செல்பேசி மூலம் தாய்க்கு பிரியாவிடை அளித்த பிபிசி தயாரிப்பாளர் - இறுதி நொடிகள்

''என் தாய் உயிரிழப்பதற்கு சில மணி நேரம் முன்பு, அவருடன் வீடியோ கால் மூலம் உரையாடினேன். நான் அவரிடம் ஆறுதலாக பேசி அவரை தூங்க வைத்தேன். ஆனால் அவர் மீண்டும் எழமாட்டார் என நான் நினைக்கவே இல்லை.''

பிபிசி தயாரிப்பாளர் ஆன்ட்ரு வெப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தனது தாயை சென்று பார்க்க முடியவில்லை. அவரது தாய் இறப்பதற்கு முன்பு வீடியோ கால் மூலமாகவே பேசினார்.

இதே போல கொரோனா வைரஸ் முடக்க நிலையின்போது உலகின் பல இடங்களில் நோயுற்ற தங்கள் உறவினர்களை மருத்துவமனைகளுக்கோ அல்லது வீடுகளுக்கோ சென்று பார்க்க முடியாமல் பலர் தவிக்கின்றனர்.

பிபிசி செய்தி தயாரிப்பாளர் ஆண்ட்ரு வெப் தனது தாய் காத்லீன் வெப் உடன் இணையத்தின் உதவியோடு தொடர்பில் இருந்தது எப்படி என்று இங்கு பகிர்ந்துக்கொள்கிறார்.

நமக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து நாம் தூரத்தில் இருந்தாலும் இணையம் மற்றும் செயலிகளை பயன்படுத்தி நாம் எப்படி அவர்களை கவனித்துக்கொள்ளலாம் என்பது தொடர்பில் ஆண்ட்ரூ சில அறிவுரைகளை வழங்குகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவிய மார்ச் மாதத்தில் அன்னையர் தினத்தன்று இறுதியாக ஆன்ட்ரூ தனது தாயை சந்தித்துள்ளார். அதன் பிறகு தங்கள் பெற்றோர்களின் திருமண நாள் கொண்டாட்டத்தையும் ஆன்ட்ரூ மற்றும் அவரது சகோதரர் லாரன்ஸ் இணைந்து ஒத்திவைத்துள்ளனர்.

பிரிட்டனில் முடக்கநிலை அமல்படுத்தப்படுவதற்கு முன்பே ஆன்ட்ரூ தனது பெற்றோர்களை பாதுக்காக்க முடிவு செய்து எல்லா கொண்டாட்டங்களையும் தவிர்த்துள்ளார்.

ஏற்கனவே ஆன்ட்ருவின் தாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை பெர்னிக்கு 75 வயது. இருப்பினும், தன் மனைவியைப் பார்க்க ஆன்ட்ரூவின் தந்தை மருத்துவமனை சென்றுள்ளார்.

பல நிறங்களில் தயாரிக்கப்பட்ட முக கவசம் மற்றும் கை உறைகளை ஆண்ட்ரூ தனது தந்தைக்கு வழங்கினார். அந்த முகக்கவசத்தை அணிந்தபடி பெர்னி தனது மனைவியை பார்க்க சென்றுள்ளார்.

கொரோனா பரவுவதால், மருத்துவமனையில் உள்ள அனைத்து நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள் பாதுகாப்பு கருதி தன் தந்தையைத் தவிர வேறு யாரும் மருத்துவமனைக்கு செல்லவில்லை என்கிறார் ஆண்ட்ரு.

''வாட்ஸ்ஆப் மூலமாகவே என் தாயிடம் பேசிவந்தேன். அருகில் இருந்தபடி என் தந்தை ஃபோனை உயர்த்திப்பிடிப்பார். அதன் மூலம் எங்கள் தாயால் எங்களையும் பார்க்க முடியும்'' என்கிறார் ஆண்ட்ரூ.

லண்டன் மருத்துவமனையில் இருந்து ஹாங்காங்கில் உள்ள பல உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் காணொளி அழைப்புகள் மூலம் ஆன்ட்ரூவின் தாய் பேசியுள்ளார்.

ஆனால் லண்டனில் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டவுடன் ஆண்ட்ரூவின் தந்தையால் தினமும் மருத்துவமனை செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவரது தாயின் உடல் நிலை மோசமடைந்ததால் அவரால் ஃபோனை எடுத்து நீண்ட நேரம் பேச முடியாமல் போய்விட்டது.

அதன் பிறகு மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் உதவியுடன் வாட்ஸ்ஆப் அழைப்புகளை ஏற்க செய்து பிறகு தாயாருடன் பேசியதாக ஆண்ட்ரூ வெப் கூறுகிறார்.

''ஒரு கட்டத்தில் என் தாயாரிடம் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் தெரிந்ததால், மருத்துவமனையில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். அப்போதும் செவிலியர்களின் உதவியுடன் நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தோம், ஆனால் பிறகு ஃபோனில் பழுது ஏற்பட்டது தெரியவந்தது.''

அந்த ஃபோன் உடைந்ததால் பழுதாகியுள்ளது. எனவே வேறொரு புது ஃபோன் வாங்கி அதில் சில செயலிகளை பயன்படுத்ததிட்டமிட்டோம்.

ஸ்கைப்பில் உள்ள ஆட்டோ ஆன்சர் ஃபங்ஷனை பயன்படுத்த திட்டமிடனர்.

மேலும் AirDroid என்ற செயலியை பயன்படுத்தி தங்கள் தாயிடம் கொடுத்த ஃபோனை வீட்டில் இருந்தபடியே இயக்க முயற்சித்துள்ளனர். இந்த செயலிகள் மூலம் அவரது தாய் எப்போது பேசுகிறாரோ அப்போது கேட்டுக்கொள்ள முடியும்.

மேலும் இந்த ஃபோன் மூலம் நேரடியாக தங்கள் தாயின் முகம் தெரியுமாறு பொருத்தி வைக்க ஆண்ட்ரூ ஒரு ஃபோன் ஸ்டாண்டையும் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார் ஆனால் அந்த டிரைப்பாடு கைக்கு கிடைக்கும்போது அவரின் தாய் இறந்துவிட்டார்.

இறுதி நொடிகள்

''இறுதியாக ஸ்கைப் காணொளி அழைப்பு மூலம் என் அம்மா என்னிடம் விடைபெற்றார், என் சகோதரர் மற்றும் அவரின் பேரப்பிள்ளைகளுடனும் பேசினார். அமெரிக்காவில் உள்ள எனது ஆறு வயது மகளுடனும் என் தாய் இறுதியாக பேசினார்.

நவீன ஃபோன் ஒன்று இல்லை என்றால் இவை அனைத்தும் சாத்தியமில்லாமல் போயிருக்கும்.

மருத்துவமணையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலேயே என் அப்பா இருந்தார். ஆனால் 50 வருடம் இணைந்து கூடவே பயணித்த தன் மனைவியை இறுதியாக ஃபோன் மூலமாகவே காணமுடிந்தது.

அங்கிருந்த செவிலியர்கள் எவ்வாறு பணியாற்றுகின்றனர் என்பதையும் ஃபோன் மூலம் கண்டு வியந்தேன். உடலில் வலி ஏற்பட்டு இரண்டு முறை என் தாய் செவிலியர்களுக்கு அழைப்பு விடுத்தார். இரண்டு முறையும் அவர்கள் உடனே என் அம்மாவின் அருகில் வந்து சிகிச்சை அளித்தனர்.

இறுதியாக 15 நிமிடங்கள் நான் என் அம்மாவுடன் பேசினேன். அவருக்கு பிடித்த அத்தனை பேரின் பெயர்களையும் அவர் அழைத்துக்கொண்டிருந்தார். அவரின் இறுதி உறக்கம் அது. அதன் பிறகு எழுந்துகொள்ளவே இல்லை''. என்கிறார் ஆண்ட்ரு.

காணொளியில் இறுதி சடங்குகள்

சில வாரங்களுக்கு பிறகு ஆண்ட்ருவின் தந்தையும், அவரது குடும்பத்தினரும் வீடியோ கான்ஃப்ரான்ஸ்சிங் மூலம் இறுதிச் சடங்குகளையும் பார்த்தனர். ஓர் இரங்கல் கூட்டமும் நடத்தப்பட்டது.

பிரிட்டனில் 10 பேர் வரை மட்டுமே இறுதிச் சடங்குகளில் கலந்துக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டதால், சிலர் மட்டும் இறுதி சடங்கில் கலந்துக்கொண்டனர். உறவினர் மாஸ்க் அணிந்தபடி கலந்துக்கொண்டனர்.

''இறுதி சடங்கை ஜூம் செயலியின் உதவியுடன் என்னால் பார்க்க முடிந்தது. அந்த காணொளியை நான் பதிவு செய்துள்ளேன்''.

பிறகு இந்த பதிவுகளே என்னை சோகத்தில் மூழ்கடிக்க செய்யும் என நான் அறிந்தேன். அதே சமயம் அந்த காணொளிகள்தான் ஆறுதலும் கூட.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: