கொரோனா வைரஸ்: ஜெர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் நோய்த்தொற்று பரவல் மற்றும் பிற செய்திகள்

ஜெர்மனியில் முடக்க நிலை தளர்த்தப்பட்டு சில நாட்களே கடந்துள்ள நிலையில், அங்கு கட்டுக்குள் வந்ததாக நம்பப்பட்ட நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.

கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட ஒரு நபரின் மூலம் அந்த நோய்த்தொற்று தற்போது ஒருவருக்கு மேல் பரவுவதாக ராபர்ட் கோச் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது.

அதாவது, ஜெர்மனியில் கொரோனா வைரஸின் பாதிப்பு மீண்டும் எழுச்சியடைய ஆரம்பித்துள்ளது என்று அர்த்தம்.

பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மனியில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையை முழுவதுமாக நீக்கக்கோரி கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள 16 மாகாணங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நாடு முழுவதும் விரிவான முடக்கநிலை தளர்வுகள் குறித்த அறிவிப்பை அந்த நாட்டின் சான்சலர் ஏங்கலா மெர்கல் வெளியிட்டார்.

இதன்படி, ஜெர்மனி முழுவதும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டதுடன், கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டன. மேலும், ஜெர்மனியின் பிரபல கால்பந்து தொடர் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சமீபத்திய நிலவரப்படி, ஜெர்மனியில் 1,69,218 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 7,395 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு தனியாக ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு நேற்று முன்தினம் (மே 9) அறிவித்தது. அதன்படி, தேநீர் கடைகள், அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் போன்றவை

திறக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 600க்கும் அதிகமானோர் பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 600க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதன் மூலம், தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் தமிழகத்தில் 669 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதில் 509 நபர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துவருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

செல்பேசி மூலம் தாய்க்கு பிரியாவிடை அளித்த பிபிசி தயாரிப்பாளர்

''என் தாய் உயிரிழப்பதற்கு சில மணி நேரம் முன்பு, அவருடன் வீடியோ கால் மூலம் உரையாடினேன். நான் அவரிடம் ஆறுதலாக பேசி அவரை தூங்க வைத்தேன். ஆனால் அவர் மீண்டும் எழமாட்டார் என நான் நினைக்கவே இல்லை.''

பிபிசி தயாரிப்பாளர் ஆன்ட்ரு வெப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தனது தாயை சென்று பார்க்க முடியவில்லை. அவரது தாய் இறப்பதற்கு முன்பு வீடியோ கால் மூலமாகவே பேசினார்.

புற்றுநோயுடன் போராடும் இந்தியாவின் 'கொரோனா போர் வீரர்'

ரமா சாஹு என்பவரை இந்திய அரசு கொரோனாவுக்கு எதிரானா போராளி என்று அழைக்கிறது. இந்த தொற்று சமயத்தில் உதவி செய்யும் மருத்துவ பணியாளர்களில் ஒருவர்தான் ரமா சாஹு. ஆனால் அவர் புற்றுநோயுடனும் போராடி வருகிறார் என பிபிசி ஹிந்தி சேவையைச் சேர்ந்த சுசிலா சிங் செய்தி தெரிவிக்கிறார்.

46 வயதான ரமா சாஹு தினமும் காலையில் கிழக்கு ஒரிசாவில் இருக்கும் ஒரு ஊரில் ஒவ்வொரு வீடாக சென்று தகவல் சேகரித்து அவர்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் அளித்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: