியை அவதூறாகப் பேசியதாக பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினரால் புகார்கள் அளிக்கப்பட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












