விசாகப்பட்டினத்தில் பாதுகாப்புக் கவசங்கள் கோரிய மருத்துவருக்கு மனநல பாதிப்பா?

விசாகப்பட்டினம் மருத்துவர்

பட மூலாதாரம், UGC

    • எழுதியவர், வி.ஷங்கர்
    • பதவி, பிபிசிக்காக

விசாகப்பட்டினத்தில் மருத்துவர் ஒருவரை காவலர் ஒருவர் கால்களால் உதைத்து கீழே தள்ளி விடுவது போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது.

அந்த காணொளியில் இருக்கும் மருத்துவரின் பெயர் கே.சுதாகர்; விசாகபட்டினத்தில் உள்ள நரசிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து நிபுணராக பணிபுரிகிறார். மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் என்-95 வகை முகக்கவசங்கள் அரசு மருத்துவர்களுக்கு போதுமான அளவில் வழங்கப்படவில்லை என மருத்துவர் சுதாகர் கடந்த மாதம் குற்றம் சாட்டினார். எனவே இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மருத்துவர் சுதாகரின் கைகள் பின்னிருந்து கைப்பட்ட நிலையில், காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல அவரை அடித்து ரிக்ஷாவில் ஏற்றிய அந்த நிகழ்வை பலரும் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மருத்துவரிடம் இவ்வாறு கடுமையாக நடந்து கொண்ட காவலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விசாகப்பட்டினம் காவல் துறை ஆணையர் ஆர்.கே. மீனா தெரிவித்தார்.

மருத்துவர் ஒருவர் இவ்வாறு நடத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, சிபிஐ மற்றும் பிற கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழலை இது பிரதிபலிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

என்ன நடந்தது ?

விசாகப்பட்டினம் மருத்துவர்

பட மூலாதாரம், UGC

உண்மையில் நடந்தது கைது நடவடிக்கை மட்டும் தானா? ஏன் மருத்துவர் சுதாகர் துன்புறுத்தப்பட்டார்? அவர் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்ள பிபிசி தெலுங்கு சேவை விசாகப்பட்டினம் காவல் துறை ஆணையரிடம் பேசியது.

காவல் துறை ஆணையர் ஆர்.கே. மீனா கூறுகையில், ''ஆகாயபல்லெம் தேசிய நெடுஞ்சாலையில், ஒருவர் மது அருந்திவிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக நடந்துக்கொள்கிறார். அங்கிருப்பவர்களை தகாத வார்த்தைகளில் பேசுகிறார் எனவே காவல் துறையினர் அவரை கட்டுப்படுத்த வேண்டும் என அழைப்பு வந்தது. எனவே காவல் துறையினர் சிலர் தேசிய நெடுஞ்சாலைக்கு விரைந்து சென்றபோது அங்கு பணி இடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர் சுதாகர் இருந்தது தெரியவந்தது. அவர் மது பாட்டில் ஒன்றை சாலையில் வீசினார். அங்கிருந்த பாரிகார்டுகளை அப்புறப்படுத்தி, பொது மக்களுக்கு இடையூறான செயல்களில் ஈடுபட்டார். மேலும் காவல் துறையினர் அங்கு செல்லும் முன்பே பொது மக்கள் அவரின் கைகளை கட்டி இருந்தனர," என்கிறார் மீனா.

"காவல் துறையினரிடமும் மருத்துவர் சுதாகர் மோசமாக நடந்துகொண்டார். காவலரின் அலைபேசியை வாங்கி தூக்கி எறிந்துள்ளார்.'' என காவல் ஆணையர் மீனா மேலும் தெரிவித்தார்.

''எனவே காவல் துறையினர் அவரை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக கிங் ஜார்ஜ் மருத்துவமனை கொண்டு சென்ற போது , அவரை மனநல மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையின் அடிப்படையிலேயே மனநல மருத்துவமனையில் மருத்துவர் சுதாகர் அனுமதிக்கப்பட்டார் .'' என ஆர்.கே. மீனா தெரிவிக்கிறார்.

ஆனால் மருத்துவர் சுதாகர் அரசாங்க அதிகாரிகளிடம் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட பல கேள்விகளை எழுப்பியதால் அவர் பழி வாங்கப்பட்டுள்ளார் என எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

மருத்துவர் சுதாகர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அவர் இன்னும் இரண்டு வாரங்களுக்கு கண்காணிப்பில் இருக்க வேண்டும் என கூறுகின்றனர். காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறது.

ஆனால் மற்றொருபுறம், '' தனக்கு எந்தவித மனநல பாதிப்பும் இல்லை, தனது இடை நீக்கம் திரும்ப பெறப்பட வேண்டும், தான் மீண்டும் பணியில் சேர வேண்டும்'' என மருத்துவர் சுதாகர் கூறுகிறார்.

யார் இந்த மருத்துவர் ? நடந்தது என்ன?

அரசு மருத்துவரான சுதாகர் கடந்த ஏப்ரல் 2ம் தேதி பணியில் இருந்தபோது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நாள் காவல் துறை அதிகாரிகளும் உள்ளூர் அரசியல் தலைவர்களும் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மருத்துவர் சுதாகர் கலந்துகொண்டனர்.

Banner image reading 'more about coronavirus'

ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து பேசப்பட்டபோது, மருத்துவர் சுதாகர் பாதுகாப்பு ஆடைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதை சுட்டிக்காட்டினார். மேலும் ஆளும் அரசாங்கத்தின் மீது அடுக்கடுக்கான சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். எனவே அந்த ஆலோசனைக்கூட்டத்தில் இருந்தே மருத்துவர் சுதாகர் வெளியேற்றப்பட்டார்.

பிறகு வெளியில் வந்து ஊடகத்தின் முன் அதே குற்றச்சாட்டுகளை மருத்துவர் சுதாகர் முன்வைத்துள்ளார். மேலும் ஒரே முக கவசத்தை 15 நாட்கள் பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கூறியதாகவும் குறிப்பிட்டார்.

"அரசாங்கம் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளார்களுக்கு போதுமான பாதுகாப்பு கவச ஆடைகளை வழங்கவில்லை. ஒரே மாஸ்கை 15 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கோருகின்றனர். எங்களின் உயிரை பணயம் வைத்து எவ்வாறு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும்" என சுதாகர் தெரிவித்தார்.

அவரின் வீடியோ வைரலானது; மேலும் அதுகுறித்து விசாரிக்க மாநில அரசு உத்தரவிட்டு, சுதாகர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்தது. "ஏதாவது பிரச்சனை இருந்தால் சுதாகர் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும். அவரின் கூற்று சுகாதாரப் பயணியாளர்களை அவமதித்துவிட்டது." என அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.

ஆனால் சில நாட்களுக்கு பிறகு தான் தவறு செய்து விட்டதாக ஆந்திர முதல்வரிடமும் மன்னிப்பு கோரி காணொளி ஒன்றை வெளியிட்டார் ஆனால் இதனால் அவரின் பணியிடை நீக்கம் திரும்ப பெறப்படவில்லை.

மருத்துவர் சுதாகர் என்ன சொல்கிறார் ?

"எனது கடனை செலுத்த வங்கிக்கு 10லட்சம் ரூபாய் எடுத்து சென்று கொண்டிருந்தேன். போலீஸார் எனது வழியில் இருமுறை என்னை தடுத்து நிறுத்தினர். என்னை அடித்தனர். எனது செல்ஃபோன் மற்றும் பணத்தை பிடிங்கிக் கொண்டனர். சில என்னை அலைப்பேசி அழைப்பில் மிரட்டுகின்றனர். சிலர் நான் ஐந்து ரூபாய் மாஸ்க் சர்ச்சையில் சிக்கிக் கொண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். இன்று போலீஸார் என்னை தாக்கினர்." என போலீஸாரின் பிடியில் இருந்த சுதாகர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மேலும் தனக்கு இன்னும் 5 ஆண்டுகள் மருத்துவமனையில் பணிபுரிய அனுமதியுள்ளது, எனவே இடை நீக்கத்தை திரும்ப பெறவேண்டும் என்றும் மருத்துவர் சுதாகர் கூறுகிறார்.

ஆனால் நெடுஞ்சாலையில் அவர்தான் தகராறு செய்தார் என்கிறது போலீஸ் தரப்பு.

தற்போது சுதாகர் அரசு மனநல மருத்துவத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இரண்டுவார சிகிச்சை தேவை என மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவிக்கிறார்.

Banner image reading 'more about coronavirus'

அரசை கேள்வி கேட்டபிறகு தனது மகனுக்கு பல்வேறு பிரச்சனைகள் வருவதாக சுதாகரின் தாயார் காவேரி தெரிவிக்கிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், "ஒரு மருத்துவராக என் மகனுக்கு நல்ல பெயர் உள்ளது. ஆனால் அவன் அரசு மீது குற்றம் சுமத்திய தினத்திலிருந்து அவன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறான். யாரேனும் என்னை அழைத்து என் மகன் குறித்து கேட்டால் எனது வருத்தமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக அவன் மன அழுத்ததிற்கு ஆளாகியுள்ளான். அவனது மனநலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. அவனை வீட்டிற்கு அனுப்புமாறும், அவனது பணியிடை நீக்கத்தை ரத்து செய்யுமாறும் அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்தார்.

ஒரு தலித் மருத்துவர் என்பதாலேயே, அரசாங்கத்தால் சுதாகர் பழிவாங்கப்படுகிறார் என தெலுங்கு தேசம் கட்சி தனது வாதத்தை முன்வைக்கிறது.

இது தொடர்பாக ஆளும் ஒய்.எஸ். ஆர் கட்சியினர் கூறுகையில், "மருத்துவர் சுதாகர் தெலுங்கு தேசம் கட்சி சார்ப்பு உள்ளவர். எதிர்க்கட்சியின் ஆடு போல செயல்படுகிறார்." என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர்.

அரசாங்க ஊழியர்கள் தங்கள் கடமையை மேற்கொள்ள தடையாக இருந்ததற்கும், காவல் துறையினரிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கும் மருத்துவர் சுதாகர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: