உம்பான் புயல்: தமிழகத்துக்கு பாதிப்பா? - பாலச்சந்திரன் கூறுவது என்ன?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே நாளை (மே 20) மாலை உம்பான் புயல் கரையைக் கடக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி உம்பான் புயல் மேற்குவங்க மாநிலத்தில், கொல்கத்தா கடற்கரை பகுதியில் 630 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

உம்பான் புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை மேற்குவங்க பகுதிகளில் கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.

''நாளை கடுங்காற்று வீசக்கூடும் என்பதால், மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் கொந்தளிப்பு இருக்கும். இந்த இரண்டு பகுதிகளுக்கும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம். இந்த புயல் கரையைக் கடக்கும்போது கடும் காற்று, சூறாவளிக்காற்று வீசக்கூடும். தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் மின்சார சேவைகள் துண்டிக்க வாய்ப்புள்ளது. ஆனால் வங்கதேச பகுதிகளில்தான் இந்த பாதிப்புகள் இருக்கும். தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை,''என்றார் பாலச்சந்திரன்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

''காற்று நகர நகர, தென்னிந்தியப் பகுதிகளில், குறிப்பாக, தமிழகம் மற்றும் ஆந்திரா பிரதேச மாநிலங்களில் படிப்படியாக வெய்யில் அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலையை இந்த மாநிலங்களில் நிலவும்,''என்கிறார் பாலச்சந்திரன்.

புயலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

முன்னதாக, இது "மிகக் கடுமையான" புயலாக தீவிரமடையவும் வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் புதன் கிழமை அன்று தீவிரமாகச் சூறாவளி வீசும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் இந்த இரண்டு மாநிலங்களிலும் 20 மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: