You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐஆர்சிடிசி முன்பதிவு தொடக்கம்: சென்னைக்கு ரயில் எப்போது? - விரிவான தகவல்கள்
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,மே 12-ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையைத் துவங்க உள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சிறப்பு சேவையாக இயக்கப்படும் இந்த ரயில்கள், டெல்லியில் இருந்து ஹெளரா, பாட்னா, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், அகமதாபாத் உள்ளிட்ட நாட்டின் பதினைந்து நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ஒவ்வொரு வழிதடத்திற்கும் இரண்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் மே 13-ம் முதல் இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை இந்த ரயில் இயக்கப்படும். மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து புது டெல்லிக்கு இயக்கப்படும் ரயில், மே 15-ம் தேதி முதல் இயங்கும். இந்த ரயிலானது ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும்.
இந்த ரயில், விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், போபால், ஜான்சி,ஆக்ரா போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
ஏற்கனவே, இருபதாயிரம் ரயில் பெட்டிகள் கொரோனா சிறப்பு வார்டுகளாக தயார்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் திரும்பத் தனியாக ரயில்கள் இயக்கப்படும் நிலையில், மீதமுள்ள ரயில் பெட்டிகளைப் பொருத்து மேலும் பல சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவினை, இன்று மாலை நான்கு மணிக்கு ஐஆர்சிடிசி இணையதளத்தில் செய்யலாம்.
மேலும், ரயில் நிலையங்களில் இருக்கும் முன்பு பதிவு மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும், இணையத்தில் பதிவு செய்யப்பட்ட டிக்கெட் இருந்தால் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் பயணிகள் நுழைய முடியும் எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.