You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: தமிழகம் முழுவதும் தேநீர் கடைகள் இயங்க அனுமதி: ஊரடங்கில் புதிய தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கு தளர்வுகளில் ஒரு பகுதியாக தேநீர் கடைகள் செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகரத்திற்கு தனியாகவும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்குத் தனியாகவும் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. நோய் கட்டுப்பட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தளர்வுகள் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை பத்து மணிமுதல் இரவு ஏழு மணி வரை செயல்படும்.
சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர) தேநீர்க் கடைகள் பார்சல் சேவைக்கு மட்டும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தேநீர்க் கடைகளில் சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
மேலும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கடையில் வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைப்பிடிக்கத் தவறும் தேநீர் கடைகள் உடனடியாக மூடப்படும்.
பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்படும்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.
அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுவதும், போதுமான கிருமிநாசினிகளைப் பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதையும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையாளர்களும், காவல் கண்காணிப்பார்களும் உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமலிலிருந்து வருகின்றது. கடந்து மே 2ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டு முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைகளின் படியும், பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: